புதன், 10 ஆகஸ்ட், 2011

அம்மா – ஆணவம் – ஆப்பு!சமச்சீர் கல்வி வழக்கில்

சமச்சீர் கல்வி - அம்மா – ஆணவம் – ஆப்பு!
சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அம்மாவின் ஆணவத்தின் மீது இறங்கியிருக்கும் ஒரு ஆப்பு!
தீர்ப்பை ஒட்டி இன்று இரவு போயஸ் தோட்டத்தில் நிச்சயமாக விசேட பூஜை நடைபெறும். அவ்வமயம், அம்மாவின் திருக்கரங்களால் அடித்து நொறுக்கப்பட்டு அன்னாரது திருவடியிலேயே உயிரை விட இருக்கின்ற ஜடப்பொருட்கள் எவையெவை,  அம்மையாரின் பாதத்துகள் படிந்த காலணிகளால் முத்தமிடப்படும் பாக்கியம் பெற்ற முகங்கள் யாருடையவை என்பதை நாம் அறியோம். ஸ்பெசல் பூஜை உண்டு என்பது மட்டும் உறுதி.
ஒரு அரசாங்கம் ஏதோவொரு வழக்கில் தோற்பதென்பது ஒன்றும் பெரிய அதிசயமில்லை. இந்த வழக்கு பெற்றுவிட்ட முக்கியத்துவத்துக்கு காரணம் இருக்கிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற வழக்கு என்ற காரணத்தினால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றிருப்பின் அதில் நியாயம் இருக்கிறது.
மாறாக இந்த வழக்கு பெற்ற முக்கியத்துவத்துக்கு முதற்காரணம் அம்மாவின் ஆணவம். வெறும் ஆணவமல்ல. அம்மாவின் பின்னே அணிவகுத்து நிற்கும் பார்ப்பன மேட்டுக்குடி மெட்ரிக் கொள்ளைக்கூட்டத்தின் கொழுப்பில் தோய்ந்த ஆணவம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் சமச்சீர் கல்வியைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்த ஜெ, நாற்காலியில் உட்கார்ந்த மறுகணமே அமைச்சரவையில் ஒரு முடிவை எடுப்பதும், சட்டப்பேரவையில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வருவதும் எப்படி சாத்தியமானது?
“நம்மளவா ஆட்சி வந்துடுத்துன்னா அப்புறம் பாத்துக்கலாம்” என்று காத்திருந்த பார்ப்பன மேட்டுக்குடி மெட்ரிக் கொள்ளைக்கூட்டமும், அம்மாவின் மறுவருகைக்குக் காத்திருந்த அதிகார வர்க்கமும் காட்டிய சுறுசுறுப்புதான் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்புலம்.
எது நல்லது எது கெட்டது என்பது பற்றி வாய்திறந்து பேசி விவாதிக்கும் தேவையே இல்லாமல், பார்த்த மாத்திரத்தில் சுருதி சேர்ந்து கொள்ளும் அளவுக்கு அம்மாவுக்கும் அவாளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் ஒரு இசைவு இருக்கிறது.
சமச்சீர் கல்வி என்பது ஒரு குப்பைத்தொட்டி என்றும், இந்தக் குப்பைத் தொட்டியில் விழுந்து பன்றியோடு பன்றியாக நம்முடைய “கன்றுக்குட்டிகளும்” வீணாகப் போய்விடும் என்றும் அட்வகேட் என்.ஆர். சந்திரனும் சோ ராமஸ்வாமியும் டி.ஏ.வி ஸ்கூல் ஃபங்ஷனில் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று மிசஸ் ஒய்.ஜி.பி அம்முவிடம் (அம்மாவிடம்) சொல்லியிருப்பார். முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து செல்ல வந்த மெட்ரிக் பள்ளி அசோசியேஷன் பிரமுகர்களும் லேசாக கண்ணீர் விட்டு மூக்கை சிந்தியிருப்பார்கள். “ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் “தமிழர்களின்” பங்கு குறைந்து கொண்டே வருவது பற்றிய தங்களது கவலையை துவிவேதி, திரிவேதி, சதுர்வேதி முதலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அம்மாவின் காதில் போட்டிருப்பார்கள். அப்புறம் பாடப்புத்தகங்களின் பின் அட்டையில் கருணாநிதியின் கையெழுத்தில் திருக்குறள் அச்சிடப்பட்டிருப்பதை அக்காவின் கவனத்துக்கு கொண்டுவந்திருப்பார் அன்புச் சகோதரி. அம்மா முடிவெடுப்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரங்கள் வேண்டும்?
தனக்குப் புரிந்த மேற்கூறிய காரணங்களை நீதிபதிகளும் புரிந்துகொள்வார்கள் என்று அம்மா எதிர்பார்த்திருக்கிறார். அது நடக்கவில்லை. நீதிபதிகளை நமது எம்ஜிஆரில் கட்டம் கட்டி நீக்குவதற்கான வாய்ப்பும் இல்லை. இத்தகைய இக்கட்டான சூழலில், இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி சுமார் இரண்டரை மாதகாலம் நீதிமன்றத்திற்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரே தொட்டியில் அம்மா தண்ணி காட்டியிருக்கிறார்.
இனி நடக்கப்போவது என்ன? “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அமல்படுத்துவோம்” என்று நேற்று சட்டமன்றத்தில் அம்மா அறிவித்த போது அவையில் மயான அமைதி. இரண்டரை மாதங்களுக்குப் பிறகாவது பாடப்புத்தகம் என்ற ஒன்றை பிள்ளைகளின் கண்ணில் அரசு காட்டவிருப்பதால், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையிலாவது யாராவது ஒரு உறுப்பினர் மேசையைத் தட்டியிருக்கலாம். வலது,இடது போலிகள் உள்ளிட்ட யாரும் தவறிக்கூட மேசையைத் தட்டவில்லை.
காரணம் அம்மா தோற்றிருக்கிறார். அம்மா குமுறிக் கொண்டிருக்கிறார். கடந்த மே மாதம் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயித்தாரே அதே அம்மாதான், இப்போது தோற்றிருக்கிறார். தோற்கடித்தவர்களும் அதே மக்கள்தான்.
எனினும் இரண்டாவது சுற்று விரைவிலேயே துவங்கும். அம்மாதான் துவக்குவார். நாம்தான் முடித்து வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: