செவ்வாய், 5 நவம்பர், 2019

வீடியோ கேம் தகராறு ..மாணவனை சுட்டு கொன்ற சக மாணவன் .. சென்னை காஞ்சிபுரம்... வீடியோ


vikatan.com - ந.பொன்குமரகுருபரன் : சென்னையை அடுத்த வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வீடியோ கேம் சண்டையால்தான் இக்கொலை நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி ரேகைகளை படரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே வேங்கடமங்லத்தைச் சேர்ந்தவர் முகேஷ். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். வேங்கடமங்கலத்தில் தனது வீட்டுக்கு அருகேயுள்ள நண்பர் விஜய்யின் வீட்டுக்கு இன்று காலை சென்ற முகேஷ், நண்பருடன் சேர்ந்து தனியறையில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அறைக்கு வெளியே ஹாலில் விஜய்யின் சகோதர் உதயாவும் மற்றொரு சகோதரர் அஜித்தும் அவர் மனைவி ஒரு அறையிலும் இருந்துள்ளனர். அப்போது துப்பாக்கிச் சத்தம் `படார்’ எனக் கேட்க, வெளியே உட்கார்ந்திருந்த உதயா உள்ளே சென்று பார்த்துள்ளார். தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் முகேஷ் உயிருக்குத் துடித்துக்கொண்டிருக்க, எந்தச் சலனமும் இல்லாமல் கையில் துப்பாக்கியுடன் விஜய் அருகில் நின்றுள்ளார். உதயா சுதாரிப்பதற்குள் விஜய் அங்கேயிருந்து தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தாழம்பூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உயிருக்குப் போராடிய முகேஷை மீட்டு, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கேயிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட முகேஷ், மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்துள்ளார். பட்டப்பகலில் கல்லூரி மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. விஜய் தப்பியோடிய நிலையில், வீட்டில் இருந்த அவரின் அண்ணன்கள் இருவரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டிருக்கும் தாழம்பூர் போலீஸாரிடம் பேசினோம். ``விஜய், முகேஷ் இருவருமே பல வருட நண்பர்கள். இருவருக்கும் `பப்ஜி’ வீடியோ கேம் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த வீடியோ கேமில் நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து விளையாட முடியும். `டார்கெட்’டை கூட்டாகச் சேர்ந்து சுட்டு விளையாடுவார்கள். விளையாடும்போதே, சக வீரர்களுடன் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு பேசிக்கொண்டே விளையாடலாம் என்பது இந்த விளையாட்டின்மீது எல்லாரும் மோகமாக இருப்பதற்கு ஒரு காரணம். அணியாக விளையாடும்போது, ஒருவர் இன்னொருவருக்குக் கட்டளைகள் பிறப்பிக்கலாம். ``டேய் முன்னாடி ரூம்ல இன்னொருத்தன் இருக்கான்டா... சுடுடா” என்று பேசிக்கொண்டே சமிக்ஞைகள் கொடுப்பார்கள். இந்த விளையாட்டில் இருவருமே மிகவும் தீவிரமாக விளையாடுவார்களாம்.

இன்றும் `பப்ஜி’ விளையாடத்தான் விஜய்யின் வீட்டுக்கு முகேஷ் வந்ததாகத் தெரிகிறது. அப்போது சுடுரா... சுடுரா என்று கத்தியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது நண்பர்களுக்குள் நடந்த சண்டையில், முகேஷை விஜய் சுட்டுக் கொன்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. தப்பியோடிய விஜய்யை பிடித்த பிறகுதான் முழுவிவரமும் தெரியவரும்” என்றனர்.

இருவருக்கும் ‘பப்ஜி’ வீடியோ கேம் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த வீடியோ கேமில் நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து விளையாட முடியும். `டார்கெட்’டை கூட்டாகச் சேர்ந்து சுட்டு விளையாடுவார்கள். /div> விஜய்யின் நட்பு, உறவினர் வட்டாரங்கள் குறித்து விசாரணையில் இறங்கியுள்ள போலீஸார், அவருக்கும் முகேஷுக்கும் இடையே மனக்கசப்பு ஏதும் இருந்ததா, விஜய் மீது குற்ற வழக்குகள் ஏதும் பதிவாகியுள்ளதா என விசாரித்து வருகின்றனர். வேங்கடமங்கலத்திலிருந்து வண்டலூர் செல்லும் சாலையிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தும் வருகிறார்கள். தனியார் உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் விஜய்க்கு துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்கிற விசாரணையும் சூடுபிடித்துள்ளது

கருத்துகள் இல்லை: