ஞாயிறு, 21 மே, 2017

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா ராகுல் அஞ்சலி!

மின்னம்பலம் :புது டில்லியில் ராஜீவ் காந்தி நினைவிடமான வீர் பூமியில்,
ராஜீவ் காந்தியின் 26-வது நினைவு தினத்தையொட்டி இன்று மே 21ஆம் தேதி அவரது மனைவியும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி , பிரியங்கா மற்றும் ராபர்ட் வதோரா,
காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் ராஜீவ் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு 1984இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 404 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றதையடுத்து, ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமரானார். 1984ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்திய நாட்டின் பிரதமராக இருந்த ஐந்தே ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரும் சாதனைப் படைத்த ராஜீவ் காந்தி, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்காக 33 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர். மேலும், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தி லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கியவர்.
இந்நிலையில்,1991ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்காக ராஜிவ் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி இரவு 10.10-க்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபோது மனித வெடிகுண்டுகளால் பயங்கரமாக கொலை செய்யப்பட்டார். அதையடுத்து, ராஜீவ் காந்தி இறந்த தினமான மே 21ஆம் தேதியைப் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், இந்த தினத்தன்று நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். அதையொட்டி, இன்று மே 21ஆம் தேதி அவரது 26ஆவது நினைவுநாள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி உருவப்படத்துக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை: