புதன், 8 பிப்ரவரி, 2012

BABEL ஆழமான மனித உணர்வுகளையும், உறவுகளின்


ஹாலிவுட்டே உயர்ந்த சினிமா, ஆங்கிலப் படங்களே உலகத் தரம் என்கிற பிம்பம் பெரும்பாலானோரைப் பற்றிக்கொண்ட நிலை தான் இன்னுமே நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவு, சுமாரான படங்களுக்கு தகுதிக்கு மீறிய வரவேற்புகள் கிடைப்பது மட்டுமல்ல, பல உயர்ந்த படைப்புகளின் அடையாளம் காணாமல் போவது. அடிப்படையில் பபேல் ஒரு ஆங்கிலப்படம் இல்லை என்றாலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டு ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அங்கேயும் ஆங்கிலப் படத்திற்கே வெற்றி கிட்டியது. பபேல் பெரிதும் கண்டுகொள்ளப் படாமலேயே போனது. சொல்லப்போனால் ‘பபேல்’ என்கிற வார்த்தையின் பிறப்பிடமான ஹீப்ரு மொழியில் அதன் உச்சரிப்பு ‘பபேல்’ தான். இதையும் ஆங்கிலேயர்கள் ‘பேபல்’ என்று மாற்றி இப்பொழுது இதுவே அங்கீகரிக்கப்பட்ட உச்சரிப்பு ஆகிவிட்டது. நாம் உண்மையான ‘பபேல்’ என்பதையே பின்பற்றுவோம்.

என்றோ தொலைக்காட்சியில் பாதி மட்டும் பார்த்து மறந்துவிட்ட படம். பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் அடையாளம் கண்ட ஒரு பொக்கிஷம். மெக்சிகோவைச் சேர்ந்த அலெஹாந்த்ரோவின்(Alejandro González Iñárritu) படங்கள் அடிப்படையில் மெக்சிகோவைச் சார்ந்து இருக்கும் என்றாலும் பபேல் முற்றிலும் வேறுபட்ட ஒரு படைப்பு. உலகப் புகழ் பெற்ற Amores perros இவரது முதல் படம் என்கிற ஒன்றே அலெஹாந்த்ரோவை விளக்கப் போதுமானது. அலெஹாந்த்ரோவையோ பபேல் படத்தையோ சிறப்பிக்க ஒரு விஷயம் போதும் – ஆஸ்கார் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. கான் இவர்களைப் போற்றிப் புகழ்ந்தது.
இப்பொழுது பபேலுக்குள் செல்வோம். மொரோக்கோவின் பாலைவனப் பகுதியில் வாழும் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. இயல்பாக நடக்கக் கூடிய ஒரு விஷயம் எப்படி, எவ்வளவு தீவிரமான விளைவுகளைத் தர முடியும் என்பது சிறப்பாக காண்பிக்கப்படுகிறது. தான் வளர்க்கும் ஆடுகளை குள்ள நரிகள் கொன்றுவிடுவதால் அவற்றினைக் கொல்ல ஒருவரிடமிருந்து ஒரு துப்பாக்கியைப் பெறுகிறார் குடும்பத் தலைவர். அவர்களின் மகன்கள் துப்பாக்கியின் தோட்டா செல்லக் கூடிய தூரத்தைப் பரிசோதிக்க முயன்று ஒரு பேருந்தை நோக்கிச் சுடுகிறார்கள். அமெரிக்காவிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் இருந்த அந்த பேருந்தில் ஒரு பெண்ணை சரியாக தோட்டா குறி பார்த்து விடுகிறது. குண்டடிப்பட்ட பெண் உயிருக்குப் போராடுகிறார். மருத்துவ வசதிகள் இல்லாமல், தாங்கள் வந்து சேர்ந்த பேருந்தும் விட்டுச் சென்ற நிலையில் மனைவியைக் காப்பாற்ற கணவன் போராடும் காட்சிகள் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தம்பதிகளின் அறிமுகக் காட்சி வழக்கமான கணவன்-மனைவி தர்க்கத்துடன் ஆரம்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழமான மனித உணர்வுகளையும், உறவுகளின் பல்வேறு பரிமாணங்களையும் தன் அனைத்துப் படங்களிலுமே வடித்துவரும் அலேஹாந்த்ரோ இந்தப் படத்தில் மிக அழுத்தமாக அதனை ஒவ்வொரு சூழ்நிலையிலும் உணர்த்துகிறார். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் உள்ளது சுற்றுலா பேருந்து. அதில் குண்டடிப்பட்டுவிட்ட தனது மனைவியை காப்பாற்ற வேண்டுமென்று பதட்டமடைகிறான் நாயகன். சுற்றுலா வழிகாட்டியாக வரும் மொரோக்கோ தேசத்து நபர் அவர்களுக்கு கடைசி வரை உதவும் காட்சிகள் கலாசார வேறுபாடு தாண்டிய மனிதாபிமானத்தையும், அதே நேரத்தில் தன் மனைவி உயிருக்குப் போராடும் நிலையலும் தனது சக அமெரிக்க பயணிகள் அடிப்படை உதவிகள்கூட செய்ய விரும்பாமல் இவர்களை விட்டுச் செல்லும் காட்சிகள் அவர்களின் பயம் கலந்த சுயநலத்தையும் நுணுக்கமாக எடுத்துரைக்கின்றன.
தம்பதிகளுக்குள் இருக்கும் காதல் மிகவும் ஆழமாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கிராமத்தில் தற்காலிக சிகிச்சை பெற்று மிகுந்த வலியுடன் தவித்துக் கொண்டிருக்கும் மனைவி கணவனிடம் தன் கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்துவிட்டதாகக் கூறுகிறார். மறுபடியும் கழிக்கவேண்டும் என்கிறாள். அசைய முடியாத தன் மனைவியைத் தூக்கிப் பிடித்து ஒரு பாத்திரத்தை அடியில் வைத்து சிறுநீர் கழிக்க உதவுகிறார். அவள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் பகிர்ந்துகொள்ளும் கண்ணீர் கலந்த முத்தங்கள் காதல் பரிமாற்றத்தின் உச்சம். உங்கள் மனைவியுடனோ கணவனுடனோ சேர்ந்து அழுத்தமான ஒரு காதல் காட்சியைப் பார்க்க நினைத்தால் இந்த காட்சியைப் பாருங்கள்.
படத்தின் மற்றொரு மிக முக்கியமான பாத்திரமாக ஜப்பானிய இளம் பெண் தோன்றுகிறாள். ஒரு இளம் பெண்ணின் சூழ்நிலையும் அவளின் உள்ளார்ந்த உணர்வுகளும் மிக நுணுக்கமான இந்தப் பாத்திரத்தில் வடிவமைக்கிறார் இயக்குனர். தனது வாலிப பருவத்தில் எவ்வித இன்பங்களும் கண்டிராத பெண்ணின் மனநிலையை செதுக்குகிறார் இயக்குனர். காது கேளாமலும் ஊமையுமாகவும் இருப்பது இன்பங்களைப் பெறுவதற்கு தடையாக இருப்பதாக நம்புகிறார் அந்தப் பெண். காமத்திற்காக ஏங்கி அதை அடைவதற்காக தான் சந்திக்கும் அனைத்து ஆண்களிடம் முயல்கிறாள். நல்லவேளை இயக்குனர் ஒரு ஜப்பானியப் பெண்ணுக்கு பதில் இந்தியப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவில்லை. இந்தியப் பெண்களை அவமதிக்கும் படம், இந்திய கலாசாரத்தை கெடுக்கும் படம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள் நம்மூர் கலாசாரக் காவலர்கள்.
ஜப்பானியப் பெண் தனது அப்பாவை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரியான இளைஞன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் எழுதித் தருகிறாள். அவனுடன் நீண்ட உரையாடலில் ஈடுபடுகிறாள். இந்த முறை காமத்திற்கான முயற்சி தீவிரமாகிறது. விடைபெறவிருக்கும் அவனை காத்திருக்கச் சொல்லி அறைக்குள் செல்கிறாள். அறைக்குள்ளிருந்து திரும்பி வருபவள் நிர்வாணமான வருகிறாள். அவனைத் தூண்டி இன்பத்தை அடைய நினைக்கிறாள். அவன் நிராகரிக்கும்போது இந்த பெண் கொள்ளும் மனநிலையை விளக்க முடியாது. பபேல் அதனைக் காட்சிப்படுத்துகிறது. அந்தத் தருணத்தில் இவளை அவமானம் ஆட்கொள்கிறது. தன் நிர்வாணத்தை உணர்ந்து மனமுடைந்து அழும் காட்சி மிக அழுத்தமான மனித உளவியல் வெளிப்பாடுகள் கொண்டது.
பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையேயான உறவின் பல பரிமாணங்களை உணர்த்துவது அலெஹாந்த்ரோவுடைய படங்களின் சிறப்பு அம்சம் என்றால் பபேல் அதற்கு முதன்மையான உதாரணம். ஜப்பானியப் பெண் ஆரம்பத்திலிருந்தே தனது தந்தையுடன் நெருக்கமில்லாமலும் சிறிதே வெறுப்புடனும் இருப்பவளாக காண்பிக்கப் படுகிறாள். தனது மகளின் அன்புக்காக ஏங்கி வருகிறார் தந்தை. போலீஸ் அதிராகி வீட்டை விட்டு கிளம்பும்போது பெண் நிர்வாணமாகவே இருக்கிறாள். ஓரிரு நிமிடங்களில் தந்தை வீட்டுக்குள் வருகிறார். அடுத்து வரப்போகும் காட்சி எப்படி இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? இங்கே மறுபடியும் அலேஹந்த்ரோ மாபெரும் கலைஞன் ஆகிறான். வீட்டின் பால்கனியில் நிர்வாணமாக நிற்கும் தனது மகளைப் பார்க்கிறார். அதிர்ச்சியுடன் அருகே சென்று நிற்கையில் தந்தையின் கையைப் பற்றிக்கொள்கிறாள் பெண். தன்னை மூழ்கடிக்கும் தனிமை, அவமானம், துக்கம் ஆகியவற்றை வெளிப்படித்தி தந்தையைக் கட்டி அழுகிறாள். பாசத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த தந்தை மகளைக் கட்டிப் பிடித்து ஆறுதல் படுத்துகிறார். அங்கே ஒரு கன்னிப் பெண்ணின் நிர்வாணம் பொருட்டல்ல. இப்படியொரு காட்சியை வேறு யாரால் தரமுடியும்?
படத்தின் மற்றொரு சிறப்பு அதன் இசை. அர்ஜென்டீனிய இசையமைப்பாளரான குஸ்தாவோவின் (Gustavo Santaolalla) உன்னத இசையில் நிரம்பியிருக்கிறது பபேல். சோகம், மகிழ்ச்சி, போராட்டம் போன்ற உணர்வுகளுக்கு தகுந்தற்போல மாறுவதல்ல இவருடைய இசையின் சிறப்பு. படத்தின் காட்சித் தொகுப்புக்கு ஏற்றவாறு இசையின் பரிமாணங்கள் நகர்ந்துச் செல்கிறது. அப்படியான தொகுப்புகள் பல உணர்வுகளைக் கலந்த ஒரு நிலையை வெடிப்படுத்துகின்றன. அந்த நிலைக்கு பார்வையாளனை அழைத்துச் செல்வது தான் குஸ்தாவோவுடைய இசையின் சிறப்பு. பல முக்கிய காட்சிகளில் பின்னணி இசையே இல்லாமல் அமைத்ததும் அந்த இசை நுணுக்கத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும், எந்த மனநிலையிலும் ஒரு மனிதனால் கேட்க முடியும் என்று சொல்லக் கூடிய இசை துணுக்குகளை நம்மால் எத்தனை அடையாளம் காண்பிக்க முடியும்? அப்படியொரு இசையை பபேலில் பெறலாம்.
http://www. youtube. com/watch?v=DHUMsNRvEIs
படத்தில் மொரோக்கோ, ஜப்பான் கதை நகர்ந்துகொண்டிருக்கும் அதே சமையத்தில் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடக்கும் மற்றொரு கதையும் முக்கியமானதாகிறது. மெக்சிகோ-அமெரிக்க நாடுகளின் நெருங்கிய தொடர்பு, அதனைச் சார்ந்திருக்கும் மக்கள், கலாசார வேறுபாடுகள் ஆகியவற்றுடன் இந்தக் கதையிலும் மனித இயல்பு, பெற்றோர்-பிள்ளைகளின் உறவுகளின் ஆழம், எதிர்பாராத சந்தர்ப்பங்கள் அதன் விளைவுகள் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த நான்கு கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் இணைகின்றன என்பது நமக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதம் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது தனித்தனியே நான்கு கதைகளைக் காண்பித்து அவைகளை ஒரு காட்சியில் இணைப்பது அல்ல. முதல் காட்சியில் இருந்தே நான்கு கதைகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் அவற்றினை விறுவிறுப்புடன் மிக நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர். அலெஹாந்த்ரோவின் அனைத்துப் படங்களிலும் திரைக்கதை ஒரு மாபெரும் சவாலைக் கொண்டதாக இருக்கும். திரைக்கதையின் ஆரம்பமும் அதன் பாதையும் கதையினுடைய கால அடிப்படையில் நோக்கினால் மிகவும் மாறுபட்டு அமைத்திருக்கும். இப்படி பல்வேறு கதைகளைப் பிணைத்து அவற்றின் காட்சிகளை கால அடிப்படையில் மாற்றியமைத்து சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வது திரைக்கதையில் ஒரு பெரிய சவால் என்றே நான் கருதுகிறேன்.
நான்கு கதைகளிலுமே பெற்றோர்-பிள்ளைகளுக்கான உறவுகளின் வெவ்வேறு படிமானங்கள் அழுத்தமாக உணர்த்தப்படுகிறது. இது மட்டுமல்லாமல், நான்கு வெவ்வேறு நாடுகளுக்குரிய மக்கள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்க்கொள்ளும்போது அவர்களின் கலாசார, மொழி வேறுபாடுகள் எவ்விதம் மோதிக்கொள்கின்றன என்பதை உணர்த்துகிறது பபேல். உலகில் நடக்கும் தீவிரமான சம்பவங்களின் இயல்பான பார்வை, உலகின் ஆதார விதிகள் சம்பவங்களை எப்படி உருவாக்குகின்றன, எப்படி மாற்றியமைக்கின்றன போன்றனை உணர்த்தப் படுகின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி மனித உளவியலின் ஆதார அம்சங்களை மிகவும் நுணுக்கமாக ஆராய்கிறது இந்தப் படம்.
மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், போராட்டம், படத்தம், ஏமாற்றம், விரக்தி, மனிதாபிமானம், சுயநலம், பயம் என்று ஒரு படத்தில் எப்படி இத்துனை மனித உணர்வுகளை நுட்பமாக ஆராய்ந்து விளக்க முடியும் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. பபேல் ஒரு காவியம்.
ந. நவீன் குமார்

கருத்துகள் இல்லை: