வியாழன், 28 பிப்ரவரி, 2019

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது!


aanthaireporter.com: சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக சேவை வழங்கி வரும் பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 84 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரத்துக்குப் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நம் தமிழகத்தின் பெரும் பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் வரலாறு முன்னரே நம் ஆந்தை ரிப்போர்ட்டரில் வெளியாகி உள்ளது.
நூற்றாண்டு பெருமைகொண்ட இந்தப் பாலத்தின் மீது சில நேரங்களில் காற்றின் வேகத்தில் இழுத்துவரப்பட்ட கப்பல் மற்றும் படகுகள் மோதிய சம்பவங்களால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவந்துள்ளது.
இதைத் தவிர, அச்சப்படும் நிலையில் இங்கு விபத்துகள் ஏதும் நடந்ததில்லை. அதிக உப்புக் காற்று வீசும் தன்மைகொண்ட கடலின்மீது அமைந்துள்ள பாம்பன் பாலத்தை இயக்குவது மற்றும் பராமரிப்புப் பணிகளை ரயில்வே நிர்வாகமே நேரடியாகச் செய்துவந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் தூக்குப் பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பாலத்தின்மீது பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தகடுகள் சேதமடைந்திருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில், கப்பல் செல்ல தூக்குப் பாலம் திறக்கப்பட்டது. கப்பல் சென்ற பின் தூக்குப் பாலத்தை இயக்கியபோது இரு புறமும் ஒரு சேர இணையவில்லை. இதனால், பாலத்தில் ரயில் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், டிசம்பர் 4-ம் தேதி முதல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தை ரத்துசெய்தனர். இதனால், ராமேஸ்வரத்த்துக்கு ரயில் போக்குவரத்து தடைப் பட்டது.

மேற்படி குறையைச் சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. கிட்டத்தட்ட மூன்று மாதமாகும் நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு பாலத்தைச் சீர் செய்யும் பணிகள் நிறைவு பெற்று, ஆய்வு நடத்தப்பட்டது. 6.5 டன் துருப்பிடிக்காத இரும்புக் கம்பிகளைக் கொண்டு விரிசல் சரி செய்யப்பட்டது. இதையடுத்து, 84 நாட்களுக்குப் பிறகு இன்று (பிப்ரவரி 27) மீண்டும் ராமேஸ்வரத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
தற்போது, ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இந்த பாலத்தின் வழியாக அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. புவனேஸ்வர், சேது, கோவை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 10 கி.மீ. வேகத்தில் இந்த பாலத்தில் சென்றதாகவும் கூறியுள்ளது. சுமார் 3 மாத காலமாக தடைபட்டிருந்த ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால், பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கருத்துகள் இல்லை: