வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

எல்லை மீறி போன மாணவர்களின் வன்முறை வெறியாட்டம்


சென்னையில் பஸ் தினம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பஸ்களை பிடித்துச் சென்று ஆட்டம் போடுவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி மாணவர்கள் ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் பல சம்பவங்கள் நடந்துள்ளன.இதனால் பஸ்தினம் கொண்டாட போலீசார் தடைவிதித்துள்ளனர். அதையும் மீறி சில கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடி வருகிறார்கள். நேற்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திரண்டனர். பஸ் தினம் கொண்டாட போலீசார் அனுமதி மறுத்ததால் கல்லூரி வரை ஊர்வலமாக ஆடிப்பாடியபடி கொண்டாட்டம் நடத்தினார்கள்.
கல்லூரி வளாகத்தை சென்றடைந்ததும் மாணவர்கள் கல்வீச்சில் உற்சாகம் காட்டினார்கள்.சரமாரியாக கற்களால் போலீசாரை தாக்கினர். இதில் மோகன சுந்தரம், துரைப்பாண்டியன், கங்காசலம், ராமன் ஆகிய 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காயம் அடைந்தனர். ரோட்டுக்கு வந்து பஸ்கள் மீதும் சரமாரியாக கல்வீசினார்கள். இதனால் பயணிகள் உயிர் தப்ப குதித்து ஓடியது பார்க்க பரிதாபமாக இருந்தது. பஸ்சுக்குள் சிக்கிய பச்சிழம் குழந்தையை போலீஸ் அதிகாரி ஒருவர் மீட்டார்.மாணவர்களின் வன்முறை வெறியாட்டம் எல்லை மீறி போனதால் போலீசார் தடியடி நடத்தினார்கள். அதன் பிறகுதான் அவர்கள் கலைந்து ஓடினார்கள். இந்த சம்பவத்தால் பச்சையப்பன் கல்லூரி வளாகமும், பூந்தமல்லி நெடுஞ்சாலையும் கலவரக்காடாக காட்சியளித்தது. மாணவர்களின் தாக்குதலில் மாநகர பஸ், போலீஸ் வாகனம், தனியார் கார் ஆகியவை பலத்த சேதம் அடைந்தன. வன்முறையில் ஈடுபட்டதாக கார்த்திக் பி.காம் முதலாம் ஆண்டு, பிச்சைமணி பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு, மணிமாறன் பி.காம் மூன்றாம் ஆண்டு, ஜீவ குமார் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு, சரவணன் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு, குமார் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு, வெங்கடேசன் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு, அஜித்குமார், சரண், சுரேஷ் எம்.ஏ. முதலாம் ஆண்டு, சிவலிங்கம் பி.பி.எம். முதலாம் ஆண்டு, சரத்குமார் பி.ஏ. முதலாம் ஆண்டு, சந்துரு பி.ஏ. 3-ம் ஆண்டு மற்றும் பன்னீர்செல்வம் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு ஆகியோர் கைது செய்யப் பட்டனர். இவர்கள் மீது கொலை முயற்சி, சட்ட விரோதமாக கூடுதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களில் 21 வயதுக்கு கீழ் உள்ள 11 மாணவர்கள் சைதாப்பேட்டை ஜெயிலிலும், 3 பேர் புழல் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தலைமை பொறுப்பேற்று செயல்பட்ட 3 மாணவர்கள் அடையாளம் தெரிந்துள்ளது. அவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்கள் 3 பேர் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: