வியாழன், 11 ஆகஸ்ட், 2011

பிரிட்டனில் சூறையாடலில் ஈடுபடுவோர் யார்?

london riots 1பி.பி.சி
நிறைய இளைஞர்கள் கடையுடைப்பில் ஈடுபட்டுள்ளனர். அச்சமோ கூச்சமோ இன்றி தைரியமாகத் திருட்டிலும், வேண்டுமென்றே அடுத்தவர்களின் சொத்தை சேதப்படுத்துவதிலும் ஈடுபடும் அந்த இளைஞர்கள் யார்?
பிரிட்டனில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் கலவரங்கள், சூறையாடல்கள் மற்றும் சொத்து சேதங்களில் ஈடுபட்டவர்கள் என்று தெரிவிக்கப்படும் ஆட்கள் சிலரின் படங்களை நாட்டின் நாளேடுகள் பலவும் வெளியிட்டு வருகின்றன.
இந்தப் படங்களைப் பார்த்து அதில் காணப்படுவோர் யாரையும் அடையாளம் தெரிந்தால் பொலிசில் தெரிவிக்குமாறு இந்தப் பத்திரிகைகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்தப் படங்களை எல்லாம் பார்த்தால் கலவரங்களில் ஈடுபட்டவவகள் பெரும்பாலும் இளைஞர்களாகவே தோன்றுகின்றனர்.

கருப்பினத்தார், வெள்ளையினத்தார், யுவதிகள், சிறுவர்கள் போன்றோரும் அட்டூழியங்களில் ஈடுபட்டனர். கருப்பினத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள், வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
பொதுப்படையாகச் சொல்லவேண்டுமானால், இவர்கள் எல்லாம் ஏழ்மையான வட்டாரங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர் எனலாம்.
ஆனால் இவர்களில் பெரும்பான்மையானோர் குறிப்பிட்ட ஒரு இனப் பின்னணி கொண்டுவர்கள் என்று கூறமுடியாது.
கலவரங்கள் ஆரம்பித்த சமயத்தில் இவர்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படி இல்லை என்பது போகப்போக தெளிவாகிவிட்டது.
லண்டனில் பர்மிங்ஹாம் போன்ற நகரங்களில் பல்வேறு இனத்தாரும் சேர்ந்து வாழக்கூடிய வட்டாரங்களிலும் தீ பரவ, கருப்பின இளைஞர்கள் தான் இந்த வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் என்ற தப்பபிப்ராயம் அகன்றுவிட்டது.
சூறையாடல்களில் ஈடுபடுவோரை பொலிசார் சந்தர்ப்பவாத குற்றவாளிகள் என்று வருணிக்கின்றனர். எந்தப் பிரச்சினையும் வராது என்று தெரிவதால்தான் தாங்கள் கடைகளை உடைத்து பொருட்களை எடுத்துச்செல்வதாக மான்செஸ்டர் நகரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சொல்கின்றனர்.
இந்தக் சூறையாடல்களில் பத்து வயதுப் பிள்ளைகள் கூட ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு லண்டனிலும் சரி, வேறு பல இடங்களிலும் சரி, இந்த அட்டூழியங்களில் பதின்ம வயது விடலைப் பெண்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.
"இந்த மாதிரியான அட்டூஷியங்கள் தங்கள் கண் முன்னர் அரங்கேறுவதை பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, அட நாமும் இதையெல்லாம் செய்து பார்க்கலாமே என்று சட்டெனத் தோன்றும்."
இந்தக் கலவரங்களைச் செய்வோரில் கொஞ்சம் பேர் ஏற்கனவே காவல்துறையின் பார்வையில் விழுந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் தைரியம் வந்து அட்டூழியங்கள் செய்வோர்தான் நிறைய பேர் எனகுற்றவியல் நிபுணர் பேராசிரியர் ஜான் பிட்ஸ் கூறுகிறார்.
"இந்த மாதிரியான அட்டூஷியங்கள் தங்கள் கண் முன்னர் அரங்கேறுவதை பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, அட நாமும் இதையெல்லாம் செய்து பார்க்கலாமே என்று சட்டெனத் தோன்றும். தாங்களும் கடையுடைப்பிலும் திருட்டிலும் ஈடுபடலாம் என அவர்களுக்கு தைரியம் பிறந்துவிடுகிறது." என பேராசிரியர் பிட்ஸ் கூறினார்.
சந்தர்ப்பவாதம் என்பதும் இந்த அட்டூழியங்களுக்கு ஒரு பங்கில் காரணமாக உள்ளது என்றாலும், இவற்றில் ஈடுபடும் இளைஞர்கள் பலர் தாங்கள் சமூகத்தின் மீது ஏதோ ஒரு வகையில் விரக்தி அடைந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் வறுமைதான் இந்த அட்டூழியங்களுக்கு காரணம் என்று எளிதாக முடிச்சுப்போடுவது ஆபத்தானது என பிரிட்டிஷ் கல்வித்துறை அமைச்சர் மைக்கெல் கொவ் எச்சரித்துள்ளார்.
வன்முறைகள் ஆரம்பமானதிலிருந்து நாட்டில் இதுவரை 1200 பேர் கைதாகியுள்ளனர். தவிர வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியிலும் துப்பறியும் பொலிசார் நிறையபேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கலவரத்திலும் சூறையாடல்களிலும் ஈடுபட்ட இளைஞர்கள் பலரின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. நிறைய பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: