திங்கள், 6 பிப்ரவரி, 2012

தி.மு.க. தரப்பில் குழப்பம் விளைவிப்பதற்காக இந்த சர்வே kumudam

தி.மு.க.வின் பொதுக்குழு கூடும் முக்கியமான சூழ்நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் கடந்த இதழில் ஒரு சர்வே எடுத்து, அதன் முடிவுகளை அறிவித்திருந்தோம்...
அதில் தி.மு.க.வின் அடுத்த தலைமைக்கு யார் தகுதியானவர் என்பதில் ஆரம்பித்து, கனிமொழிக்கு கட்சிப் பதவி கொடுக்கலாமா, இளைஞர் அணிக்குத் தலைமை ஏற்க யார் தகுதியானவர், அரசியலிலிருந்து கருணாநிதி ஓய்வு பெறலாமா... என பல கேள்விகளுக்கான முடிவுகளைத் தெரிவித்திருந்தோம்... சர்வே முடிவுகள் வெளியான பிறகு அது குறித்து தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும், அரசியல் ஆர்வலர்களும், வாசகர்களும் தங்களது பாராட்டுக்களையும் ஆதங்கங்களையும் கொட்டித் தீர்த்துவிட்டார்கள். இன்னும் சிலர் கோபத்தோடு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். ‘‘தி.மு.க.வை விட்டு வைகோ பிரிந்து சென்று நீண்டகாலமாகிவிட்டது. இந்நிலையில் அவரை எதற்கு தி.மு.க. தலைமைப் பதவிக்கு ஏற்றவர்கள் பட்டியலில் சேர்த்தீர்கள்?’’ என்று கோபித்துக் கொண்டார்கள் அவர்கள். அதேபோல் ம.தி.மு.க.வைச் சேர்ந்த சிலரும் ‘‘தி.மு.க.வே வேண்டாம் என்றுதானே எங்கள் தலைவர் அக்கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்டார். அவரை ஏன் அதில் சேர்த்தீர்கள்’’ என்றார்கள். வேறு சிலர், ‘‘அண்ணா காலத்திலிருந்து திராவிட கருத்துக்களுக்காகத் தோள் கொடுத்து வரும் வைகோவால், தி.மு.க. தலைமைப் பொறுப்பை ஏற்க முடியுமோ இல்லையோ; அந்தப் பதவிக்குத் தகுதியானவர்தான் அவர்!’’ என்றனர்.


வைகோவை அடுத்து மிகவும் விமர்சிக்கப்பட்ட பெயர் குஷ்பு. ‘‘கட்சியில் சேர்ந்த மிகக் குறுகிய காலத்துக்குள்ளாகவே தலைமை அளவுக்கு அதிகமாக அவருக்கு பாப்புலாரிட்டி கொடுத்து வருகிறது. இந்நிலையில் நீங்கள்வேறு அவர் பெயரையும் சேர்த்துவிட்டீர்கள்’’ என்று சிலர் சினந்தனர். வேறு சிலரோ, அவரது பாப்புலாரிட்டியையும் சின்சியாரிட்டியையும் குறித்துச் சொல்லி, சேர்த்தது சரிதான் என்றனர்! ‘‘கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல பொதுக்குழு கூட உள்ள நேரத்தில் எங்களுக்கு சரியான வாய்ப்பைத் தந்திருக்கிறீர்கள்’’ என்று நடுநிலையான தி.மு.க.வினர் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இன்னும் சிலர், ‘‘அடுத்த தலைமைக்குத் தகுதியானவர் யார் என்ற சர்வேயில் கனிமொழிக்கும் மூன்று சதவிகிதம் கிடைத்திருக்கிறது, குஷ்புவுக்கும் மூன்று சதவிகிதம் கிடைத்திருக்கிறது. அப்படி என்றால் குஷ்புவும் கனிமொழியும் ஒன்றா?’’ என்று காரம் காட்டினர். அதேபோல் கட்சிப் பதவி எதையும் வகிக்காத உதயநிதி ஸ்டாலினையும் துரை தயாநிதியையும் ஏன் இளைஞர் அணிக்கான பதவிக்குச் சேர்த்தீர்கள் என்றும் கேள்விகள் எழுப்பினர். ஆனால் பெரும்பாலான தொண்டர்களின் எண்ணம் இளைஞர் அணி தலைமைப் பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் என்பதாகவே இருக்கிறது.


இதற்கிடையே, தி.மு.க. தரப்பில் சிலர் குழப்பம் விளைவிப்பதற்காகவே இந்த சர்வே எடுக்கப்பட்டதாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ரிப்போர்ட்டரின் நோக்கம் ஒருபோதும் குழப்பம் விளைவிப்பதாக இருந்தது கிடையாது. இந்த சர்வேயிலும் அப்படித்தான். பொதுக்குழு கூடும் நேரத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், பிற கட்சியைச் சார்ந்தவர்கள் என பல தரப்பினரின் கருத்துக்களை வெளியிட்டால் அது அக்கட்சி சில முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும் என்ற நல்ல நோக்கத்தில்தான் சர்வேயை வெளியிட்டோம்...

பலவிதமான ரியாக்ஷன்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், மேலும் சில சர்வே முடிவுகள் இந்த இதழிலும் தொடர்கிறது...
? தி.மு.க.வில் அடுத்து தலைமையேற்க தகுதி கொண்டவராக அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து ஸ்டாலினுக்கு 58 சதவிகித வாக்குகளை அளித்திருந்தது குறித்து கடந்த இதழிலேயே சொல்லியிருந்தோம்... அதேபோல் அவருக்கு படிக்காதவர்களை விட படித்தவர் மத்தியில் அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. ஆனால் அரசு ஊழியர்களின் ஆதரவைக் காட்டிலும் தனியார் நிறுவன ஊழியர்களின் ஆதரவே அதிகமாக இருக்கிறது!

? கனிமொழிக்கும் அதேபோல் படித்தவர்கள் மத்தியிலேயே அதிக ஆதரவு! அவருக்கு கட்சிப் பதவி கொடுக்கலாமா என்பது குறித்து கேட்ட கேள்விக்கு 26 வயதிலிருந்து 40 வயது வரையிலானவர்களே அதிகம் கைகொடுத்திருக்கிறார்கள். கட்சியைப் பொறுத்தவரை தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே அதிக ஆதரவு தந்திருக்கிறார்கள். பிற கட்சிகளைச் சார்ந்தவர்களிடம் அவ்வளவு ஆதரவைப் பெறவில்லை கனிமொழி.

? அரசியலிலிருந்து கருணாநிதி ஓய்வு பெற வேண்டுமா என்ற கேள்வியை தி.மு.க.வினர் என்று எடுத்துப் பார்த்தால், அவர்கள் அதை அவ்வளவாக ரசிக்கவில்லை. பிற கட்சியினரும், எந்த கட்சியைச் சேராதவர்களுமே ஒய்வு பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.

? காங்கிரஸ் & தி.மு.க. கூட்டணி தொடர வேண்டுமா? என்ற கேள்வியைப் பொறுத்தவரையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தொடர்வதே நல்லது என்று பதில் அளித்துள்ளார்கள்.

? தி.மு.க. இளைஞரணிக்கு யார் தகுதியானவர் என்ற கேள்வியைப் பொறுத்தவரையில் கனிமொழிக்கு கட்சிக்குள் இருந்தும் குஷ்புவுக்கு தி.மு.க.வை சாராதவர்களிடம் இருந்தும் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கும் கட்சிக்காரர்களிடமிருந்தே அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
thanks kumudam + rajangam dindukal

கருத்துகள் இல்லை: