வெள்ளி, 8 நவம்பர், 2019

சிவசேனா ஆதரவு கிடைக்காததால் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்; .. கவர்னர் ஆலோசனை

தினத்தந்தி : சிவசேனாவின் ஆதரவு கிடைக்காததால், மராட்டியத்தில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில், சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதால் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 மும்பை, 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களை கைப்பற்றிய அந்த கூட்டணி கட்சிகள் உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. அதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டதால், தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 15 நாட்கள் முடிந்த போதிலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள்தான் ஆட்சி அமைத்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.


சரத்பவாரின் அறிவிப்பை தொடர்ந்து, அந்த கட்சிகள் இடையே திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சினை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் முதல்-மந்திரி பதவியை பெறும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்றும் உறுதிப்பட கூறினார். இதனால் இழுபறி நிலை முடிவுக்கு வராமல் உள்ளது.

இந்த பரபரப்பான சூழ் நிலையில், மராட்டிய பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், அந்த கட்சியை சேர்ந்த மந்திரிகள் சுதீர் முங்கண்டிவார், கிரிஷ் மகாஜன் ஆகியோர் நேற்று பிற்பகல் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்புக்கு பின் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோருவதில் வழக் கத்தை விட கூடுதல் நாட்கள் ஆகிவிட்டது உண்மைதான் என்றும், தற்போது நிலவும் சூழல் தொடர்பான சட்ட அம்சங்கள் குறித்து கவர்னரிடம் விவாதித்ததாகவும், தங்கள் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

சிவசேனாவின் ஆதரவு கிடைக்காததால், ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா தயக்கம் காட்டி வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில், மும்பை பாந்திராவில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் போது, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மராட்டிய ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்பதை உத்தவ் தாக்கரேயிடம் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

இந்த கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் பேசிய சிவசேனா எம்.எல்.ஏ. சம்புராஜே, ஆட்சி அமைப்பதில் உள்ள பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

பின்னர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாந்திராவில் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு மிக அருகில் உள்ள ரங்கசாரதா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

தற்போது நிலவும் சூழலில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்றும், உத்தவ் தாக்கரே எந்த முடிவு எடுத்தாலும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டுப்படுவோம் என்றும் சுனில் பிரபு எம்.எல்.ஏ. கூறினார்.

தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா இழுத்துவிடும் என்று சிவசேனா பயப்படுவதாக மராட்டிய மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறி உள்ளார்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “கவர்னரை சந்தித்த பாரதீய ஜனதா தலைவர்கள் ஏன் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை?. அவர்கள் ஏன் வெறுங்கையுடன் திரும்பினார்கள்? ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கவே பாரதீய ஜனதா விரும்புகிறது” என்று குற்றம்சாட்டினார்.

தற்போதைய மராட்டிய சட்டசபையின் பதவி காலம் நாளையுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. அதற்குள் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் உரிமை கோரவில்லை என்றால் என்ன செய்வது? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக, மராட்டிய அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி நேற்று கவர்னரை சந்தித்து பேசினார்.

மராட்டிய சட்டசபையின் முன்னாள் செயலாளர் ஆனந்த் கல்சே கூறுகையில், புதிய அரசு அமைக்க அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியை (பாரதீய ஜனதா) முதலில் கவர்னர் அழைப்பார் என்றும், அந்த கட்சி முன்வராத பட்சத்தில் இரண்டாவது பெரிய கட்சிக்கு அவர் அழைப்பு விடுப்பார் என்றும், இந்த நடைமுறையை கவர்னர் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: