புதன், 27 பிப்ரவரி, 2019

புல்வாமா விளைவு: மோடிக்கு சாதகமும் நாட்டுக்கு பாதகமும்!

சவுக்கு : மோடி அரசு கொள்கையின் தோல்வியையும், ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் புவிசார் அரசியலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் பாகிஸ்தானின் வியூகத்தையுமே புல்வாமா தாக்குதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது சமீபத்தில் ஸ்ரீநகரிலுள்ள தால் ஏரியில் பிரதமர் நரேந்திர மோடி படகில் பயணித்தபடி யாருமில்லாத இடத்தை நோக்கி யாருக்கோ கையசைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பான குறும்வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவின. அத்துடன், ‘கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளால் குடிமக்கள் தங்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி யாரைப் பார்த்து கையசைக்கிறார்?’ என்று நெட்டிசன்கள் வியப்பு மேலிடக் கேள்வி எழுப்பினர்.
ஒருவேளை, அந்த ஏரிப் பகுதியில் ஓய்வின்றி நின்றிருக்கும் பாதுகாப்புப் படையினரை அக்கறையுடன் பாராட்டும் வகையில் அவர் அப்படிக் கையசைத்தாரோ என்னவோ.

புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அவர்களைக் காப்பாற்றுவதற்காக தன்னாலான அனைத்தையும் செய்தோமா என்று மோடி தன்னைத் தானே நிச்சயம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான எந்தத் திட்டமும் அவரிடம் இல்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை, அப்படி ஒரு திட்டம் அவரிடம் இருப்பின், அது தவறான வழிமுறைகளை உள்ளடக்கியதாகவே இருக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் பரவலாக எதிர்கொண்டு வரும் வலிகளையும், பாதுகாப்புப் படையினரின் பலிகளையும் கணக்கில் கொள்ளும்போது இந்த உண்மை புலப்படும்.
காஷ்மீர் பிரச்சினை என்பது முழுக்க முழுக்க ராணுவப் பிரச்சினை தொடர்புடையது, அதைக் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் மூலம்தான் தீர்க்க வேண்டும் என்ற கோணத்தில் மட்டுமே மோடியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் அணுகுகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் இளம் குடிமக்கள் உயிரிழப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் வீடுகளை அழிப்பது என 2016இலிருந்து பின்பற்றப்பட்ட அடக்குமுறை உத்திகள்தான் எத்தனை எத்தனை. இவை இந்திய அரசியல் பின்னணியைத் தெளிவுபடுத்துகிறது. டெல்லியில் இருந்தபடி கொள்கைகளை வகுப்போரின் தூண்டுதல்களால் ஏற்பட்ட விளைவுகள்தான் இதுபோன்ற அடக்குமுறை உத்திகள். பயங்கரவாத தாக்குதகள் நடக்கும்போது அதே கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பொங்கியெழுந்து கொந்தளிப்பு அலையைப் உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.
கிளர்ச்சியை அணுகும் முறை
முழுக்க முழுக்க ராணுவ அணுகுமுறையைக் கொண்டு கிளர்ச்சியை எதிர்கொள்வது வீண் என்பதை ஆப்கானிஸ்தானில் நடப்பதைப் பார்த்தாவது மோடியும் பாஜகவும் உணர வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில், அமெரிக்கா 718 பில்லியன் டாலர்களைச் செலவழித்திருக்கிறது; 2,372 ராணுவ வீரர்களை இழந்திருக்கிறது; 20,000 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அதேபோல், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 45,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும் நினைவுகூரத்தக்கது. தன்னை சக்தி வாய்ந்த படைத் தளபதியாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா இப்போது தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதனிடையே, ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்த ரஷ்யா, முஜாகுதீன்களின் கூட்டாளிகளும் சம்பந்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கிறது. 1980-களில் சோவியத்துக்கு எதிராக முஜாகுதீன்கள் சண்டையிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் போன்ற பெரிய நாடாக இருந்தாலும் சரி, காஸா போன்ற பகுதியாக இருந்தாலும் சரி, கிளர்ச்சியை எதிர்கொள்வதற்கான தர்க்க ரீதியிலான அணுகுமுறை மிகவும் எளிதானது. ஒன்று, மக்களுக்கு விசுவாசமாக இல்லாத பட்சத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகளால் பெரிதாக வெற்றி பெற முடியாது. இரண்டாவது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்பது பேச்சுவார்த்தைகளுக்கான சூழல்களை உருவாக்க வேண்டுமே தவிர, அதற்கு மாற்றாக அமைந்துவிடக் கூடாது.
மோடியும் தோவலும் இத்தகைய அணுகுமுறையை ஏற்க மறுகின்றனர். மாறாக, காஷ்மீரில் மக்கள் உணர்வுகளைக் கொந்தளிக்கும்படியான வேலைகளையே செய்கின்றனர். இதில், 2014இல் வெள்ள மீட்புப் பணிகளைத் தடுக்க பாஜக முயற்சித்தது, பிடிபி – பாஜக அரசைத் தொடர்ச்சியாக வலுவிழக்கும் வேலைகளைச் செய்தது, காஷ்மிரி எதிர்ப்பு மனநிலையை மக்களிடையே வளர்த்தது, பாதுகாப்புப் படையினரைக் குவித்துக் கெடுபிடிகளைக் கடுமையாக அதிகரித்தது ஆகியவை அடங்கும்.
இதன் விளைவாக, தீவிரவாத அமைப்புகளில் ஆள்சேர்ப்பும் வன்முறையும் அதிகரித்தது. பாதுகாப்புப் படையினர் பயணிக்கும் இடங்களில் உள்ளூர் மக்களை முழுவதுமாக இப்போது தவிர்க்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. புல்வாமா தாக்குதலை ஒட்டிய நிலவரம்தான் இவை. தற்போது நிலவும் சூழல்களால் கிளர்ச்சியைத் தோற்கடிப்பது என்பது சாத்தியமில்லை. மாறாக, எப்போதும் முடிவுக்கு வர வாய்ப்பற்ற போரில் பாதுகாப்புப் படையினர் மீதான நெருக்குதல்தான் அதிகரிக்கும். இவ்வாறாக, அரசியல் ரீதியிலான பொறுப்பற்றதன்மை மிக்க அணுகுமுறையால், எந்தச் சண்டையும் முடிவுக்கு வரப்போவதில்லை. மேலும், தங்கள் குடும்பத்தினருடன் வாழ முடியாத நிலைக்கே சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவப் படையினர் தள்ளப்படுகிறார்கள்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மேம்படுத்திய காங்கிரஸின் 2004 – 2014 வரையிலான அணுகுமுறைகளை அப்பட்டமாகக் கைவிட்டதுதான் மோடி அரசு செய்த ஒட்டுமொத்தத் தவறு. காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில் தீவிரவாத வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், மாநில அரசுக்கு உரிய தன்னாட்சி அதிகாரத்தைக் கொடுத்து இயல்பு நிலைக்கும் அனுமதித்தது. ஆனால், பாஜக இந்தப் பாதையிலிருந்து முற்றிலும் விலகியது.
காங்கிரஸும் குறைகளும் அடக்குமுறைகளும் உள்ளடக்கிய அணுமுறைகளைப் பல நிலைகளில் மேற்கொண்டிருக்கிறது. ஆனால், அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஓரளவு அரசியல் தீர்வை நோக்கிய வெற்றிப் பாதையில் பயணித்தது. மோடி அரசோ காஷ்மீரில் அரசியல் தீர்வு எட்டுவதற்கான சூழலே உருவாகாத நிலைக்குத் தள்ளிவிட்டது. அத்துடன், காஷ்மீரை வன்முறை அரங்கமாக்கியதும், இந்தியாவின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களை அதற்கான பார்வையாளராக்கியதும்தான் மிச்சம்.
தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் அறம் சார்ந்த விவாதங்களில் காஷ்மீர் மக்களும் பாதுகாப்புப் படையினரும் சிக்கித் தவிப்பதுதான் சோகம். மாறாக, அவர்களின் துயரத்தை தணிக்கும் வகையிலான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை.
அடுத்து என்ன?
புல்வாமா தாக்குதலின் விளைவினால் மோடிக்கு அரசியல் ரீதியிலான பலன்கள் கிட்டலாம். ஆனால், இதன் விளைவாக இந்திய மக்களின் நலன் பெரிதாகச் சீரழியும் என்பது உறுதி. இந்தத் தருணத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்தி, தன் புகழை உயர்த்தும் நோக்கில் துல்லியத் தாக்குதல் போன்ற ராணுவ வழிகளையே மோடி தேர்ந்தெடுக்கக்கூடும்.
பாகிஸ்தானின் உறுதுணையும் வழிகாட்டுதலும் இல்லாமல் புல்வாமா தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் இத்தகைய தாகுதலை நடத்துவது மோடிக்கே பலன் தருவதாக இருக்கும் என்னும் நிலையில் இத்தகைய நடவடிக்கையில் பாகிஸ்தான் ஏன் இறங்க வேண்டும் என்ற அலசலும் மேற்கொள்ளப்படும்.
புல்வாமாவுக்குப் பிந்தைய சூழலை ராஜதந்திர ரீதியிலும், ராணுவ ரீதியிலும் அணுகக்கூடிய சாத்தியங்களைப் பரிசீலிக்க வேண்டும். சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். புல்வாமா தாக்குதலுக்கு மற்ற நாடுகளிடம் இருந்து கண்டனம் எழுகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவை மற்ற நாடுகள் ஆதரிக்கவும் செய்கின்றன. ஆனால், இவை அனைத்துமே அடையாளபூர்வமானவைதானே தவிர, ஆழமானவை அல்ல. மற்ற நாடுகள் தாங்கள் சொல்வதை அப்படியே செய்யக்கூடிய நிலையில் இல்லை. ஏனெனில், பயங்கரவாதம் – போர் மேலாண்மையில் பாகிஸ்தானுடன் சம்பந்தப்பட்டுதான் சர்வதேச நாடுகள் இயங்க வேண்டிய நிலை உள்ளது என்பதை மறுக்க முடியாது.
குறுகிய காலப் போர் குறித்த விவாதம் எழுந்துள்ளது. இது, பாகிஸ்தானுக்குப் பீதியை ஏற்படுத்தியிருக்காது என்பதே உண்மை. காரணம், இந்தியா எச்சரிக்கை மனோபாவத்துடன் இந்த விவகாரத்தை அணுகும் என்பதும் பாகிஸ்தானுக்குத் தெரியும். பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், தங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பாகிஸ்தான் சொல்வது அண்டப் புளுகு என்பது இந்தியாவின் நம்பிக்கை. அதேவேளையில், தாம் புவிசார் அரசியலில் சாதக நிலைகளை எட்டுவதற்காக, நெருக்கடியானதொரு சூழலை பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ளும் என்று நம்புவதற்கான காரணங்கள் இருக்கின்றன.
இவை அனைத்தையுமே சூழலுடன் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. 9/11 தாக்குதலுக்கு முன்பு வரை, பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை உருவாக்குவதில் இந்தியா வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சந்தை அளவு, இந்தியா – பாகிஸ்தான் போரால் ஆப்கானிஸ்தானில் தங்களது நடவடிக்கைகளுக்கு பாதிப்பு வரக்கூடும் என்பன போன்ற காரணங்களால், இந்தியாவின் கவலைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கவனத்தில் கொள்ளும். அந்தச் சூழல் இப்போது மாறிவிட்டது. டொனால்டு ட்ரம்ப் தமது நாட்டின் பாதுகாப்பு உயரதிகாரிகளின் பேச்சையே கேட்பதில்லை என்பது ஜேம்ஸ் மாட்டீஸின் ராஜினாமா உள்ளிட்ட விவகாரங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. கார்கில் போரின்போது பில் கிளிண்டன் செய்ததுபோல் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினைகளில் ட்ரம்ப் தலையிட மாட்டார் என்பதும் பிடிபடுகிறது.
ஒருவேளை, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேற முயற்சி செய்தால், பாகிஸ்தானிலிருந்தும் வெளியேற வேண்டிய சூழல் வரக்கூடும். அதன் பிறகு, சீனா – பாகிஸ்தான் பொருளாதாரப் பிணைப்புக்காக, பாகிஸ்தான் மீதான தனது ஆர்வத்தை சீனா கூட்டக்கூடும்.
இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் பட்சத்தில், பாகிஸ்தான் அதை மிகவும் கவனத்துடன் கையாளும் நிலையில் இருக்கிறது. அமெரிக்காவைவிட சீனாவின் தலையீடு அதிகரிப்பதற்கான சாத்தியம் அதிகம். ட்ரம்ப் ஆட்சிக் காலத்திலேயே தன் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பாகிஸ்தான் முற்பட வேண்டும். காஷ்மீர் பிரச்சினையைப் புதிய கோணங்களில் அணுக வேண்டும். அதேபோல், எதிர்கால நலன் கருதி சீனாவுடனான உறவிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் கொள்கை விவகாரங்களில் மோடி அரசின் முன்னெடுப்புகளால் நாட்டுக்கு இழப்புதான் மிஞ்சும். புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக, இந்தியாவின் மற்ற நகரங்களில் காஷ்மீரி மாணவர்கள், தொழில் துறையினரை கும்பல் கும்பலாக மிரட்டுவதும் தாக்குவதும் நடந்தேறியதையும் இங்கே கவனிக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் துயர் துடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய அணுகுமுறையாக பாஜகவுக்கு அரசியல் அதிகார ரீதியில் வெற்றி கிட்டலாம். ஆனால், அதன் கொள்கைகளில் உரிய மாற்றங்கள் வராமல் நிரந்தரத் தீர்வுக்கு வழியில்லை.
சுஷில் ஆரோன்
நன்றி: தி வயர்
https://thewire.in/diplomacy/narendra-modi-india-pulwama-attack

கருத்துகள் இல்லை: