ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

நாறும் வாரணாசி ... நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்

வினவு :இவ்ளோ கழிப்பறை இருக்கு. அதுக்கான பக்கெட் போதுமானது இல்லை. வர சாமியாருங்க தூக்கிட்டு போயிடுறாங்க. அத நாங்க கழுவுறோம். மனரீதியாக எங்களுக்கு துன்பமாக இருக்கிறது... குமுறும் தூய்மைப் பணியாளர்கள்.
வினவு களச் செய்தியாளர்: / யிரக்கணக்கான மக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்கிறார்கள். அதனை வெறித்துப் பார்த்தவாறு ஒரு ஓரமாக கிடக்கிறார்கள் ஃப்ளோரசண்ட் கலரில் ஜாக்கெட் அணிந்து கழிப்பறையை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள். மற்றொருபுறம் கையில் துடைப்பத்தை ஏந்தியபடி எங்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்காக சுமார் 1.2 இலட்சம் தற்காலிக கழிவறைகள்  அமைக்கப்பட்டுள்ளன. துப்புரவு மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக சுமார் 15,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அலகாபாத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கும் இத்தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தலித்துகள் மற்றும் பழங்குடிகள்.


சோட்டாலால். அலிஅசன் மற்றும் அகமத்.
கழிவறையின் முன்னே நின்று கொண்டிருந்தார்கள் அத்தாரா மாவட்டம், பாந்த்ரா கிராமத்தை சேர்ந்த அலிஅசன், அகமத் மற்றும் சோட்டாலால். அவர்கள் கும்பமேளா பற்றியும், இந்த வேலைக்கு வந்தது பற்றியும் சொல்கிறார்கள். “எங்களை சாந்தினி என்ற பெண் காண்ட்ராக்டர் ஊருக்கு வந்து கும்பமேளாவில் நிறைய வேலை இருக்கு. வந்தால் ஒரு நாள் கூலியாக 350 ரூபாய் தருவோம் என்றார். ஊரில் வேலை இல்லாமல்தானே இருக்கிறோம்… மூணு மாசம் வேலை தர்றதா சொல்றாங்க. அதுவும் 350 ரூபா சம்பளம். யாரு கொடுப்பான்னு நெனச்சி வந்தோம். இங்க வந்த பிறகு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து விட்டார்கள்.  பத்து கழிப்பறைக்கு ஒரு ஆள் பொறுப்பு. சுத்தம் செய்வது, தண்ணீர் வராத பட்சத்தில் அதனை முறையாக சொல்லி தண்ணி வரவைப்பது, கழிவறையில் வைக்கப்பட்டிருக்கும் பாட்டில், டப்பா அனைத்தும் பார்த்துக் கொள்வது எங்கள் வேலை.
எங்களை கூப்பிடும்போது இந்த வேலைதான்னு சொல்லி கூப்பிடல.  சொல்லியிருந்தா வந்திருக்க மாட்டோம். இப்ப போகலாம்னு பார்த்தாலும் முடியாது. வீட்டுல சொல்லிட்டு வந்துட்டோம். அவங்க எதிர்பார்த்திட்டு இருப்பாங்க. வேற வழியும் இல்லை” என்கிறார் அசன்.
மேலும், “எங்களுக்கு தங்கறதுக்கு இடம் மட்டும்தான் கொடுத்தாங்க. கூடாரம் நாங்களே போட்டுக்கிட்டோம். நைட்டான செம்ம குளுரு. தாக்கு பிடிக்க முடியல. நெருப்பு மூட்டிக் கொள்ள விறகு கட்டை எதுவும் கொடுக்கல. அதையும் நாங்களே பாத்துக்கனும். அதிகாரிங்களுக்கு மட்டும் விறகு கொடுத்திருக்காங்க. கூலி போக உணவுக்காக 100 ரூபா படி தருவோம் என்றார்கள். அதுவும் இன்னமும் தரல. நாங்க எட்டு மணி நேரம் வேலை பார்க்கனும். ஆனால், இரண்டு ஷிப்டு ஒரே ஆள் பார்த்தாலும் அதற்கான கூலியும் தருவதில்லை. படியும் தருவதில்லை.
சாப்பிட இரண்டு ரொட்டி, சப்ஜி – பருப்பு சாம்பார்ன்ற பேர்ல தண்ணிய ஒரு நேரம் கொடுக்கிறாங்க’’ என்கிறார் அலுப்பாக.
» “வேற என்ன பிரச்சனையெல்லாம் இருக்கு?”
‘’இவ்ளோ கழிப்பறை இருக்கு. அதுக்கான பக்கெட் போதுமானது இல்லை. அப்படியே இருந்தாலும் இங்க வர சாமியாருங்க தூக்கிட்டு போயிடுறாங்க. அவங்கள கேட்கவும் முடியல. பக்கெட் இல்லாததால, வாட்டர் பாட்டில்ல தண்ணி புடிச்சிக்கிட்டு வராங்க. அந்த கொஞ்சம் தண்ணியில என்ன பண்ண முடியும்? அதனால பாத்ரூம் சுத்தமாக இருப்பதில்லை. அத நாங்க கழுவுறோம். இது ரொம்ப பிரச்சனையாக இருக்கு. மனரீதியாக எங்களுக்கு துன்பமாக இருக்கிறது.
எங்க ஊரில் விவசாய வேலை செய்து கொண்டு இருந்தோம். ஆனால், அதில் இப்போது வருமானம் இல்லை என்பதால் இந்த வேலைக்கு வந்தோம். இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம். வீட்ல இப்ப கைகொடுக்கிறது ஒரே ஒரு மாடுதான். அதுவும் பால் கறக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லை. பின்னால் அதை விற்க முடியாது. விற்க பலரும் பயப்படுறாங்க..
» கங்கையில குளிச்சிங்களா?
இன்னும் குளிக்கல. போகும்போது குளிப்போம்.
» குளிச்சா பாவம் போயிடுமா?
ஆண்டவன் என்ன எழுதி வச்சிருக்கானோ அதுதான் நடக்கும். நாம நல்லது செஞ்சா நல்லது நடக்கும். கெட்டது செஞ்சா கெட்டது நடக்கும். எல்லாத்துக்கும் மேல கடவுள் இருக்கான்” என்றவரிடமிருந்து விடைபெற்று சிறிது தூரம் நடந்ததும் மற்றொரு பிரிவு துப்புரவு தொழிலாளர்கள் சச்சின், தினேஷ், சுனில் மோங்க்ரே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

சச்சின்.
இவர்களுடைய பணி, “தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும், குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் மோங்க்ரே என்று சொல்லக்கூடிய பட்டியலின சாதியை சார்ந்தவர்கள். இந்த வேலைக்கு நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. இந்த விழா முடியும் வரை வேறு எந்த வேலைக்கும் எங்கேயும் செல்லக்கூடாது. இங்கேயே தங்கிக் கொள்ள வேண்டும். தங்குவதற்கு ஒரு இடம் மட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதில் இவர்களே குடில் அமைத்துக் கொள்ள வேண்டுமாம்.
படிக்க:
புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !
கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !
குளிப்பது எல்லாம் குழாயில் தண்ணீர் பிடித்து குளித்துக் கொள்ள வேண்டும்.  கொட்டிக் கிடக்கும் குப்பையை அகற்றுவது மட்டும் இல்லாமல், இரும்புப் பாதையை அடிக்கடி பெருக்க வேண்டும். மற்றொரு பிரிவினர் தண்ணீர் தெளிக்க வேண்டும். எந்நேரமும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். எங்குச் சென்றாலும் கையில் துடைப்பத்துடன் சுற்ற வேண்டும். இந்த வேலை முடிந்ததும் ஊருக்கு சென்று அங்கே கிடைக்கும் வேலையை செய்து வாழ்க்கையை நடத்த வேண்டும்” என்றே தெரிவிக்கின்றனர்.
இவர்களை அழைத்து வந்த சுனில் மோங்க்ரே சொல்கிறார், “நான் மும்பை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் மிக்சர் செய்யும் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் நல்ல வருமானம் கிடைத்தது.

தினேஷ் மற்றும் சுனில் மோங்க்ரே.
சென்னையில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இப்பொழுது அந்த வேலைக்கு அதிகம் பேர் வந்து விட்டதால் சம்பளம் குறைந்து விட்டது. வேலையும் சரியாக கிடைப்பதில்லை. மேலும் உடல்நிலை மற்றும் வீட்டு பிரச்சனையால் எனது சொந்த ஊரான பாந்தாவுக்கே திரும்பி வந்துவிட்டேன்.
கும்பமேளா துப்புரவு பணியில் சூப்பர் வைசராக இருக்கிறேன். இந்த வேலைக்கு எங்க ஊரில் இருந்து 12 பேரை கூட்டி வந்தேன். எல்லோரும் தலித் சாதியின் மோங்க்ரே பிரிவை சார்ந்தவர்கள்.
» இந்த பிரிவில் இருந்துதான் துப்புரவு வேலைக்கு வருவார்களா?
ஆம். இன்னும் சில தலித் பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களும் வந்திருக்கிறர்கள்.
» உங்களுக்கு அம்பேட்கரை தெரியுமா?
தெரியும். அவர்தான் எங்க தலைவர். அவர் இருந்ததால் தான் இந்த நிலையில் இருக்கிறோம். இல்லையென்றால் இன்னும் மோசமாகி இருப்போம்.’’ என்றார்.

பிண்டு.
கொஞ்சம் தள்ளி கையில் துடப்பத்தை வைத்துக்கொண்டு தனியாக சோர்வுடன் நின்று கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்ததும் சற்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் பிண்டு. மிர்சாபுர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்.  தலித் சாதியின் வேறொரு பிரிவை சார்ந்தவர்.
» இந்த கும்பமேளா எப்படி இருக்கு?
சூப்பரா இருக்கு. ரொம்ப பேரு வாராங்க. பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு.
» இந்த விழாவுக்காக எவ்ளோ செலவாகியிருக்கும்னு நினைக்கிறீங்க?
“ஒரு 30, 40 கோடி இருக்குமா?” என்று சந்தேகத்துடன் வெகுளியாக சொன்னவரிடம் 4,300 கோடி என்றதும் மலைத்துப் போய் பார்த்தார்.
» உங்களுக்கு இந்த வேலை புடிச்சிருக்கா?
“எனக்கு சுத்தமா இந்த வேலை புடிக்கல.. எனக்கு வண்டி ஓட்டுற வேலை.  அந்த வேலை இல்லாததால இந்த வேலைக்கு வந்தேன். எங்கள மாதிரியான ஆட்கள் நெறைய பேர் இந்த வேலைய செய்யுறோம். என்னா செய்றது வேலை எதுவும் இல்ல….” என்று சொல்லும்போது அவருடைய சூப்பர்வைசர் வந்ததால் நம்மிடமிருந்து விலகிச் சென்றார்.
உழைத்து உழைத்து களைத்துப்போய் உட்கார்ந்திருந்தார்கள் துப்புரவு மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் பெண் தொழிலாளர்கள். அவர்களிடம் கேட்டதும் படப்படப்போடு எழுந்து நின்று அவஸ்தையோடு சொன்னார்கள். “நாங்க பாந்தா ஊர். சித்ரகூட் ஜில்லா.  எங்க ஊர்ல இருந்து 12 பேர் வந்திருக்காங்க.  எங்களுக்கு ஒரு நாள் கூலி 275 ரூபா. தங்கறதுக்கு இடம் மட்டும் எங்கள கூட்டி வந்தவங்க கொடுத்தாங்க.  சாப்பாடு, தண்ணி எல்லாம் நாங்களே பார்த்துக்கனும்.
» ஏன் இந்த வேலைக்கு வந்திங்க?
என்ன கேள்வி கேக்குற …  அங்க என்னமோ வேலைய வச்சிக்கிட்டு இந்த வேலைக்கு வந்த மாதிரி கேக்குற… வேல இருந்தா இங்க வருவோமா…? நாங்க ஏன் குப்பை, மண்ணை பெருக்க போறோம்?
» மோடி கவர்ன்மெண்ட்ல எல்லோருக்கும் நல்லது செய்யிறதா சொல்றாங்களே?
எதுவும் இல்ல. 15 லட்சம் கொடுகிறதா சொன்னாரு…. யாருக்கும் வர்ல. வீடு கட்டி தருவோம்னு சொன்னாரு அதுவும் தரல.. .  மோடி சும்மா எதையாவது சொல்லுவார். மத்தபடி ஒன்னும் இல்ல. நாங்க ஏழ்மையானவங்க.  மோடி நல்லது செய்யிறாருன்னு எல்லோரும் சொல்லுறாங்க. ஆனா யாருக்கு செய்யிறாருன்னு தெரியல. நாங்க ஏழையாவே தான் இருக்கோம்.

அரசு கொடுத்திருந்த புளோரசெண்ட் ஜாக்கெட்டை காட்டி….. “எங்க துணிய பாருங்க.  கொசு வலை மாதிரி கொடுத்து இருக்காங்க. கொசுகூட உள்ள போயிரும்.  கடிக்கும். இதுல தலைக்கு தொப்பி வேற… இது எதுக்கு பிரயோஜனம்? குளிரு தாங்கல.  எனக்கு பரவாயில்ல… தோ… இந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு.  ஆனாலும் வேலை செஞ்சிதான் ஆகனும். நாங்க போன வருஷம் இந்த மாதிரி வேலை செய்ய வந்தோம். அப்போ கடைசியில கொஞ்சம் காசு கொடுக்காம அனுப்பிட்டாங்க. இந்த முறை அதை கண்டிப்பா கேட்டிருக்கோம்.
» எல்லோரும் சங்கத்தில் குளித்து விட்டு போறாங்க… நீங்க குளிச்சிங்களா?
நாங்க எப்பவும் குளிக்கிறதுதான். வெளியில இருந்து வரவங்களுக்குத்தான் இது புதுசா இருக்கு. அதனால குளிக்கிறாங்க…. என்றார்கள்.

சாந்தி.
அருகே இருந்த சாந்தி, கழிப்பறைக்கு அழைத்துச் சென்று காட்டினார். மிக மோசமாக இருந்தது. ஆண் தொழிலாளர்கள் சொன்ன அதே பிரச்சனைதான்… “இவ்ளோ மோசமா இருக்கு.. இத எப்படி நாங்க கிளீன் பண்ண முடியும்…. சீக்கிரமாக செப்டிக் டேங்க் நிரம்பிடுறதால வண்டியும் வந்து வாரிச் செல்வதில்லை..” என்று சொன்ன சாந்தி அம்மாவின் முகத்தில் ஆத்திரமும் கோபமும்தான் இருந்தது. அவரால் அந்த கழிவறையைப் பார்க்கக்கூட மனமில்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டே கதவை அறைந்து சாத்திவிட்டு அமைதியானார்.

கருத்துகள் இல்லை: