திங்கள், 1 ஆகஸ்ட், 2011

ராஜாத்தி அம்மாள் மறுப்பு,நில அபகரிப்பு: கைதான ரமேஷ் என்னிடம் பணியாற்றவில்லை

சென்னை: திருச்சியில் நிலம் அபகரிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் எந்தக் காலத்திலும் தன்னிடம் கணக்காளராக பணியாற்றியதே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கூறியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள எடமலைப்பட்டிபுதூர் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் 31 பேர் நிர்மலா தேவி என்பவர் தலைமையில் கடந்த ஜூலை 25ம் தேதி திருச்சி, டி.ஆர்.ஓ. பேச்சியம்மாளிடம் புகார் கொடுத்தனர்.
அதில், ராஜிவ் நகரில் 1.4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், 31 குடும்பங்கள் வசித்து வந்தோம். காரைக்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் புஞ்சை நிலத்துக்கு முன், இந்த புறம்போக்கு நிலம் உள்ளது.
ஊர் தலைவர் ஒப்புதலின் பேரில் கடந்த 20 ஆண்டாக வீடு கட்டியும், குடிசை அமைத்தும் குடியிருந்து வருகிறோம். அந்த பகுதியிலிருந்து அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தெரு விளக்கும் அமைத்திருந்தனர். அந்த இடத்துக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று, அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவிடம் கேட்டோம்.

இந் நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் கணக்குப் பிள்ளையாக உள்ள ரமேஷ் மற்றும் காரைக்குடியை சேர்ந்த, ரியல் எஸ்டேட் அதிபர் தம்பி ராஜா ஆகியோர் சதுரஅடிக்கு 200 ரூபாய் தருகிறோம் இடத்தை காலி செய்யுங்கள் என்று மிரட்டினர்.
நாங்கள் மறுத்துவிட்டோம். இந் நிலையில் அங்கு காலியாக இருந்த மற்றொருவர் இடத்தில் தம்பிராஜா, காளிதாஸ் ஆகிய இருவரும் குடிசை போட்ட போது, நாங்கள் தட்டிக் கேட்டோம். அப்போது ஆட்சி மற்றும் அதிகார பலம் இருந்ததால் எங்களுக்கு ரமேஷ் தரப்பினர் தொடர்ந்து பல வகையிலும் தொல்லை தந்தனர்.
அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, நீதிமன்ற உத்தரவையும் மீறி, எங்களது வீடுகளை இடித்துத்தள்ளி, தரைமட்டமாக்கினர் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.
மேலும் ரமேஷ், தம்பிராஜா ஆகியோர் தவிர, அவர்களுக்குத் துணை போன டி.ஆர்.ஓ, தாசில்தார், வருவாய் அதிகாரி உள்பட அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இந்தப் புகாரை போலீசாருக்கு டி.ஆர்.ஓ. அனுப்பி வைத்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த வந்த போலீஸார் ரமேஷைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அதே போல ரியல் எஸ்டேட் அதிபர் தம்பிராஜாவையும் கைது செய்தனர். ரமேஷ் மீது எடமலைப்பட்டி புதூர் போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராஜாத்தி அம்மாள் மறுப்பு:
இந் நிலையில் ராஜாத்தி அம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நாளேடுகளில் இன்று வெளிவந்த செய்தியில், திருச்சியில் பல குடும்பங்களிடம் நிலப்பறிப்பு நடைபெற்றதாகவும், அதற்கு காரணம் யாரோ ரமேஷ் என்ற பெயரில் என்னிடம் கணக்காளர் பணி புரிந்தவர் தான் என்றும் அவரை கைது செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னிடம் எந்தக் காலத்திலும் ரமேஷ் என்ற பெயரில் யாரும் கணக்காளராகப் பணிபுரியவில்லை என்பதையும், ஏடுகளில் வந்துள்ள செய்திக்கும், எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரமேஷ் என்பவர் என்னிடம் கணக்காளராகப் பணி புரிந்தவர் என்று இனி எந்த ஏடுகள் செய்தி வெளியிட்டாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையினை நான் தொடர்வேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: