வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தமிழகத்தில் இன்று முற்பகலில் நில அதிர்ச்சி...திருச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று லேசான

ஆத்தூர்; தமிழகத்தில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. வீடு, பள்ளிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் பலர் அச்சத்துடன் வீதிக்கு வந்தனர். திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் , நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இன்று காலை சரியாக 11.30 மணியளவில் மேற்கூறிய மாவட்டங்களில் மக்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. பெருத்த சேதம் ஏதும் இல்லையென்றாலும் சிறிய குலுக்கத்தில் மக்கள் நடுங்கிபோயினர்.
சேலம் மாவட்டம் கிழக்குப்பகுதியான ஆத்தூர், தலைவால் பகுதிகளில் சவல்பட்டி, வெத்தூர், முல்லைவாடி, மணிவழுந்தூர், காட்டுக்கோட்டை, சார்வாய், சந்தேரி, வீரகனூர், மும்முடி உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களில் இது உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறினர்.

உணர்ந்தவர்கள் பேட்டி: இது குறித்து மும்முடியை சேர்ந்த திருமால் என்பவர் கூறுகையில்; நான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்தேன். அப்போது திடீரென மேஜை சேர்கள் உருண்டன. அதிர்ந்துபோனேன். உடனே பலரும் வெளியே ஓடி வந்து விட்டோம் என்றார் . தலைவாசல் பகுதி வக்கீல் பாஷாகான் கூறுகையில் ; நான் ஆபீசில் உட்கார்ந்திருந்தேன். திடீரென தலைசுற்றுவது போல் இருந்தது. சில நிமிடங்கள் இதனை உணர்ந்தேன் என்றார். பல பகுதியில் உள்ள ஆபீஸ் ஊழியர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் கட்டடத்தில் இருந்து வெளியேறி வீதியில் நின்றபடி இருந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம், திட்டக்குடிபகுதியிலும், விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட் எரைஞ்சி, எடைக்கால், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியிலும், பெரம்பலூரில் வேப்பந்தட்டை, பகுதியிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. கிராம மக்கள் கூறியதை அடுத்து அரசு அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர். எந்த அளவிற்கு இருந்தது என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த மாதம் இது போன்று நில அதிர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 2.9 ரிக்டர் அளவாக இருந்தது. இந்த முறை 3 ரிக்டர் அளவாக இருக்கும் என தெரிகிறது.
வீடுகளில் விரிசல்: சேலம் மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் சில வீடுகள் விரிசல் அடைந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் வாலி கண்டபுரம் பகுதியில் பழனிவேல் என்பவரது வீடு சேதமடைந்தன.
பள்ளிகளுக்கு விடுமுறை: கடலூர் மற்றும் பெரம்பலூரில் அதிர்ச்சி ஏற்பட்டதை அடுத்து கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருச்சியிலும் நில அதிர்வு : திருச்சியில் நகர்ப்பகுதியான மன்னார்புரம், கண்டோண்மென்ட் , புறநகர்ப்பகுதியான சிறுகானூர், லால்குடி கொனலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த உணர்வு இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

அச்சப்பட வேண்டாம்; கலெக்டர் விளக்கம்: நில அதிர்வு குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நில அதிர்வு காரணமாக பொது மக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை. கடந்த ஜூன் மாதத்திலும் சேலத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. தொடர்ந்து நில அதிர்வு ஏற்படுவது குறித்து ஆய்வு நடத்தப்படும் என கூறியுள்ளார்.

இன்று காலை ஜப்பானில் நில நடுக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: