ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

அம்பானியின் கையில் இந்திய ஊடகத் துறை !.. சமுக வலையில் மட்டுமே கொஞ்சமாவது சுதந்திர செய்திகள்

வினவு : கார்ப்பரேட்டுகளின் கறி விருந்தை கார்ப்பரேட் ஊடகங்களால் கனவிலும் கேள்வி கேட்க முடியாது... இந்திய ஊடகங்களின் பிடி அம்பானியிடம் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் அல்ஜசீராவின் வீடியோ  
ந்தியாவின் மேல் அம்பானிகளின் ஆக்டோபஸ் கரங்கள் படர்ந்திருப்பதை அறியாதவர்கள் யாருமில்லை. ஓட்டாண்டியாகி விட்ட சின்ன அம்பானிக்கு ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்த மோடி, பெரிய அம்பானிக்கு விளம்பர மாடலாகவே நடித்துக் கொடுத்துள்ளார். அனில் அம்பானி செய்த முறைகேடுகள் பரங்கி மலை என்றால் முகேஷ் அம்பானியின் முறைகேடுகள் இமயமலை. என்றாலும், நமது ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அவரைக் குறித்து ஆழ்ந்த மௌனம் சாதிப்பது ஏன் என்பதை அல்ஜசீரா இணையதளத்தில் வெளியான இந்த குறுங்காட்சிப் பதிவு விளக்குகின்றது.


முகேஷ் அம்பானியின் கரங்கள் ஏராளமான துறைகளில் நீள்கிறது. சில்லறை வணிகம், பெட்ரோலில் ஆரம்பித்து செல்பேசிகள் வரை மிக நீண்ட தொழில் பட்டியலின் மேல் அவர் அமர்ந்துள்ளார். ரிலையன்ஸ் என்கிற பெயரை நாம் ஒவ்வொரு நாளின் ஏதோவொரு கணத்தில் கடந்து சென்றேயாக வேண்டும். அதே போல் சட்டத்தின் அத்தனை ஓட்டைகளையும் பயன்படுத்துவதிலும், அதன் மூலம் ஆதாயம் அடைவதிலும் அம்பானிகளின் திறமை ஈடு இணையற்றது. சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டு வந்த கே.ஜி பேசின் – கிருஷ்ணா கோதாவரி படுகை – முறைகேடு இன்றைக்கு ஏறக்குறைய மக்களின் நினைவுகளில் இருந்து மறைந்தே விட்டது.
மக்கள் விவரங்களையும், செய்திகளையும் தெரிந்து கொள்ளும் அனைத்து வழிகளை முகேஷ் அம்பானி கட்டுப்படுத்டுகிறார். குறிப்பாக ஊடக உலகை மிக குறுகிய காலத்தில் ஆக்கிரமித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. 2008-ம் ஆண்டு ஈடிவி நிறுவனத்தில் 655 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தார். அதற்கு மறு வருடம் என்.டி.டீ.வி தொலைக்காட்சிக்கு 80 மில்லியன் டாலர்களைக் கடனாக வழங்கினார். 2012-ம் ஆண்டு நெட்வொர்க் 18 என்கிற மிகப் பெரிய ஊடக நிறுவனத்தை முக்கால் பில்லியன் டாலருக்கு மொத்தமாக விலைக்கு வாங்கிப் போட்டுள்ளார். வெறும் ஐந்தே ஆண்டுகளில் ஊடக கார்ப்பரேட்டுகளின் சக்கரவர்த்தியாக உயர்ந்துள்ளார்.


ஜோஸி ஜோஸஃப்.
”இந்தியப் பொருளாதாரம் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு காலகட்டத்தில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57 சதவீதம் வெறும் ஒரு சதவீதத்தினரால் உருவாக்கப்பட்டது” என்கிறார் புலனாய்வுப் பத்திரிகையாளரும் “வல்லூறுகளின் விருந்து” (A Feast of Vulture) என்கிற நூலை எழுதியவருமான ஜோஸி ஜோஸஃப். “வளங்கள் ஒரு சில இந்தியர்களின் கரங்களில் குவியும் போக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இந்த முறைகேடான வளர்ச்சியின் உச்சாணியில் அம்பானிகள் அமர்ந்துள்ளனர். அவர்கள் தான் இந்த நாட்டின் மிக செல்வாக்கான முதலாளிகள்” என்கிறார் ஜோஸப்.
இந்தியாவின் பத்திரிகைத் தொழில் இலாபகரமாக நடப்பதை விளம்பரங்களே தீர்மானிக்கின்றன. பத்துப் பதினைந்து பக்கங்களை பல வண்ணங்களில் அச்சிட்டு விற்றால் சில பத்து ரூபாய்கள் விலை வைக்க வேண்டியிருக்கும். ஆனால், ஐந்து அல்லது ஆறு ரூபாய்களுக்கு பத்திரிகைகள் விற்கப்படுகின்றன. இதில் பத்திரிகைகளின் இலாபத்திற்கு முதலாளிகள் கொடுக்கும் விளம்பரங்கள் கணிசமாக பங்களிப்பு செய்கின்றன. அம்பானிகள் விளம்பரங்களை வாரி விடுவதன் மூலம் தங்களைக் குறித்த எதிர்மறையான செய்திகள் எதுவும் வராமல் மடையடைத்து விடுகின்றனர்.
அதையும் மீறி ரஃபேல் விமான பேர ஊழல் போன்று சில சந்தர்ப்பங்களில் தனக்கு பாதகமாக செய்திகள் வந்த போது சின்ன அம்பானி அதை அவதூறு வழக்குகளைக் கொண்டே எதிர்கொள்கிறார். பெருந் தொகைகளுக்கு வழக்கு போட்டு அலைய விடுவதே அவர்களின் நோக்கம் என்று குறிப்பிடும் செவந்தி நினான், வழக்குகளை வெல்வதெல்லாம் அவர்களின் திட்டமே இல்லை என்கிறார். செவந்தி நினான் தி ஹூட் என்கிற ஆங்கில இணையப் பத்திரிகையின் நிறுவனர்.


சித்தார்த் வரதராஜன்.
“நீங்கள் அனில் அம்பானியின் வழக்குக்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் வீண். அதனால் ஒரு ரூபாய் வீணாவதோடு ஒரு மணி நேரமும் வீணாகிறது. அதற்கு பதில் அவரது நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதில் நீங்கள் ஆர்வம் செலுத்துவது பலனளிக்கும்” என்கிறார் தி வயர் இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான சித்தார்த் வரதராஜன்.
மொத்தமாக வளைத்துப் போடுவது அல்லது வழக்குகளைப் போட்டு மிரட்டுவது என்கிற இரண்டு அணுகுமுறைகளின் மூலம் அம்பானி சகோதரர்கள் ஊடக உலகை அச்சுறுத்தி வருகின்றனர். எனினும், வணிக ஊடகங்கள் தம்மளவிலேயே கார்ப்பரேட் நிறுவனங்களாக இருப்பதால் தங்களது மூலவர்களுக்கு எதிராக பேசவோ எழுதவோ செய்யாமல் சுய தணிக்கை செய்து கொள்வதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
 ?கார்ப்பரேட்டுகளின் கறி விருந்தை கார்ப்பரேட் ஊடகங்களால் கனவிலும் கேள்வி கேட்க முடியாது – ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதைப் போன்ற அலங்காரமான பாராட்டுதல்களுக்கு இவர்கள் தகுதியானவர்களும் இல்லை. மாற்று ஊடகங்கள் அதிகரிப்பதும், அந்த மாற்று ஊடகங்கள் கார்ப்பரேட் கொள்ளைகளை அம்பலப்படுத்த துணியும் போதுமே அம்பானிகளைப் போன்ற முதலைகளை அம்பலப்படுத்துவது சாத்தியம். அம்மாதிரியான மாற்று ஊடகங்களுக்கு மக்களின் ஆதரவும் அவசியம்.
வினவு செய்திப் பிரிவு
சாக்கியன்
செய்தி ஆதாரம்: aljazeera

கருத்துகள் இல்லை: