வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி

மிஸ்டு கால் மூலம் பார்க்காமலேயே காதலித்த பெண்ணை நேரில் சந்திந்தபோது, அழகாக இல்லை என்பதால் அவருடன் பஸ் ஸ்டாண்டில் வாக்குவாதம் செய்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மீனவேலியை அடுத்த வெள்ளையகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. கொத்தனார். இவரது மகள் அன்புமொழி(28). சீத்தப்பட்டியை சேர்ந்த மளிகை வியாபாரி கன்னியப்பா.

இவர் அன்புமொழியை கடந்த வருடம் 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 மாதத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அன்புமொழி தாய்வீட்டுக்கே வந்துவிட்டார்.

அதன்பின் துவரங்குறிச்சியில் உள்ள செல்போன் கடையில் அன்புமொழி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதத்துக்கு முன் மிஸ்டு கால் மூலம் பன்னாங்கொம்பு அருகே உள்ள பின்னத்தூரை சேர்ந்த ராமநாதன்(25) என்பவருடன் அன்புமொழிக்கு பழக்கம் ஏற்பட்டது. ராமநாதன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். பின்னர் ராமநாதனுடன் அன்புமொழி அடிக்கடி செல்போனில் காதல் மொழி பேசத்தொடங்கினார்.
நேரில் பார்க்காமலேயே காதலித்து வந்ததால் தன்னை வந்து பார்க்கும்படி ராமநாதனிடம் அன்புமொழி கூறியுள்ளார். ராமநாதனும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் உடனே வந்த தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் ராமநாதனிடம் அன்புமொழி கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமநாதன், தான் நேரில் வந்து சந்திப்பதாக கூறியுள்ளார். அதன்படி நேற்று மணப்பாறை பஸ் ஸ்டாண்டுக்கு வரும்படி அன்புமொழியிடம் ராமநாதன் கூறியுள்ளார்.

மேலும் இந்த விஷயம் பற்றி தனது பெற்றோருக்கும் ராமநாதன் தகவல் தெரிவித்து, அவர்களையும் பஸ் ஸ்டாண்டுக்கு வரச்சொல்லியுள்ளார்.
இதையடுத்து நேற்று மணப்பாறை பஸ் ஸ்டாண்டுக்கு வந்த ராமநாதன், செல்போனில் அன்புமொழியை தொடர்பு கொண்டார். அப்போது சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்த அன்புமொழி செல்போனை எடுத்து பேசியுள்ளார். அவரை நேரில் பார்த்த ராமநாதன் அதிர்ச்சியடைந்து, உடனே செல்போனை கட் செய்துவிட்டார்.
அவர் காதலியின் உருவத்தை கற்பனை செய்து வைத்திருந்ததற்கும், நேரில் பார்ப்பதற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்ததால் வெறுப்படைந்தார். அதேசமயம் தனது காதலன் போன் செய்து ஏன் கட் செய்தார் என்று தெரியாமல் குழப்பமடைந்து, அவரை தொடர்பு கொண்டபோது, ராமநாதன் செல்போனை சைலன்ட்டில் போட்டுவிட்டு எடுக்கவே இல்லை.
அந்த நேரத்தில் ராமநாதனின் பெற்றோர் அன்புமொழியிடம் செல்போனில் பேசி அடையாளம் கண்டு, என் மகனை மயக்கிவிட்டாயே என்று கேட்டு அவருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதை தூரத்திலிருந்து ராமநாதனும் அங்கு சென்று அன்புமொழியிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அன்புமொழி பஸ் ஸ்டாண்டில் உருண்டு புரண்டு கதறி அழுதார். இதனால் பஸ் ஸ்டாண்டே களேபரம் ஆனது.
தகவலறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் கும்மராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று அன்புமொழி, ராமநாதன், அவரது பெற்றோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். எஸ்ஐ கோமதி விசாரித்தபோது தான், அன்புமொழிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரியவந்தது.
இதனால் ராமநாதனை திருமணம் செய்து வைக்க சட்டத்தில் இடமில்லை என அன்புமொழியிடம் போலீசார் கூறினர். தகவலறிந்த அங்கு வந்த அன்புமொழியின் கணவர் கன்னியப்பாவும், இப்போது தனது மனைவி தன்னுடன் வந்தால் வாழ விரும்புவதாக கூறினார்.
ஆனால் திருமணம் செய்தால் ராமநாதனை தான் திருமணம் செய்வேன். கன்னியப்பாவுடன் செல்ல மாட்டேன் என கூறிவிட்டு, தனது சகோதரருடன் சென்றுவிட்டார். அப்பாடா தப்பிச்சேன் என்ற திருப்தியில் பெற்றோருடன் அங்கிருந்து நடையை கட்டினார் ராமநாதன்.

கருத்துகள் இல்லை: