சனி, 13 ஆகஸ்ட், 2011

கோதுமை மாவில் 80% தவிடு உறுதிப்படுத்த சட்டம் இலங்கையில் அரைக்கப்படும் மாவில் 26 வீதமே தவிடு

இலங்கையில் அரைக்கப்படும் கோதுமையில் 80 சதவீதம் தவிடு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சு விசேட சட்ட ஏற்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டுப் பிரிவு பல மட்டக்கலந்துரையாடல்களை நடாத்திய பின்பே இவ்விடயம் தொடர்பாக சட்ட ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறுகையில் வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டுத் தான் இங்கு அரைக்கப்படுகின்றது. இச்சமயம் கோதுமை விதையில் 74 சதவீதம் தவிடு நீக்கப்படுகின்றது. இதனால் எஞ்சுவது மாப் பகுதி மாத்திரமே. இதனைக் கொண்டு தான் பாண் உள்ளிட்ட கோதுமை மாவிலான உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் விட்டமின் வகைகளோ நார்ப் பொருட்களோ கிடையாது. நீரிழிவு உள்ளிட்ட பல தொற்று நோய்களுக்கும் இந்த கோதுமை மா துணை புரிகின்றது.
கோதுமையின் தவிட்டில் தான் விட்டமின் வகைகளும் நார்ப் பொருட்களும் பெருமளவு காணப்படுகின்றன. ஆயினும் அந்த தவிடு கோதுமை விதை எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறதோ அதே நாட்டுக்கே திரும்பவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இலங்கையில் அரைக்கப்படும் கோதுமையில் தற்போது 26 சதவீதமே தவிடு காணப்படுகின்றது. இதனை 80 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கென விசேட சட்ட ஏற்பாடொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது என்றார்.
நன்றி மகாவலிwww.mahaveli.com

கருத்துகள் இல்லை: