வியாழன், 5 ஏப்ரல், 2012

ஜெயலலிதா பற்றி அமெரிக்காவுக்கு பன்னீர்செல்வம் தெரிவித்த உண்மை!

Viruvirupu
அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு தனியாக சிந்தனை ஏதும் கிடையாது என்று தைரியமாக விளக்கம் கொடுத்திருக்கிறார், நிதியமைச்சரும், அ.தி.மு.க.-வில் #2 என்று கருதப்படும் நபருமான ஓ.பன்னீர்செல்வம். ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்றாலும், தாம் பூச்சியம் என்பதை சொல்வதற்கும் ஒரு ‘தில்’ வேண்டும்.
அது இவரிடம் இருப்பது, தமிழகம் செய்த அதிஷ்டம்.
பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளித்துப் பேசும்போதே, அ.தி.மு.க.வில் தாம் உட்பட, சக அமைச்சர்களின் ability and capability பற்றி தெளிவாக போட்டு உடைத்திருக்கிறார் இந்த தைரியசாலி அமைச்சர்.
அமைச்சர் தனது பேச்சை ஆரம்பித்தபோதே அதிர வைக்கும் ஏவுகணை ஒன்றை வீசினார். “பூகோள பாடத்தில் வேண்டுமானால் இந்தியாவின் தலைநகர் டில்லி என்று இருக்கலாம். ஆனால், அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் தலைநகர் இனி சென்னைதான். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது, நம்ம அம்மாதான்” என்று அவர் கூறியதற்கு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நன்றிக் கடிதம் அனுப்பி வைக்க கூடும்.
“உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது, நம்ம அம்மாதான்” என்று சொல்லாமல், இந்தியாவுடன் அவர் நிறுத்திக் கொண்டதால், அமெரிக்க ஜனாதிபதியின் நன்றியை, அவர்களது தூதரகம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ். நினைத்திருந்தால்,  அமெரிக்காவின் வல்லரசு கனவை ஒரு வாக்கியத்திலேயே நசுக்கியிருக்க முடியும்.
இந்த விஷயத்தில் அமைச்சரையும் குறைசொல்ல முடியாது. அமெரிக்கா இருப்பது ஆந்திராவுக்கு சற்று அப்பால் என்று நினைத்தே அவர் சொல்லியிருக்கவும் சான்ஸ் உண்டு. அமெரிக்கா வேறு ஒரு நாடு என்று யாராவது அவருக்கு சொல்லியிருந்தால், அம்மாவின் பவரை இந்தியாவுக்கு வெளியேயும் அவர் என்ஸ்டென்ட் பண்ணியிருக்க கூடும்.
“ஒருவரின் திறமையை எடைபோட வேண்டுமானால், முதலில் அவரைச் சுற்றியிருப்பவர்களின் திறமையை தெரிந்து கொள்ளுங்கள்” என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. ஒரு மாநிலத்துக்கே நிதியமைச்சராக இருப்பவருக்கு அது நிச்சயம் தெரிந்திருக்கும் அல்லவா? முதல்வரைச் சுற்றியுள்ள சக அமைச்சர்கள் பற்றி தெளிவான கணிப்பீடு ஒன்றை பகிரங்கமாக இதோ அறிவிக்கிறார் அமைச்சர்:
“எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. அம்மாவின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. அம்மாவின் நட்பே எங்கள் நட்பு. எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. அம்மாவின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. அம்மாவின் வழியே எங்கள் வழி”
இதைவிட அ.தி.மு.க. அமைச்சர்களைப் பற்றி நாலே வரியில் நறுக்கென்று வேறு யாராலும் கூறிவிட முடியாது.
நிதியமைச்சரின் இந்த தகமை பிரகடனத்தை, சட்டசபையில் இருந்த மற்றைய அமைச்சர்களும் மேஜையை தட்டி வரவேற்றது கண்கொள்ளாக் காட்சி. வேறு ஏதாவது நாட்டில் இது நடந்திருந்தால், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள்தான் கேலியாக மேஜையில் தட்டியிருப்பார்கள்!
எப்படியோ, நிதி அமைச்சர் கூறிய ‘பூச்சியம்’ ரேஞ்சில்தான் தாமும் உள்ளோம் என்று மற்றைய அமைச்சர்களும் கைதட்டி ஒப்புக் கொண்டார்கள் பாருங்கள்… அந்த வெள்ளை மனசு வேறு யாருக்கும் வராது. இவங்க ரொம்பவும் வெகுளிங்க சார்!

கருத்துகள் இல்லை: