வியாழன், 9 பிப்ரவரி, 2012

உரசல்... 'கருணாநிதியா? ஸ்டா​லினா?' என்று பரிணாம வளர்ச்சி

அடுத்த தலைவர் யார்?

துவரைக்கும் 'ஸ்டாலினா? அழகிரியா?' என்றே இருந்தஉரசல்... இப்போது 'கருணாநிதியா? ஸ்டா​லினா?' என்று பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்!
புதிய உறுப்பினர் சேர்ப்பு, தி.மு.க.வின் சட்ட திட்டங்களில் மாற்றம், நாடாளுமன்றத் தேர்தல்... இப்படி விவாதிக்க வேண்டிய பலவிஷயங்களை தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து, பொதுக்குழுவுக்கு அனைவரையும் அழைத்தார். ஆனால் 'தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்?' என்பதற்கான விவாத களமாகவே இந்தப் பொதுக்குழு அமைந்துவிட்டது. 'இனி இந்தப் பிரச்னையை கருணாநிதி அதிக தூரத்துக்குத் தள்ளிப் போட முடியாது’ என்பதையும் பொதுக்​குழு நடப்பு​கள் உணர்த்தி​ விட்டன.
'ஸ்டாலினே அடுத்த தலைவர்’ என்று அவரது ஆதர​வாளர்கள் முழங்கி வருகிறார்கள். 'அழகிரிக்கே அந்தப் பதவி’ என்று தென் மாவட்டங்களில் இருந்து கூவிக் கொண்டிருக்கிறார்கள் அஞ்சாநெஞ்ச அடிப்பொடிகள்! கூடவே, 'கலைஞர் இருக்கும்வரை, அவர்தான் தலைவர்’ என்றும் ஒரு உஷார் 'பொடி'யை இவர்​கள் தூவுகிறார்கள்.
'ஸ்டாலின் பெயரை கலைஞரே முன்மொழிந்து, அவரை கட்சியின் அரியா சனத்தில் உட்கார வைக்க வேண்டும்’ என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் ஆசை! கனிமொழி தரப்புக்கோ இந்த பரமபத விளையாட்டில் முக்கிய கட்சிப் பதவியில் எதையாவது பெற்றே தீரவேண்டும் என்ற பரபரப்பு!
ஸ்டாலின், அழகிரி... இருவரில் யாரை இப்போதைக்கு உயர்த்திப் பிடித்தாலும் கட்சி ஆட்டம் காணும் என்பதால் கருணாநிதி மொத்தமாகவே மௌனம் காக்கிறார். அவரது மௌனத்தை இனியும் தொடர அனுமதிக்க முடியாது என்று ஸ்டாலின் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பதையே பொதுக்குழு காட்டியது.
கடந்த 3ம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்​தில் தி.மு.க-வின் பொதுக்குழு கூடியது.
அன்று, பேரறிஞர் அண்ணா நினைவுதினம். அண்ணா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்து அறிவாலயத்தில் உட்கார்ந்தார் கருணாநிதி. தீர்மானங்​கள், அஞ்சலித் தீர்மானங்கள் என்று வாசிப்பதில் காலை வேளை முழுமை​யாகக் கழிந்தது. மதிய வெயில் முடியும் நேரத்தில் 'சொல்லிவைத்த' மாதிரி சூட்டைக் கிளப்பினார் வீரபாண்டி ஆறுமுகம்.
முந்தைய நாள் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்திலேயே சீறியிருந்தார் வீரபாண்டி ஆறுமுகம். எனவே, இங்கே«யும் ஏதாவது வில்லங்​கமாகப் பேசுவார் என்று ஸ்டாலின் ஆதரவு ஆட்கள் எதிர்பார்த்தே வந்தார்கள். அதற்கு பீடிகை போடுவது மாதிரியே கருணாநிதி, அன்பழகன், வீராசாமி, துரைமுருகன், சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி ஆகிய அனைவர் பெயரையும் சொன்ன வீரபாண்டி ஆறுமுகம்... ஸ்டாலின் பெயரை மட்டும் சொல்ல 'மறந்து' போனார். திடீரென ஞாபகம் வந்தவர் போல...
''பொருளாளர் பெயரை நான் மறந்து விட்டேன். தம்பி ஸ்டாலின் அவர்​களே! தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால் மன்னிக்கத்தான் வேண்டும்!'' என்று சொல்லி விட்டு, பேச்சைத் தொடர்ந்தார் ஆறு​முகம்.
''வடமாவட்டத்தில் தளபதி கழகப் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகிறார். தென்மாவட்டத்தில் அஞ்சாநெஞ்சன் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். தலைவர் இதனைக் கண்​காணித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்... தலைவர் இருக்கும் போதே, 'அடுத்த தலைவர் யார்?’ என்று சிலர் பேசுவது சரியானதாக இல்லை. தலை​வருக்குப் பிறகு அஞ்சாநெஞ்சனோ... தளபதியோ... யார் வேண்டுமானாலும் தலைவராக வரட்டும். இப்போது அதைப் பற்றி பேச வேண்டுமா?'' என்று கேட்டு லேசாக இடைவெளி விட்டார் வீரபாண்டி ஆறுமுகம்.
'ஆமா... தளபதிதான் வரணும்’ என்று ஒருவர் குரல் கொடுத்தார். 'தளபதிதான் அடுத்த தலைவர்’ என்று இன்னொருவர் குரல் கொடுக்க... 'தளபதி’...'தளபதி’ என்று பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். அடுத்து சிலர் வீரபாண்டி ஆறுமுகத்தை காட்டமாக விமர்சித்துக் குரல் கொடுத்தனர். அப்படியும் ஆற்றாமை அடங்காதவர்களாக நான்கைந்து பேர் தாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்து மேடையை நோக்கி நகர்ந்து வர ஆரம்பித்தார்கள்.
இதைப் பார்த்த வீரபாண்டி ஆறுமுகம், 'அடிக்கப் போறியா? இந்தா அடி?’ என்று நெஞ்சை நிமிர்த்தி முன்னால் வர ஆரம்பித்தார். சேலத்து சிங்கமாச்சே... அதுவும் சிலுப்பிக் கொண்டது! கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகிய மூவரும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். திடீரென டென்ஷன் ஆன கருணாநிதி.... 'வீல் சேரை எடுத்துட்டு வாய்யா!’ என்றார். 'நல்லா இருக்குய்யா... நல்லா இருக்கு! நான் போறேன்... நீங்களெல்லாம் என்னமோ பண்ணுங்க!’ என்று கடுகடுத்துச் சொல்ல ஆரம்பித்தார் கருணாநிதி. ஸ்டாலினுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தனக்காகக் குரல் தரும் ஆதரவாளர்களை அடக்கி அமர வைக்கவும் அவர் முன் வரவில்லை. தொடர்ந்து ஏதோ முணுமுணுத்துக்கொண்டே இருந்தார் கருணாநிதி. அவரை அன்பழகன் சாந்தப்படுத்தினார். 'ஒண்ணுமில்லே... நீங்க அமைதியா இருங்கள்!’ என்று அன்பழகன் சொல்ல... 'நீங்க எதுக்குப் போறீங்க..? வருத்தப்படாம இருங்க!’ என்று ஸ்டா​லினும் சமாதானம் சொன்னார். ஆனால், ஸ்டாலின் முகத்தை கருணாநிதி ஏறெடுத்தும் பார்க்கவே இல்லை.
மைக் பிடித்த அன்பழகனின் பேச்சு பல உள் அர்த்தங்கள் கொண்டதாக இருந்தது.
''வீரபாண்டி ஆறுமுகம் பேசியதும் என்னுடைய கருத்துதான். ஸ்டாலின் மிகச்சிறப்பாக கழகப் பணி ஆற்றுகிறார் என்று நான் பாராட்டுகிறேன். அதற்காக, நான் வகிக்கும் பொதுச்செயலாளர் பொறுப்பை அவருக்குத் தூக்கிக் கொடுத்து விடுவேனா? எனக்குப் பிறகு அவர் அந்தப் பொறுப்பில் உட்காரலாம். ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் கலைஞரின் பிள்ளைகள். அந்த அடிப்படையில் எனக்கும் பிள்ளைகள்தான். அவர்கள் கழகப் பணி ஆற்றலாம். ஆனால், தனித்தனி அணியாக பணியாற்றக் கூடாது. தகுதியின் அடிப்படையில்தான் அந்தத் தலைமைப் பதவி வரவேண்டும். கலைஞரை விட நான் வயதில் மூத்தவன். அவர் தலைவராக வந்து உட்காரும்போது எனக்கே சில கூச்சங்கள் இருந்தன. என் வீட்டில் உள்ளவர்கள்கூட அதைக் கிண்டல் செய்தார்கள். ஆனால் கலைஞர், தனது தகுதியால் உயர்ந்து நின்றார். அவரைப் போல என்னால் உழைக்க முடியாது. அவரே இயக்கம். இயக்கமே அவர் என்று வளர்ந்தார். அப்படிப்பட்ட தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர... சும்மா தலைவராகத் துடிக்கக் கூடாது.
இந்த வயதிலும் கலைஞர் சுறுசுறுப்புடன் உழைக்கிறார். நேற்று இரவு கூட அவருக்கு உடல் நலமில்லை. கால், கை நரம்புகள் வலித்தன. 'மதியம் வரைக்கும் பொதுக்குழுவை நடத்தி முடித்துக் கொள்ளலாம்!’ என்று நான் சொன்னேன். 'எத்தனையோ மைல் தூரத்தில் இருந்து வந்திருப்பவர்களை ஏமாற்றக் கூடாது. மாலை வரைக்கும் பொதுக்குழு நடக்கட்டும்’ என்று கலைஞர் சொன்னார். தன்னுடைய உடல்நலம் பற்றிக் கவலைப்படாமல், இயக்கமே தன் உயிராகக் கருதி நடத்தும் கலைஞரைப் போல் வேறு யாரும் இருக்க முடியாது!'' என்று அன்பழகன் பேசப்பேச... நெகிழ்ந்து, குளிர்ந்து, நிமிர்ந்தார் கருணாநிதி.
அடுத்து தலைவர் என்ன பேசப் போகிறாரோ என்ற ஆவல் அரங்கம் முழுக்க தகித்த நிலையில் மைக் பிடித்த கருணாநிதி, ''பேராசிரியர் பேச்சு முழுமையும் என்னுடைய கருத்துதான். அடுத்த பொதுக்குழுவுக்கு நான் இருந்தால் பேசுகிறேன். நன்றி!'' என்று சுருக்கமாக, உருக்கம் காட்டி முடித்ததில் பலருக்கும் அதிர்ச்சி!
'தலைவர் பேசணும்.. தலைவர் பேசணும்’ என்று குரல்கள். அன்பழகனும், கருணாநிதியை பேசச் சொல்லி கேட்டுக் கொண்டார். கருணாநிதிக்கு முன்னால் இருந்த டீ பாயை எடுத்து விட்டார்கள். சிறுநேர மனமாற்றத்துக்குப் பிறகு டீ பாய்... மைக் ஆகியவை மறுபடி வைக்கப்பட்டன!
கருணாநிதி தழுதழுக்கும் குரலில் பேசினார். 'அவர்களே... இவர்களே' என்று எவரையும் விளிக்காமல்... 'என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே!’ என்ற வார்த்தை​களையும் கூட சொல்லாமல் நேரடியாகவே மனவருத்தங்களைக் கொட்ட ஆரம்பித்தார்.
பொதுக்குழு நிகழ்வுகளில் இடம்பெற்ற ஒருவர் கூறுகையில், ''ஒருவர் தன்னுடைய அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, மீண்டும் தனக்கே வாக்களிக்கும்படி கேட்கும் வகையில் இருந்தது தலைவரின் அந்தப் பேச்சு. 'இந்தக் கட்சிக்காகவும் உங்களுக்காகவும் எப்படி எல்லாம் நான் உழைத்தேன். எனக்கு நீங்கள் காட்டுகின்ற நன்றி இதுதானா?' என்று கேட்பது போலத்தான் இருந்தது அந்தப் பேச்சு'' என்றார்.
''கொட்டுகிற மழையில் ராபின்சன் பூங்காவில் இந்தக் கட்சியை ஆரம்பித்த காலம் முதல் தொடர்​பவர்கள் நானும் பேராசிரியரும். ஊர் ஊராகப் போய் அயராமல் கொடி ஏற்றி வைத்துக் கட்சி வளர்த்தவன் நான். இந்தக் கட்சிக்காக நான் செலவிட்ட உழைப்பு இன்று இங்கே வந்திருக்கிற பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த நாட்டுக்குத் தெரியும். பேரறிஞர் அண்ணாவுக்கு நன்றாகத் தெரியும்.
இப்படிப்பட்ட கட்சியில் பொதுக்குழு சீரோடும் சிறப்போடும் அமைதியாக நடக்கிறதே என்று ஒற்றர்கள் மூலமாகக் கேள்விப்பட்டு அவர்களை விட்டே சிலரைத் தூண்டி விட்டு இருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் பேசியதில் தவறு எதுவும் இல்லை. அவர் தி.மு.க. தொண்டர்களுக்குச் சில வேண்டுகோளை வைத்தார். அதைத் திரித்து, ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ளக் கூடிய சிலர் கட்சியில் பிளவை ஏற்படுத்த... சில குண்டர்கள் முயற்சித்ததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை யார் தூண்டி விட்டார்கள், இதைப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதை என்னுடைய இதயத்தில் எழுதி வைத்துக் கொண்டேன்!'' என்ற போது கருணாநிதியின் குரல் கம்மியது. மொத்தக் கூட்டமும் நிசப்தமாக அடுத்து தலைவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று கவனித்தது. அவருக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டாலின் தலையைக் குனிந்தவாறு கம்மென்று உட்கார்ந்திருந்தார்.
கருணாநிதி தொடர்ந்தார்...
''நீங்கள் ஸ்டாலினுக்கு உதவி செய்யவில்லை. அவர் வளர்வதற்கு முன்னால் அவருக்கு களங்கத்தைக் கற்பித்திருக்கிறீர்கள். தி.மு.க.வில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களும் அமைதியாகத்தான் நடந்துள்ளது. சுமுகமாக, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துத்தான் நடந்துள்ளது. அப்படித்தான் இனியும் நடக்க வேண்டுமென நான் நினைத்தேன். ஆனால், என்னைப் பற்றிய பெருமைகளை எல்லாம் நானே சொல்லி, 'என்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்து எடுங்கள்’ என்று என்னால் உங்களிடம் பிச்சை எடுக்க முடியாது. அதை நான் செய்யவும் மாட்டேன். அதுதான் உங்களில் சிலருக்கு விருப்பமாக இருந்தால், அடுத்த பொதுக்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் என்று நடத்தி, யாருக்கு எவ்வளவு வாக்குகள் என்ற எண்ணிக்கையைப் பார்த்து முடிவு செய்யலாம்.!'' என்று கருணாநிதி சொன்னபோது... அதன் ஆழ-அகல பரிமாணங்கள் புரிந்து அதிர்ந்து போனது பொதுக்குழு.
கருணாநிதியின் கையை பேராசிரியர் அன்பழகன் தொட்டு அமுக்கினார். 'இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம்!’ என்று அவர் நிதானப்படுத்துவது போல இருந்தது. அதைப் புரிந்து கொண்ட கருணாநிதி சட்டென உணர்வுகளை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து... காங்கிரஸ் கூட்டணி குறித்து பதில் சொல்வதற்கு சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.
அதைச் சொல்லிவிட்டு பேச்சை முடிக்க நினைத்​தாலும்... நடந்த சம்பவங்களின் வேதனை முழுதுமாக ஆற்ற முடியாமல் இருந்ததோ என்னவோ... பொதுக்குழு உறுப்பினர்களை நோக்கி இப்படி கிண்டலடித்தார் தலைவர் -
''நீங்கள் எல்லாம் நல்ல சிந்தனையாளர்கள்தான். இல்லாவிட்டால் ஒரு பொதுக்குழு இந்த அளவுக்கு அமைதியாக நடப்பதற்கு இந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்க மாட்டீர்கள். நாளைக்கு இதுதான் எல்லாப் பத்திரிகைகளிலும் வரும். நம்மை இருட்டடிப்பு செய்ய நினைக்கிற பத்திரிக்கையாளர்கள்கூட இருட்​டடிப்பு செய்ய முடியாது! உங்களுடைய அருமையான, ஆதங்கமற்ற, அன்பான, மேடையை நோக்கிப் பாய்ந்து தம்பி வீரபாண்டி ஆறுமுகத்தையே திக்குமுக்காடச் செய்கின்ற வேகம் வரவேற்கத்தக்கது. அப்போதுதானே தி.மு.க-வுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்! அந்த விளம்பரத்தைக் காசில்லாமல் உண்டாக்கிய உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுக் குழுவைப் பற்றி - இப்போதுள்ள தி.மு.க. பற்றி எனக்கு புரிய வைத்தமைக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்'' என்று சொல்லிவிட்டு, விடை பெற்றார் கருணாநிதி!
இந்த மாதிரியான கூட்டம் நடந்து முடிந்து, கருணாநிதி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் ஸ்டாலின் உடன் இருப்பார். ஆனால், அன்று அவர் இல்லை. தனியாகப் போய் நின்று கொண்டார். அவரை, கருணாநிதி தன் அருகில் அழைக்கவும் இல்லை.
''அரசியலில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்​ளுங்கள்.. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னுடைய மனைவிகள் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், என்னால்தான் ஓய்வு பெற முடியவில்லை'' என்று கிண்டலாகச் சொல்லிச் சென்றார். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகே கருணாநிதிக்கு பக்கத்தில் வந்தார் ஸ்டாலின். ''வீட்டுக்குத்தானே..? நானும் வர்றேன்!'' என்றார் ஸ்டாலின். ''வீட்டுக்கு போகலைப்பா... ஆபீஸுக்குப் போறேன்'' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு பதில் அளித்தார் கருணாநிதி.
பொதுக்குழு நடந்த 'கலைஞர் அரங்கத்தில்’ இருந்து அறிவாலயத்தில் தன்னுடைய அலுவலக அறைக்கு வந்தவர், அரைமணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே உட்கார்ந்து சக தலைவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். ஸ்டாலினுடன் பயணிக்கும் சில நிமிடங்களை அன்றைக்குத் தவிர்க்க நினைத்தாரோ என்னவோ...!
''கூச்சல் போட்டவர்களுக்கும் ஸ்டாலினுக்கும் சம்பந்தமில்லை என்றால் உடனே மைக் அருகில் வந்து அவர்களை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். கூச்சல் போட்டவர்களை வீரபாண்டி ஆறுமுகத்திடம் மன்னிப்புக் கேட்கும்படி செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அவர் வேடிக்கை பார்த்தது சரியில்லை'' என்பது, பொதுக்குழு உறுப்பினர் ஒருவரின் கருத்து. ''இதைத் தூண்டிவிட்டவர்கள் யார் என்று என் மனதுக்குள் எழுதி வைத்துவிட்டேன் என்று, தலைவர் சொல்வது ஸ்டாலினை மனதில் வைத்துத்தான்! 'தலைவர் பதவிக்கான தேர்தலில் அடுத்த முறை போட்டி இருக்கட்டும். நான் போட்டி போடுகிறேன். யார் அடுத்த தலைவர் என்று பார்த்து விடலாம் என்ற தொனியில் தலைவர் பேசியது, பகிரங்கமாக ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட சவால்'' என்றும் சொல்கிறார் அவர்.
அதிரடியான அழகிரி 'நல்லபிள்ளை’ என்று பெயர் எடுக்க... அமைதியான ஸ்டாலின் 'சர்ச்சையில்’ சிக்கியது தி.மு.க.வில் ஏதோ ஒன்று நடக்கப் போவதற்கான அறிகுறி!
முந்தைய நாள் நடந்த கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்துக்கு வந்து கடைசி வரிசையில் உட்கார்ந்த அழகிரி... மறுநாள் நடந்த பொதுக்குழுவுக்கு காலையில் வந்து முன்வரிசையில் அமர்ந்தார். அவருடன் தயாநிதி மாறன், மன்னன், மூர்த்தி, எஸ்ஸார் கோபி ஆகியோரும் வந்தார்கள். காலை நிகழ்வுகள் முடிந்ததும் மதிய சாப்பாட்டுக்காக கிளம்பிப் போன அழகிரி, பிறகு மதியம் வரவில்லை.
எனவே வீரபாண்டி ஆறுமுகத்தின் பேச்சு, அதன்பிறகு நடந்தவற்றை அழகிரி பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ''சும்மா அங்கே போய் வேடிக்கை பார்க்கிறதுக்கு எதுக்குப் போகணும்?'' என்று ஆதரவாளர்களிடம் சொன்னாராம் அழகிரி.
''அவர் வந்திருந்தால், கதையே வேறு மாதிரிப் போயிருக்குமோ..?'' என்று கேட்டுக் கொண்டு கலைந்தார்கள் பொதுக்குழுவில் சிலர்!
- ப.திருமாவேலன், இரா.தமிழ்கனல்
அட்டை மற்றும் படங்கள்: என்.விவேக்
கனிமொழிக்காக....
கனிமொழிக்காக பேசினார் விஜயா தாயன்பன். ''கனிமொழி இல்லாமல் நடக்கிறதே என்று கோவை பொதுக்குழுவின்போது வருத்தப்பட்டேன். சென்னை பொதுக்குழுவுக்கு அவர் வந்துவிட்டது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப் போலவே நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நினைக்​கிறேன்'' என்று சொல்லி நிறுத்தினார். பொதுக்குழு அமைதியாக இருந்தது.
''நீங்கள் கைதட்டவில்லை என்றாலும் மகிழ்ச்சி​யாகத்தான் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்'' என்று 'சும்மா கிடந்த சங்கை' ஊதிவிட்டு உட்கார்ந்தார்.
ஃபேஸ்புக்கா? டி.வி-யா?
தயாநிதி மாறன் பேசும்போது தி.மு.க.வின் பிரசார உத்திகளில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். ''இன்றைக்கு இன்டர்நெட், ஃபேஸ்புக், ஆர்குட் என்று சமூக வலைதளங்கள் வந்துவிட்டன. இதைத்தான் இளைஞர்கள் அதிகம் பார்க்கிறார்கள். படிக்கிறார்கள். இந்த ஏரியாவையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கேயோ கனடாவில் உட்கார்ந்து கொண்டு தி.மு.க-வை திட்டி இணையதளத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க நாமும் தயாராக வேண்டும்'' என்று சொன்னார்.
அடுத்துப் பேசிய திருச்சி சிவா, ''ஃபேஸ்புக், ஆர்குட் என்பவை படித்தவர்கள் மீடியம்தான். ஆனால், அனைவர் வீட்டிலும் இருப்பது டி.வி! உங்களிடம் இருக்கும் டி.வி. மூலமாக தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தீர்கள் என்றாலே போதும். தி.மு.க. முழு வெற்றி பெறும்'' என்று சொன்னார்!
''எனக்கு எந்த பயமும் இல்லை!''
வழக்கறிஞர் ஜோதி பேசும் போது பிரதமர் மன்மோகன் சிங்கையும் கடுமையாகக் குற்றம் சாட்டினார். ''ஒரு அரசியல்வாதி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. அரசியல் தெரியாத பொருளாதார வல்லுநராக அவர் இருப்பதுதான் சிக்கல்'' என்று சொன்னதும், முன்வரிசையில் இருந்த தயாநிதி மாறன் எழுந்து, ''பிரதமரைப் பற்றி தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல வேண்டாம். அவரை எதற்கு குற்றம் சாட்டுகிறீர்கள்?'' என்று கேட்டார்.
''உங்களுக்கு வேண்டுமானால் பிரதமரைப் பற்றிப் பயம் இருக்கலாம். எனக்கு எந்தப் பயமும் இல்லை. அதனால்தான் உண்மையைப் பேசுகிறேன்'' என்பது ஜோதியின் பதில்!
உயர்நிலைக் குழுவில் தொடங்கிய உஷ்ணம்!
தி.மு.க-வின் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்யும் முயற்சி பற்றி, கடந்த 3-ம் தேதியன்று அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூடி விவாதித்தது. அதில், முக்கிய இடம் பிடித்தவை, மூன்று யோசனைகள். ஒன்று, நகர மற்றும் ஒன்றிய அளவில் ஒரே பதவிக்கு தொடர்ந்து ஒருவர் மூன்று முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது... அடுத்து, பெரிய மாவட்டங்களை கட்சிப் பொறுப்பைப் பொறுத்தவரை இரண்டாகப் பிரிப்பது. மூன்றாவது... பதவியைப் பிடிப்பதற்காக ஒரே ஊருக்குள் கட்சித் தேர்தலின்போது மட்டும் கிளைகளை உருவாக்குவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிளை, அதற்குக் கீழ் ஊராட்சியின் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கிளை மட்டுமே இருக்க வேண்டும் என்பது.
ஊராட்சிக் கிளை திருத்தத்துக்கு எல்லாரும் ஒரே குரலில் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், மூன்று முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என்ற யோசனையை, அனைவருமே எதிர்த்தார்கள். இதேபோல் மாவட்டப் பிரிப்புக்கு அதிக எதிர்ப்பு கிளம்பியது. ''கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நான்கு தொகுதிகள்தான் உள்ளன. நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரியிலோ ஆறு தொகுதிகள், தஞ்சையில் ஒன்பது தொகுதிகள், நெல்லையில் 10 தொகுதிகள், சேலம், விழுப்புரத்தில் 11 தொகுதிகள், வேலூரில் 13 தொகுதிகள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் எதிர்மாறாக தொகுதிகளின் எண்ணிக்கை இருக்கிறது. தி.மு.க-வைப் பொறுத்தவரை, ஏற்கெனவே தருமபுரியில் வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்ட அமைப்புகள் உள்ளன. 100 வார்டுகள் வந்துவிட்ட மதுரை மாநகராட்சி தனி மாவட்டமாக உள்ளது. அதே போல, 100 வார்டுகள் பெற்​றுள்ள கோவை மாவட்டத்தையும் இரண்டாகப் பிரிக்கலாம். அதிக தொகுதிகள் உள்ள மாவட்டங்களை மாவட்டச் செயலாளர்​களின் யோசனைப்படி பிரிக்கலாம்'' என்று, டி.கே.எஸ்.இளங்​கோவன் பேச, முதல் முயற்சியிலேயே அதைக் கிள்ளியெறியும் வகையில் சீறிப்பாய்ந்து விட்டார், வீரபாண்டி ஆறுமுகம்.
''63 வாங்கி 5 கூட ஜெயிக்க முடியாத கட்சி எதுக்கு?''
தி.மு.க. பொதுக்குழுவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான குரல்கள் அதிகமாக ஒலித்தன. காலை நிகழ்ச்சியில் பேசிய குளித்தலை சிவராமன், குத்தாலம் கல்யாணம் ஆகிய இருவருமே, ''காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர வேண்டாம்'' என்று வலியுறுத்தினார்கள். இவர்களது பேச்சுக்கு உறுப்பினர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. ''அதே சமயம் தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு கட்டுப்பட்டுச் செயல்படுவோம்'' என்பதையும் சொல்லிச் சென்றார்கள்.
மதியம் நிகழ்வுகளில் பேசிய வழக்கறிஞர் ஜோதி, இந்தக் கருத்தை விலாவாரியாக எடுத்து வைத்தார்.
''போஃபர்ஸ் விவகாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்​வதற்காக, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இன்றுவரை எதை எதையோ செய்து பார்க்கிறது காங்கிரஸ். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மாதிரி நடப்பவர்கள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவையும் கனிமொழியையும் மாட்டிவிட்டு தாங்கள் தப்பிக்க நினைக்கிறார்கள். 63 ஸீட்களை நம்மிடம் கேட்டு வாங்கியவர்களால், ஐந்து சீட் கூட ஜெயிக்க முடியவில்லை. அவர்களோடு எதற்கு நாம் கூட்டணியைத் தொடர வேண்டும்? காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்றால்... அதற்காக பாரதிய ஜனதாவுடன் அணி சேர வேண்டும் என்று நான் சொல்லவில்லை'' என்று பேசி பரபரப்பு ஆக்கினார் ஜோதி.
பேராசிரியர் அன்பழகன் பேசுகையில், ''ஜோதி அதிக விவரமானவர். தலைவர் கலைஞரிடம் தனியே சொல்ல வேண்டியதை எல்லாம் இங்கே பொதுக்குழுவில் பேசி இருக்க வேண்டாம்'' என்று கூறினார்.
இதற்கெல்லாம் தனது பேச்சில் பதில் சொன்னார் கருணாநிதி.
''காங்கிரசுடன் உறவு வேண்டுமா வேண்டாமா என்று பிரச்னை எழுவதற்கான தேவையே இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுடன் உறவு வேண்டாம் என்று உங்களிடம் கேட்காமலேயே நாங்கள் முடிவு எடுத்தோம். உங்கள் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தோம். அப்படி, நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு எடுக்க முடியாது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை என்றால், மதவாத பா.ஜ.க. ஆட்சியில் அமருவதற்கு நாமே உதவி செய்தது போலாகும். பா.ஜ.க-வை வரவிடாமல் தடுக்க நமக்கு இருக்கும் ஒரே மாற்று காங்​கிரஸ்தான்.
'காங்கிரஸ் உங்களுக்கு நன்மை செய்ததா?’ என்று நீங்கள் கேட்கலாம். 'உங்கள் மகள் கனிமொழியியை திகார் சிறையிலே வாட வைத்தார்களே?’என்று கேட்கலாம். 'தம்பி ராசாவை பூட்டி மகிழ்ந்தார்களே?’ என்று கேட்கலாம். தன்னலத்தை மறந்து விட்டு இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றித்தான் நான் யோசிப்பேன். எனக்கு கனிமொழியின் வேதனை பெரிதல்ல. இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாக ஆக்க விடமாட்டேன். இப்போதே, ஜெயலலிதாவை பிரதமர் ஆக்க சோ போன்றவர்கள் முயற்சியைத் தொடங்கி விட்டார்கள். இதை நாம் எப்படி ஏற்க முடியும்? காங்கிரஸுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அந்தக் கட்சியைத்தான் தொடர்ந்து ஆட்சியில் வைக்க வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு அவர்கள் நமக்கு எந்த நன்றியையும் செய்து விடவில்லை. ஆனால், காங்கிரசுக்காக அல்ல... வேறு வழியில்லை என்பதற்காக காங்கிர¬ஸையே ஆதரிக்க வேண்டி இருக்கிறது'' என்றார் கருணாநிதி!
thanks vikatan +raviraj pandian Jamaica

கருத்துகள் இல்லை: