செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

பத்மநாபசாமி கோவில் பதுக்கல் நகைகளை பாதுகாக்க தேவ பிரசன்னமாம்

பத்மநாப சுவாமி கோவிலில் தேவ பிரசன்னம் :அவலட்சணங்கள் தென்பட்டதால் அதிர்ச்சி

திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில், ராசி பூஜையில் பல்வேறு அவலட்சணங்கள் தென்பட்டன. இதற்கு ஒன்பது கிரகங்களும் பாவ நிலைகளில் இருப்பதும் காரணமாகத் தெரிகிறது. இதற்கான பரிகார பூஜை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அவலட்சணங்கள் தென்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு அங்கு சென்றுள்ளது. அக்குழு, பாதாள அறைகளை திறந்து பார்ப்பதற்கு முன், தேவ பிரசன்னம் (சுவாமியின் கருத்து அறிதல்) நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என, கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும், அறக்கட்டளை உறுப்பினர்களும் குழுவினரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதை அக்குழு ஏற்றுக்கொண்டதை அடுத்து, கோவில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள குலசேகர மண்டபத்தில் நாடக சாலையின் முகப்பு பகுதியில் நேற்று பிற்பகல், அஷ்டமங்கல தேவ பிரசன்ன நிகழ்ச்சி துவங்கியது. கோவில் பாதாள அறைகள் திறந்ததில் ஏதேனும் தெய்வக் குற்றம் இருக்குமோ என்பதை அறியவும், அதற்கு பரிகாரம் தேடவும் தான் நிகழ்ச்சியை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும், அறக்கட்டளையினரும் செய்துள்ளனர். மேலும், பாதாள அறைகளில் இன்னமும் திறக்கப்படாத "பி' அறையை திறக்கலாமா, அவ்வாறு திறந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடக்குமா என்பது குறித்து தேவ பிரசன்னம் மூலம் அறியவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் தந்திரி தரணநல்லூர் பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு முன்னிலையில், ஜோதிட வல்லுனர்கள் நாராயணரங்க பட், பத்மநாப சர்மா, ஹரிதாஸ் மற்றும் தேவிதாஸ் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிகள் மூன்று நாட்கள் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பின் தான், பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படும் பாதாள அறைகளைத் திறந்து, மதிப்பீடு செய்யும் பணி துவங்கும். பொக்கிஷங்களை மதிப்பீடு செய்வதற்கு முன், சுவாமியின் கருத்து என்ன என்பதை கேட்பதற்காகத் தான் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் துவங்கிய நிகழ்ச்சியில், முதலில் ராசி பூஜை நடத்தப்பட்டது. அதில், பல அவலட்சணங்கள் (எதிர்மறைவானவை) தென்பட்டன. இதனால், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், அதற்கான பரிகாரம் குறித்து ஆராயப்பட்டது. இருப்பினும், மதிப்பீடு பணிகளை எந்தவித தடங்கலுமின்றி தொடர, இது எந்த விதத்திலும் தடையாக இருக்காது என நம்பப்படுகிறது.  

கருத்துகள் இல்லை: