திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நிலத்தை விற்றவர்களே அபகரித்ததாக புகார்: சிவகங்கை போலீசார் திணறல்

பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தை விற்றவர்களே அபகரித்ததாக புகார் கொடுப்பதால், தீர்வு காண முடியாமல் நில அபகரிப்பு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.கடந்த தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சிலர்,கட்சி நிர்வாகிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நில அபகரிப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.விசாரணையில் தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை தி.மு.க.,வினர் சிலர் அபகரித்துள்ளதும் தெரியவந்தது. இது போன்ற குற்றங்களை தடுப்பதற்காக, மாவட்ட வாரியாக நில அபகரிப்பு குற்றத்தடுப்பு பிரிவினை அ.தி.மு.க., அரசு ஏற்படுத்தியது. இப்பிரிவினர் நேரடியாக நில அபகரிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிய வேண்டும். உறவினர்களிடையே நிலம் சம்பந்தமாக வழக்கு கோர்ட்டில் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டாம். ஏற்கனவே, மனப்பூர்வமாக நிலத்தை விற்றவர்கள் மீண்டும் வந்து புகார் செய்தால், அதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்று பல கட்டுப்பாடுகளை விதித்தது.இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் 50க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்கள் வந்துள்ளன. அதில், பெரும்பாலும் ஏற்கனவே நிலத்தை விற்றவர்கள், தங்களை மிரட்டி நிலத்தை அபகரித்தாக புகார் செய்து வருகின்றனர். இதனால், நடவடிக்கை எடுக்க முடியாமல் இப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" இப்பிரிவை நல்ல நோக்கத்திற்காக அரசு கொண்டு வந்தது. ஆனால், ஏற்கனவே குடும்ப கஷ்டம், வறுமை கருதி நிலத்தை குறைந்த விலைக்கு விற்றவர்கள், பெரும்பாலும் இன்றைக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்ற ஆசையில், புகார் தருகின்றனர். இதனால், நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறோம்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: