
தினமலர் :
சென்னை:சசிகலா குடும்பத்தினர், 'பினாமி' பெயரில் நடத்தி வந்த
நிறுவனங்களுக்கு சொந்தமான, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள்
முடக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, 187 இடங்களில், 2017 நவம்பரில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள, ஜெயா, 'டிவி' அலுவலகம், 'மிடாஸ்' மதுபான ஆலையும் அடங்கும். ஐந்து நாட்களாக தொடர்ந்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவங்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பல நுாறு கோடி ரூபாய்க்கு, சொத்துகள் வாங்கியது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கின. தொடர்ந்து, சசிகலாவின் உறவினர்கள், பினாமிகள் உட்பட பலரிடம், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, சோதனையில் பறிமுதல் செய்த ஆவணங்களை காண்பித்து கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டனர். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சோதனை நடைபெற்ற, 187 இடங்களில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, சசிகலா குடும்பத்தினரின் போலி நிறுவனங்கள் மற்றும் சொத்துகளின் விபரங்களை, வருமான வரி அதிகாரிகள் முழுமையாக கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, வருமானவரி அதிகாரிகள் கூறியதாவது:சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, அனைத்து சொத்துகளை கண்டறியும் பணி முடிந்துள்ளது. இதில், சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர், பினாமி பெயரில், பல்வேறு நிறுவனங்களை நடத்துவது தெரிய வந்தது. அதில், 10 நிறுவனங்களுக்கு சொந்தமான, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக