ஞாயிறு, 3 நவம்பர், 2019

திருவள்ளுவருக்கு காவி உடை ஒருபுறம் ,, மோடி தாய்லாந்தில் திருக்குறள் பேசுகிறார் .. யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

சென்னை: திருவள்ளூர் காவி உடை அணிந்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்ட பாஜக.வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை காவிக்கூட்டம் தனது கட்சிக்கு துணைக்கு அழைப்பது தமிழ் துரோகம் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமலர் :பாங்காக்: தாய்லாந்து நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நுாலை, பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அப்போது, தமிழில், குறள் ஒன்றைப் படித்து, அதற்கு பொருளும் கூறினார்.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் பயணமாக நேற்று சென்றார். தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், பாங்காக்கில், 'சவாஸ்தி பிரதமர் மோடி' என்ற தலைப்பில், இந்தியா வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார். தாய்லாந்து மொழியில், சவாஸ்தி என்றால், மரியாதைக்குரியவர் என, அர்த்தம்
இந்நிகழ்ச்சியில், தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நுாலை, பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், சீக்கிய மதகுருவான, குரு நானக் தேவின், 550வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியா - தாய்லாந்து இடையே, ஆழமான உறவு உள்ளது. தாய்லாந்தில் இருப்பது, இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. இங்கே வாழும் இந்தியர்களின் அன்புக்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம்.இந்தியா, அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 130 கோடி மக்கள் ஒன்று சேர்ந்து, புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறோம்.

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்தை ஒழிக்க, அதிரடி முடிவு எடுத்தோம், இன்று, ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், பெண்கள் புகையில்லாமல் சமையல் செய்வதற்கு, எட்டுக்கோடிக்கும் மேலாக இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களையும், வங்கிகளுடன் இணைத்துள்ளோம். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு, மோடி பேசினார். அவருடைய பேச்சின் போது,

'தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு'


என்ற திருக்குறளை தமிழில் கூறி, அதற்கு 'தன் உழைப்பால் சேர்த்த பொருளெல்லாம், தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே' என்ற அர்த்தத்தையும் கூறினர். இதனை ரசித்த மக்கள், 'மோடி, மோடி' என கோஷங்கள் எழுப்பி, கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

கருத்துகள் இல்லை: