டென்மார்க் உட்பட சில வெளிநாடுகளின் நிதியுதவியுடன் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர், 300 கோடி டொலர் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தக் கைச்சாத்தொன்று அடுத்த மாதம் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று மீள்பிடித்துறை மேம்பாடு தொடர்பில் ஐ. ம. சு. முன்னணி எம். பி. விக்டர் அந்தனி முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்; 2013 ஆண்டிற்குள் நாட்டில் மந்தபோசனத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நூற்றுக்கு 11 வீதமான மீன் பாவனையை நூற்றுக்கு 24 வீதமாக அதிகரிக்கத் தேவையான வேலைத்திட்டங்களை அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
நாட்டின் தேசிய மீன் தேவையில் 43 வீதத்தை வடக்கு கிழக்கிலிருந்தே நாம் கடந்த காலங்களில் பெற்றுக் கொண்டுள்ளோம். அந்நிலையை மீண்டும் தோற்றுவிப்பதற்காக அப்பகுதி மீனவர்களுக்கான சகல உபகரணகள் உதவிகளையும் வழங்கவுள்ளோம்.
இரணை மடுக்குளத்தை மீன் வளர்ப்புக்காகப் பெற்றுத்தருமாறு நான் பாதுகாப்பு அமைச்சர் போதாபய ராஜபக்ஷவைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
விரைவில், அக்குளத்தில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட அப்பிரதேச மக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அம்மக்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்களையும் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.
வடக்கில் இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகளில் மீன் பிடிப்பது பிரச்சினையாகியுள்ளது. இது சர்வதேசம் சம்பந்தமான பிரச்சினை என்பதால் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி இதற்குத் தீர்வு காண எண்ணியுள்ளேன்.
வடக்கு, கிழக்கு மற்றும் உடவளவை, தம்புள்ளை உள்ளிட்ட குளங்களில் நன்னீர் வளர்ப்புக்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 40 மில்லியன் மீன் குஞ்சுகளை அப்பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளோம்.
பால், மீன் எனப்படும் (MilK, Fish) மீன்வகை வடக்கில் பிரசித்தி பெற்றது. மலேசிய நிபுணர்களுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வகை மீன்களின் பெருக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இறால் வளர்ப்பிற்காக விசேட திட்டமொன்று வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கென மட்டக்களப்பில் 2820 ஏக்கர் காணியும் திருகோணமலையில் 2220 ஏக்கரும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக் கடல் பிரதேசத்தில் நாம் 1.4 மில்லியன் இறால் குஞ்சுகளை வளர்ப்புக்காக வழங்கியுள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக