இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், மேல்நிலைப் பள்ளிகளை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. அரசு - தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தில், பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், "12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நாடு முழுவதும் 6,000 மாதிரிப் பள்ளிகள் துவக்கப்படும். இதில், 2,500 பள்ளிகள், அரசு - தனியார் பங்களிப்புடன் துவக்கப்படும்' என, தெரிவித்திருந்தார். மாதிரிப் பள்ளிகள் துவங்கும் திட்டத்துக்காக, 2012-13ம் நிதியாண்டில், 972 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வி பெறும் வகையிலும், இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு - தனியார் பங்களிப்பு:அரசு - தனியார் பங்களிப்புடன் துவங்கப்படவுள்ள 2,500 மேல்நிலை பள்ளிகளை உடனடியாக துவங்க வேண்டும் என்பதில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்தில் இணைய விருப்பம் உள்ள நிறுவனங்கள், தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும்படி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
திட்ட அறிக்கை:இந்த திட்டம் குறித்தும், திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள் குறித்தும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், திட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளி அமைப்பதற்கான நிலம், பள்ளி வடிவமைப்பு, மேம்பாடு, நிர்வாகம் ஆகிய பொறுப்புகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தது. பள்ளி அமைப்பதற்கான உள்கட்டமைப்பு செலவில், 25 சதவீத மானியம், அரசு சார்பில் அளிக்கப்படும். மேலும், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது உள்ளிட்ட அன்றாடச் செலவுகளை, அரசே அளிக்கும்.கல்வித் துறையில் அனுபவம் இல்லாத நிறுவனங்களும், இந்த திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். பள்ளிகளை துவங்க விரும்பும் நிறுவனங்களின் சொத்து மதிப்பு 25 கோடி ரூபாய் அளவுக்கு இருக்க வேண்டும். மூன்று பள்ளிகள் வரை துவங்குவதற்கு, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய வேண்டும்.
ரூ. 25 லட்சம் டெபாசிட்:மூன்று பள்ளிகளுக்கு மேல் துவங்க வேண்டுமானால், ஒரு பள்ளிக்கு தலா 25 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். ஏற்கனவே, ஒரு சி.பி.எஸ்.இ., பள்ளியை நடத்தி வரும் கல்வி நிறுவனம், அரசு - தனியார் பங்களிப்புடன் துவங்கப்படவுள்ள மூன்று பள்ளிகளை நடத்தலாம்.இவ்வாறு திட்ட அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக