ஞாயிறு, 31 ஜூலை, 2011

எடியூரப்பா.ஷிமோகா ராசி: மூன்று முதல்வர்களும் பாதியிலேயே

பாரதிய ஜனதா மேலிடத்தில் இருந்து கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ள எடியூரப்பா, கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியை சேர்ந்தவர். ஷிமோகா பகுதியில் இருந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து முழு ஆட்சிக்காலமும் பதவியில் நீடிக்காத மூன்றாவது முதல்வராகவும் அவர் ஆகியுள்ளார். எஸ்.பங்காரப்பா, ஜே.எச்.பட்டேல் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெறும் மற்ற இருவர்.பங்காரப்பா, காங்கிரஸில் இருந்தபோது, 1990இல் முதல்வரானார். ஆனால், காங்கிரஸ் மேலிடத்தின் வற்புறுத்தலை அடுத்து, 1992இல் பதவி விலகினார். தேவகவுடா பிரதமர் பதவிக்கு தேர்வானதை அடுத்து, அவருக்குப் பிறகு முதல்வராக 1997ல் கர்நாடக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் பட்டேல். ஆனால், அவருக்கு எதிரான உள்ளடி வேலைகளால் 1999ல் அவர் அரசு கவிழ்ந்து, முதல்வர் நாற்காலியை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.இன்னும் கர்நாடகத்தில் முதல்வர் பதவியை முழுதாக முடிக்காமல் பதவி விலகிய இருவரில் ஒருவர் தரம் சிங். இவர் கங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி முதல்வராகப் பதவியில் இருந்தார். ஆனால் ஜேடிஎஸ் காலை வார, தரம்சிங் பதவியில் இருந்து இறங்க வேண்டியதாயிற்று. அடுத்து, 2007ல் குமாரசாமி ஜனதா தள(ம) பாஜக கூட்டணி முதல்வராக இருந்தார். கூட்டணிக் குழப்பத்தால் பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொள்ள அவரும் பதவியில் இருந்து இறங்க வேண்டியதாயிற்று.தென்மேற்கு கர்நாடகத்தின் ஷிமோகாவிலிருந்து வந்த மூன்று முதல்வர்களும் பாதியிலேயே பதவியில்  இருந்து இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை: