செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

நெடுஞ்செழியன் மற்றும் கருணாநிதி. இருவருமே தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று அண்ணாவிடம்

12 ஜனவரி 1967 அன்று வெளியான ஒரு செய்தி தேர்தல் களத்தை வெப்பமாக்கியது. ஆம். ராமாவரம் தோட்டத்தில் வைத்து எம்.ஜி.ஆர் சுடப்பட்டார்; சுட்டவர் எம்.ஆர். ராதா; அந்தச் செய்தி தமிழ்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் சென்றடைந்தது. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொந்தளித்துப் போயினர். எங்கு பார்த்தாலும் கலவரம். வன்முறை. மறுநாள் முரசொலி இதழில் செய்தி வெளியாகி இருந்தது.
புரட்சி நடிகர் என்று கழகத் தோழர்களாலும் மக்கள் திலகம் என்று பொதுமக்களாலும் கொடை வள்ளல் என்று மாற்றுமுகாமில் இருப்பவர்களாலும் போற்றிப் புகழப்படும் நமது அருமைச் சகோதரர் எம்.ஜி.ஆர் அவர்களைச் சுட்டுக்கொல்வதற்கு நடைபெற்ற முயற்சி தோல்வியுற்று, நமது கழகக் கலைமாமணியை நாம் உயிருடன் திரும்பப் பெற்றோம்.
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அங்கிருந்தபடியே மனுவில் கையெழுத்திட்டு வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுத்தவர் என்.வி. நடராசன். பரங்கிமலை தொகுதி அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. திமுகவின் பிரதான பிரசார பீரங்கியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். கடந்த தேர்தலின்போது சூறாவளிப் பிரசாரம் செய்தவர். அதற்குப் பரிசாக மேலவை உறுப்பினர் பதவியைப் பெற்றவர். தற்போது குண்டடி பட்டிருந்ததால் அவருக்குப் பதிலாக அவர் கட்டுடன் இருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்ற சுவரொட்டிகள் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டன. பிரசார வாகனங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
பிரசாரம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சூழலில் ஆனந்த விகடன் இதழில் கேலிச்சித்திரம் ஒன்று வெளியானது. அண்ணா, ராஜாஜி, காயிதே மில்லத், ம.பொ. சிவஞானம், பி. ராமமூர்த்தி ஆகியோர் கழுதை மீது ஏறிக்கொண்டு கோட்டை நோக்கிச் செல்வதாக அந்தச் சித்திரம் வரையப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர்களை அவமதிக்கும் வகையில் வரையப்பட்ட அந்தக் கேலிச்சித்திரத்தை சுவரொட்டியாக மாற்றிப் பிரசாரம் செய்தது காங்கிரஸ் கட்சி.
ஆவேசம் வந்துவிட்டது கருணாநிதிக்கு. காரணம், காங்கிரஸ் கட்சியின் குறைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒட்டும் சுவரொட்டிகளை அனுமதிக்க மறுத்த காங்கிரஸ் அரசு, அந்த அரசியல் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது ஆபாச சுவரொட்டி தடுப்புப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுத்தது. தற்போது கழுதை சுவரொட்டி விஷயத்தில் காங்கிரஸ் அரசு மெளனம் காப்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். மயிலாப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அது வெளிப்பட்டது.
எவ்வளவு அரசியல் அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் கழிசடைப்புத்தியும் இருக்குமேயானால் மரியாதைக்கும் வணக்கத்துக்கும் உரிய தலைவர்களைக் கழுதை மீது வைத்துப் படம் போட்த் துணிவீர்கள்? நாங்கள் நாட்டுநிலையைச் சித்திரித்துப் படம் போட்டால் அதை எடுக்க மட்டும் ஓடோடி வருகிறீர்களே? எவ்வளவு நாளைக்கு இந்த அதிகாரம் செய்ய முடியும் ஆட்சியாளர்களே! அதிகாரிகளே! இன்னும் ஆறே நாள்! அதிகாரம் மாறும்!
தேர்தல் நெருங்கிய சமயத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அண்ணா. ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவதாக காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டால் திமுக தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளும் என்றார் அண்ணா. அதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர்கள், ‘திமுகவால் முடியுமா?’ என்று சவால் விடுத்தனர். இதற்காகவே காத்துக் கொண்டிருந்த அண்ணா, ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி நிச்சயம் என்ற தேர்தல் வாக்குறுதியைக் கொடுத்தார்.
தினத்தந்தி அதிபர் சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கம் அப்போது திமுக கூட்டணியில் இருந்தது. அண்ணாவின் மூன்று படி அரிசி வாக்குறுதி தினத்தந்தியின் உதவியால் அனைத்துத் தரப்பு மக்களையும் மின்னல் வேகத்தில் சென்றடைந்தது. நடப்பவை அனைத்துமே திமுகவுக்குச் சாதகமாக இருந்தன. அது, தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதே திமுக வேட்பாளர்கள் பலரும் வெற்றிமுகத்தில் இருந்தனர். மெல்ல மெல்ல வெற்றிச் செய்திகள் வரத் தொடங்கின. அப்போது அண்ணாவின் வீட்டில் இருந்த கருணாநிதிக்கு ஒரே வேலைதான். தொலைபேசியில் எண்களைச் சுழற்றுவது; தினந்தந்தி நிருபர்களிடம் செய்தி சேகரிப்பது; மறுநொடி அண்ணாவுக்குத் தகவல் சொல்வது. அப்போது அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. விருதுநகரில் காமராஜர் தோல்வி.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானபோது திமுக 138 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையைக் காட்டிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி அகற்றப்பட்டது. சைதாப்பேட்டையில் பதினோரு லட்சம் (கருணாநிதி) வெற்றிபெற்றிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு அபாரவெற்றி. 25 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது திமுக. தென் சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து அண்ணா வெற்றி பெற்றிருந்தார்.
1 மார்ச் 1967 அன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கூடியது. யார் திமுகவின் சட்டமன்றக்குழுவின் தலைவர் என்பது முக்கியமான கேள்வி. ஏனென்றால், அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அண்ணா சட்டமன்றத்துக்குத் தேர்வாகவில்லை. மாறாகம் தென்சென்னை மக்களவை உறுப்பினர். எனினும், சட்டமன்றத்துக்குத் தேர்வாகாமலே சட்டமன்றக் குழுவுக்குத் தலைவராகலாம்; முதலமைச்சராகலாம்; ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றத்துக்கோ அல்லது சட்டமன்ற மேலவைக்கோ தேர்வுபெற்று முதலமைச்சர் பதவியில் தொடரலாம் என்ற விதிமுறைகளின்படி திமுகவின் சட்டமன்றக் குழுவின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார் அண்ணா.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் உஜ்ஜல் சிங்கைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய அண்ணா, உடனடியாகத் திருச்சி புறப்பட்டார் அண்ணா. ஆம். பெரியாரைச் சந்திக்க. வாழ்த்துகளைப் பெற. பதினெட்டு ஆண்டுகளாகப் பிரிந்திருந்த இரண்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அபூர்வ சந்திப்பு. அருகே நெடுஞ்செழியனும் கருணாநிதியும் சாட்சிகளாக நின்றிருந்தனர்.
அடுத்து அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம்பெறவேண்டும் என்பது பற்றிய பேச்சுகள் எழுந்தன. கட்சி தொடங்கிய பதினெட்டு ஆண்டுகளில் கட்சி வளர்ச்சிப் பணியில் ஏராளமான தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்; போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்; உழைப்பைச் செலுத்தியுள்ளனர்; சிறையில் அடைபட்டுள்ளனர்; தியாகங்களைச் செய்துள்ளனர்; சொத்துசுகங்களை இழந்துள்ளனர். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டுமே என்ற கவலை அண்ணாவுக்கு.
அதைப் புரிந்துகொண்டவர்கள் இருவர். நெடுஞ்செழியன் மற்றும் கருணாநிதி. இருவருமே தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று அண்ணாவிடம் கேட்டுக்கொண்டனர். இத்தனைக்கும் கருணாநிதிக்கு போலீஸ் இலாகா ஒதுக்கப்படும் என்ற செய்தி உலவிக் கொண்டிருந்தது. அண்ணாவுக்கே நேரடியாக சில தந்திகள் அனுப்பப்பட்டிருந்தன.
தீவிர யோசனைகளுக்குப் பிறகு அண்ணா தன்னுடைய அமைச்சரவைப் பட்டியலைத் தயாரித்தார். நெடுஞ்செழியனுக்குக் கல்வித்துறை. மதியழகனுக்கு உணவுத்துறை. ஏ.கோவிந்தசாமிக்கு விவசாயத்துறை. சாதிக் பாட்சாவுக்கு சுகாதாரத்துறை. சத்தியவாணி முத்துவுக்கு அரிசன நலத்துறை. மாதவனுக்கு சட்டத்துறை. முத்துசாமிக்கு உள்ளாட்சித்துறை. திமுகவின் பொருளாளரான கருணாநிதிக்கு அண்ணா ஒதுக்கிய துறை, பொதுப்பணித்துறை!
6 மார்ச் 1967 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில் திமுக அமைச்சரவை பதவியேற்றது. அதற்கடுத்த பத்தாவது நாள் பெரியாரிடம் இருந்து அறிவுரை ஒன்று வந்தது. அண்ணாவுக்கு அல்ல; கருணாநிதிக்கு!
0

கருத்துகள் இல்லை: