சனி, 28 மே, 2011

டெல்லி கோர்ட்டில் கோபாலபுரம்! எமோஷனல் கெட்-டு-கெதர்


எமோஷனல் கெட்-டு-கெதர்அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும் திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது. அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந் தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே...
சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு 23-ம் தேதி வந்த கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 'மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் சந்திக்கக் கூடாது’ என்பதால், தன் மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி ஆகியோரை அங்கே அனுப்பிவைத்தார் அழகிரி.
கனிமொழி மீது மிகுந்த அன்பு பாராட்டுபவர் கயல்விழி. அதனாலோ என்னவோ... கனிமொழியைக் கண்டதும் 'அத்தே...’ எனக் கதறத் தொடங்கிவிட்டார் கயல். கனிமொழியைத் தோளோடு சாய்த்து காந்தி ஆறுதல் சொல்ல, ராஜாத்தி அம்மாளுக்கும் கண் கலங்கிவிட்டது. மதுரையில் துரை தயாநிதியின் திருமணத்துக்குப் பிறகு, காந்தியும் ராஜாத்தியும் அன்றுதான் சந்தித்தனர். நடுவில் கனிமொழி, இடப்புறம் காந்தி, வலப்புறம் கயல்விழி என அமர்ந்து நிறைய நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
''இந்த விவகாரத்தில் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியவே இல்லை அண்ணி. கலைஞர் டி.வி-யில் நான் பங்கு கேட்கலை. கையெழுத்துப் போடச் சொன்னாங்க, போட்டேன்...!'' என காந்தியிடம் கனிமொழி உருக்கமாகச் சொல்ல, ''எல்லாத்தையும் அண்ணன் பார்த்துப்பார். நீ தைரியமா இரு!'' என்றார் அவர் ஆறுதலாக!
கயல்விழியிடம் நெடுநேரம் பேசிய கனிமொழி, சகஜ நிலைக்கு வந்தார். சரத்குமாரின் உறவினர்களிடம், 'தைரியமாக இருங்கள்!’ என கனிமொழியே ஆறுதல் வார்த்தார். ''கோர்ட்டில் விசாரணை தொடங்க இன்னும் நேரம் ஆகுமா?'' என காந்தி அப்பாவியாகக் கேட்க, ''தாமதம் ஆகுறது நல்லதுதான் அண்ணி. உங்களோட இன்னும் கொஞ்ச நேரம் இங்கே பேசிக்கிட்டு இருக்கலாம். இல்லேன்னா, சீக்கிரமே ஜெயில்ல போய்த் தனி ஆளா உட்கார்ந்து இருக்கணும்!'' எனச் சொல்லி கனி சிரிக்க, எல்லோருக்குமே கண்ணில் நீர் கோத்துக்கொண்டது.

நீதிமன்ற நிகழ்வுகள் முடிந்து சிறைக்குச் செல்லும் நேரம் வந்ததும், ''ஆதியைப் பத்திரமா பார்த்துக்கோங்க!'' என்றபடியே கையசைத்துக் கிளம்பினார் கனி.
அன்று மாலை திகார் சிறைக்கு கருணாநிதி வர, அங்கே பெரிய பாசப் போராட்டமே நடந்தது. கனிமொழிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, 'நான் டெல்லியிலேயே தங்கிடவாம்மா?’ எனக் கருணாநிதி தழுதழுக்க, 'எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்பா... நீங்க தைரியமாப் போங்க!’ என நம்பிக்கை ஊட்டினார்.
சிறை சந்திப்பு முடிந்தும் கருணாநிதிக்கு சென்னை திரும்ப மனம் இல்லை. ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரிடம், 'சட்டரீதியா மேற்கொண்டு என்ன செய்ய முடியும்?’ என்பது குறித்து விசாரித்தார். இதற்கிடையில், அடுத்த நாள் ஸ்டாலின் டெல்லிக்கு வந்தார். சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழியிடம் இந்தத் தகவல் சொல்லப்பட, அவருக்கு நம்ப முடியாத ஆச்சர்யம்.
ஸ்டாலினை சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார் கனி. ''என்னால் அப்பா ரொம்ப சங்கடப்படுறார். அதான் வருத்தமா இருக்கு!'' என்பது மட்டுமே கனி காட்டிய ஆதங்கம். கனி, ஸ்டாலின், ஆதித்யன் மூவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, அதனை ஒருவர் செல்போனில் படம் எடுத்தார். இதில் கடுப்பான ஸ்டாலின், 'அவனைப் பிடிங்கய்யா...’ என்றார் ஆவேசமாக. தி.மு.க. புள்ளிகள் அந்த நபரைத் துரத்திப் பிடித்து அந்தப் படத்தை அழித்தனர். அடுத்த கட்ட சட்டரீதியான முன்னேற்பாடுகள் குறித்து சொல்லி, ஸ்டாலின் கனிமொழியைத் தேற்ற, ''அவ்ளோ சீக்கிரம் பெயில் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். சிறையில் இருப்பதை ஒரு புது அனுபவமா நினைச்சு என்னை நானே தேத்திக்கிறேன்!'' என்றார் கனி. ராஜாத்தி அம்மாளும் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசினார்.
அன்று மாலை... டெல்லி மீடியாக்களுக்கே தெரியாதபடி முக்கியமான ஒரு சந்திப்பு திகார் சிறைச்சாலையில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரியும் தயாநிதி மாறனும் சிறையில் கனியை சந்திக்க அனுமதி கேட்டனர். தயாநிதி மாறன் வந்திருப்பதை, கனியால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை!
ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்குப் பிறகு தயாநிதியை, கனிமொழி சந்திப்பதே இப்போதுதான். அழகிரியிடம் மனம்விட்டுப் பேசிய கனிமொழி, தயாநிதியிடம் நலம் விசாரித்தார். அப்போது ஆறுதலாக தயாநிதி சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். இருவரை யும் சமாதானப்படுத்தும் விதமாக அழகிரி, குடும்ப விவகாரங்களை உரக்கப் பேசி இருக்கிறார். இறுதியில் கனிமொழியைத் தட்டிக்கொடுத்து, ''நானும் சிறைவாசம் அனுபவிச்சவன்தான். ஆனா, அப்போகூட இந்த அளவுக்கு சங்கடப்பட்டது இல்லை. நீ தைரியமாப் பேசினாலும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா. சீக்கிரமே உன்னை வெளியே எடுத்திடுவோம். குடும்ப ரீதியான அத்தனை கசப்புகளும் நிச்சயம் முடிவுக்கு வந்திடும்!'' எனச் சொன்னாராம். தயாநிதி அதிகம் பேசவில்லை என்றாலும், குடும்ப சமாதானத்துக்கான முதல் முயற்சி அங்கே நிகழ்ந்ததாக அடித்துச் சொல்கிறார்கள் டெல்லிவாலாக்கள்.
அடுத்து நிகழ்ந்த சந்திப்புதான் நம்ப முடியாத ஆச்சர்யம். ஆ.ராசா உடனான சந்திப்புதான் அது. ஆ.ராசா சகஜமாகப் பேசவில்லை என்றாலும், அழகிரியின் ஆறுதல் அவரைத் தெம்பாக்கி இருக்கிறது. தயாநிதி மாறனும் ராசாவுடன் கை குலுக்கி நிறையப் பேசி இருக்கிறார். 'சரத்குமாரை வரச் சொல்லுங்கள். நாங்கள் பார்க்க வேண்டும்!’ என ஆ.ராசாவிடம் சொல்லி அனுப்பினர் இருவரும். 'தயாநிதி மாறனை சந்திக்கும் நிலையில் நான் இல்லை!’ எனச் சரத்குமார் சொல்லிவிட்டதாக டெல்லி நிருபர்கள் வட்டாரம் சொல்கிறது.
சரத்குமாரின் சகோதரியின் வீடு டெல்லியில்தான் இருக்கிறது. அங்கே இருந்தும் கனிமொழிக்கும் சரத்துக்கும் சாப்பாடு வருகிறது. துணிமணிகள் பரிமாற்றமும் சரத் மூலமே நடக்கிறது. மூன்று வேளையும் வீட்டு சாப் பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தும், மதியம் தவிர்த்து இரு வேளைகளும் சிறை உணவைத்தான் கனிமொழியும் சரத்தும் சாப்பிடுகிறார்கள்.

25-ம் தேதி, சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழியை, மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின், மோகனா என பெரிய உறவு வட்டாரமே சந்தித்தது. குடும்ப ரீதியான பிரச்னையில் பெரிய பனிப் போர் நிகழ்ந்தது, செல்விக்கும் கனிமொழிக்கும் இடையேதான். ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு அத்தனை பேர் மத்தியிலும், ''உனக்கு இப்படி ஆயிடுச்சேம்மா'' என செல்வி தழுதழுத்தார். கனிமொழிக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தது செல்வியின் வார்த்தைகள் தான். செல்வியின் கைகளைப் பற்றியபடியே துர்காவிடம் சிறை வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார் கனிமொழி. அடுத்த சில நிமிடங்களில் முரசொலி மாறனின் மனைவி மல்லிகாவும் அங்கே ஆஜர். ''என்னைப் பார்க்க நீங்க எல்லாம் வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. கெட்டதிலும் ஒரு நல்லதுன்னு சொல்வாங்களே... அதை நினைச்சே மனசைத் தேத்திக்கிறேன்!'' என அவரைப் பார்த்து கலங்கிவிட்டார் கனி.
ஆனால், ராஜாத்தி என்ன நினைத்தாரோ... செல்வி, துர்கா உள்ளிட்ட உறவுகள் வந்த உடனேயே அவர் பட்டும் படாமல் ஒதுங்கிக்கொண்டார்.
உறவுகளின் சந்திப்புகள் குறித்துப் பேசும் தி.மு.க-வின் டெல்லிப் புள்ளிகள், ''கனிமொழிக்கு இந்த அளவுக்கு சிக்கல் வராது என்ற நம்பிக்கையில்தான் ஆரம்பத்தில் உறவினர்கள் பலரும் அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள். கனிமொழியின் பிறந்த நாளுக்குக்கூட வாழ்த்து சொல்லாத அழகிரி, இப்படித் தேடி வந்து சந்தித்ததில், கனி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். குறிப்பாக தயாநிதி மாறனும் செல்வியும் நேரில் வந்து சந்தித்ததை எங்களால் இன்னமும் நம்ப முடியவில்லை. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் இருந்து வெளியே வர, முதலில் குடும்ப மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தலைவர் நினைக்கிறார். அதற்குத் தக்கபடி குடும்ப உறவுகள் கைகோத்து இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரம், சிறைக்குள் தயாநிதி மாறனை சந்திக்க சரத்குமார் மறுத்ததும், செல்வி, துர்கா ஆகியோருடன் ராஜாத்தி அம்மாள் சரிவரப் பேசாமல் முறுக்கிக்கொண்டு நின்றதும்... குடும்ப மோதல்களை இன்னமும் பெரிதாக்கிவிடும் என்றே தோன்றுகிறது.
'எனக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என சிறைக்குள் புலம்பித் தவிக்கிறார் சரத். இவற்றை எல்லாம் தாண்டி, சட்ட ரீதியாகவும் இன்னும் சில திருப்பங்கள் இருக்கும்....'' என்கிறார்கள் டெல்லி சிறைத் துறை வட்டாரத்தில்!

கருத்துகள் இல்லை: