புதன், 3 ஆகஸ்ட், 2011

சானல் 4வுக்கு இலங்கை அரசின் பதில் வீடியோ


- பி.பி.சி
சானல் 4 தொலைக்காட்சியில் கடந்த காலங்களில் வெளியான விவரணப் படங்களில் இலங்கைப் படையினர் பெருமளவு போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.இப்போது ‘லைஸ் அக்ரீட் அப்ஒன்’ என்ற தலைப்பில், அதாவது, சனல் 4 இல் வெளியான விவரணப்படத்தை பொய்களாலானது என்று பிரசாரம் செய்யும் பாணியில் ஆங்கில மொழியிலான விவரணப் படமொன்று தற்போது இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சானல் 4 இல், இலங்கை அரசாங்கமும் படையினரும் புரிந்துள்ளதாக கூறப்பட்ட பல குற்றச்செயல்களை மறுக்கும் இந்த படம், வீடியோ காட்சிகள் போலியாக தொகுக்கப்பட்டு, உண்மையானவையாக காட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்போது, இலங்கை அரசின் பொறுப்பில் முகாம்களில் இருக்கின்ற முன்னாள் போராளிகள், விடுதலைப் புலி தலைவர்களின் குடும்பத்தினர், முன்னர் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வன்னிப் பிரதேசத்து மருத்துவர்கள், விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை பொறுப்பாளராக இருந்து பின்னர் அரசிடம் சரணடைந்த தயா மாஸ்டர் மற்றும் இன்னும் சில பொதுமக்கள் என பலரின் கருத்துக்களுடன் இலங்கை அரசு சார்பில் வெளியாகியுள்ள விவரணம் படம் வெளியாகியுள்ளது.
வன்னிப் பகுதியில் போர் உச்சமடைந்த கட்டத்தில், பாதுகாப்பைக் காரணம் காட்டி ஐநா அலுவலகத்தை அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கத்தால் கூறப்பட்டபோது, விடுதலைப்புலிகளின் கட்டாயப்படுத்தலின் பேரிலேயே, அங்கிருந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தியதாக இந்தப் படம் காட்டியுள்ளது.
இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றமை தவறு என்று கூறியுள்ள இந்த விவரணப்படம், கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியா உண்மையில் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் என்றும் விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்துள்ள ரமேஷின் காலத்திலேயே, காத்தான்குடி, அரந்தலாவ போன்ற இடங்களில் விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீதான படுகொலைகளை புரிந்தனர் என்றும் பிரசாரப்படுத்துவதில் இலங்கை அரசு சார்பான வீடியோ அக்கறை காட்டியுள்ளது.

சானல் 4 கூறுவது போல மருத்துவமனை மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படவில்லையென்றும் இறுதிக்கட்டப் போரின்போது அங்கிருந்து வெளியேறமுயன்ற பொதுமக்களைப் புலிகள் சுட்டுக்கொன்றதாகவும், இடைத்தங்கல் முகாம்களில் பெண்களுக்கு எவ்வித துன்பமும் கொடுக்கப்படுவதில்லையென்றும் அதில் வாதிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலி தலைவர்களின் குடும்பத்தினர் சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும் அரசின் கட்டுப்பாட்டில் இப்போது இருக்கின்ற, மறைந்த தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி ஆகியோர் இந்த வீடியோவில் கூறியுள்ளனர்.

இதுதவிர, கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பல்வேறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களையும் இலங்கை அரசு சார்பான இந்த விடியோ ஒளிபரப்பத்தவற வில்லை.
'40 ஆயிரம் பேர்'
இதேவேளை, இலங்கையில் நடந்த போரின் இறுதிக்கட்டச் சம்பவங்கள் தொடர்பாக ஐநா தலைமைச் செயலர் பான்கிமூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு, அங்கு இறுதிக்கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை மறுக்க முடியாதுள்ளது என்று கூறியுள்ளது.

நிராயுதபாணிகள் சுட்டுக் கொல்லப்படுவதாக சானல் 4 வில் வெளியான காட்சிகள் உண்மையானவை தான் என்று ஐநாவின் தொழிநுட்ப வல்லுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக சானல் 4 கூறியுள்ளது.

இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடக்கும் வரை, சர்வதேச ஊடகவியலாளர்களோ அல்லது சர்வதேச கண்காணிப்பாளர்களோ முன்னர் போர் நடைபெற்ற இடங்களுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: