சனி, 7 ஏப்ரல், 2012

ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம், சாம் பிட்ரோடா போட்டி?Sam pitroda

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமை களமிறக்க பாஜக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் என்று இப்போது பரபரப்பாக பேசப்படும் சாம் பிட்ரோடாவுக்கு போட்டியாக கலாம் நிறுத்தப்படக் கூடும் என்கிறார்கள்.

ஆனால் கலாம் இதற்கு ஒப்புக் கொள்வாரா தெரியவில்லை.
தற்போதைய குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.இதனையொட்டி நாட்டின் 16 வது புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதில் தங்களது ஆதரவு பெற்ற அல்லது தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை களமிறக்குவதில் காங்கிரஸ்,பா.ஜனதா உள்ளிட்ட தேசிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.


இதில் காங்கிரஸ் சார்பில் பிரபல தொழில்நுட்ப நிபுணரான சாம்பிட்ரோடா, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, மக்களவை சபாநாயகர் மீராகுமார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, கரண் சிங் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், சாம்பிட்ரோடாவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

சாம்பிட்ரோடாவுக்கு போட்டியாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே களமிறக்கலாமா என பாரதிய ஜனதா தலைவர்கள் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்று கூறப்படும் நிலையில், தங்களது ஆதரவு பெற்ற ஒரு நபர் ஜனாதிபதியாக இருந்தால் நல்லது என இவ்விரு கட்சிகளுமே கருதுகின்றன்.

இதில் பா.ஜனதாவுக்கும் கணிசமான மாநில கட்சிகளின் ஆதரவு உள்ளது. அவர்கள் ஆதரவுடன் அப்துல் கலாமை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று அக்கட்சித் தலைவர்கள் நம்புகிறார்கள். அதோடு கலாமை நிறுத்துவதன் மூலம் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பிரதிநிதிகளின் வாக்குகளை பெற முடியும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கும் என்று அக்கட்சியின் எம்.பி. மைத்ரேயன் ஏற்கனவே சூசகமாக தெரிவித்திருப்பது பாஜகவுக்கு தெம்பளித்துள்ளது.

ஆனால் இந்த திட்டத்தை அப்துல் கலாம் ஏற்பாரா என்பது தெரியவில்லை

கருத்துகள் இல்லை: