செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அபராதம்,பொய் நில வழக்கு தொடர்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்:கருணாநிதி

பொய்யாக நில அபகரிப்பு வழக்கு தொடர்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறி்த்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி:- திமுக ஆட்சிக் காலத்தின் போது உண்மையாக தங்கள் சொத்துக்களை விற்றவர்களே, தற்போது திமுக மீது புகார் கூறினால், அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கையோடு வீண் புகார் கூறுகிறார்களே?

பதில்:-அதனால் தான் திமுக ஆட்சிக் காலத்தில் பொய்யான புகார்களைக் கூறுவோருக்கு தண்டனை அளிக்க ஒரு சட்டமே கொண்டு வரப்பட்டது. நேற்றைய தினம் கூட, சென்னை உயர் நீதிமன்றத்தில் தவறான நோக்கத்துக்காக,பொது நல மனு தாக்கல் செய்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அளித்த தீர்ப்பில் பிரச்சினைக்குரிய இடம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் முன்சீப் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு உள்ளதாகவும், அதிலே எந்த உத்தரவும் இன்னமும் வழங்கப்படாத நிலை உள்ளதாகவும், மனுதாரர்கள் பொதுநல மனு என்ற பெயரில் தவறான நோக்கத்துடன் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.அதைப் போலவே நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டால்,பொய் புகார்களும் அதனால் ஏற்படும் கொடுமைகளும் குறையும் அல்லவா?

கேள்வி:- அதிமுக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை குறித்து புகழ் மாலை சூட்டுவதில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொள்கிறார்களே?

பதில்:- நிதி நிலை அறிக்கை பற்றி நான் ஏற்கனவே விளக்கமாக சொல்லியிருக்கிறேன்.மேலும் அதைப் பற்றிக் கூற வேண்டுமேயானால் காலியாக உள்ள 60 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கு அதிமுக ஆட்சி பின்பற்றப் போகும் முறை பற்றி எந்தவிதக் குறிப்பும் இல்லை.அண்ணா பல்கலைக்கழகங்களை இணைத்து ஒரே பல்கலைக்கழகமாக ஆக்கப்போவதாகச் சொன்னார்கள்.அது என்னவாயிற்று என்று நிதி நிலை அறிக்கையில் சொல்லப்படவில்லை.

அனைத்துத் துறைகளிலும் 2 லட்சம் காலிப்பணி இடங்கள் இருப்பதாக அதிமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி சொல்லி வருகிறது.அவற்றை நிரப்புவதற்கான திட்டம் எதுவும் இல்லை.2004-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்குள்ளான பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவேன் என்று தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கூறிய வாக்குறுதி பற்றி எதுவும் இல்லை. டாஸ்மாக் பணியாளர்களின் நிரந்தரம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பும் இல்லை.

ஒன்றே கால் கோடி மாணவ-மாணவியரின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட சமச்சீர் கல்வி குறித்து ஒரு வார்த்தைகூடச் சொல்லப்படவில்லை.நீதி மன்றங்கள் பல முறை காலக்கெடு விதித்து,அதற்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டுமென்று கூறியும்,அதை மதிக்கவே இல்லை.கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை.

சென்னை உயர் நீதிமன்றமே கல்விக் கட்டணக் குழுத் தலைவரை 19-ம் தேதிக்குள் நியமித்தாக வேண்டுமென்று கட்டளையிட வேண்டிய நிலைமை அல்லவா ஏற்பட்டிருக்கிறது.அருந்ததியர்க்கான தனி இட ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.துப்புரவுப் பணியாளர்களின் துன்பத்தைத் துடைக்கவும்-அவர் தம் தன்மானம் காக்கவும்; பல திட்டங்களைக் கழக அரசு செயல்படுத்தி வந்தது.குறிப்பாக,மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிச் சுமக்கும் கொடுமையைத் தவிர்க்கும் நடவடிக்கையிலே கழக அரசு முயற்சி மேற்கொண்டது.

அந்தத் திட்டத்திற்காக அப்போது குரல் கொடுத்த மார்க்சிஸ்ட்கள்,இப்போது தோழமை கருதி,வாய் மூடிக் கொண்டிருக்கிறார்கள்போலும்!அந்தப் பணியாளர்களைப் பற்றி இந்த நிதி நிலை அறிக்கையிலே எதுவும் இல்லை.இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு தொடருமா என்ற சந்தேகம் இஸ்லாமியர்களுக்கு உள்ளது. இந்த அய்யப்பாட்டினைப் போக்கிடும் வகையில் அறிவிப்பு எதுவும் இல்லை.மத்திய அரசின் "ஆதார்''திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டவர்கள்,"சாதி வாரிக் கணக்கெடுப்பைப்"பற்றி எதுவும் சொல்லவில்லை.கரும்பு, நெல், பால் போன்றவற்றின் கொள்முதலுக்குக் கூடுதல் விலை தரப் போவதாகத் தேர்தலுக்கு முன்னால் உறுதிமொழி கொடுத்தவர்களின் நிதி நிலை அறிக்கையிலே,அவற்றைப் பற்றியெல்லாம் எந்தக் கருத்தும் இல்லை.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: