ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

சென்னை 250 கார்கள் தீக்கிரை ..போரூரில் தனியார் வாடகைக் கார் நிறுத்திமிடத்தில் பயங்கர தீவிபத்து


THE HINDU TAMIL : சென்னை போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள தனியார் வாடகைக் கார் நிறுத்திமிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ அருகில் இருக்கும் இந்த இடத்துக்கும் பரவியதாகத் தெரிகிறது. கொழுந்து விட்டு எரியும் தீயைக் கட்டுபடுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கார்களில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கார்களில் பிடித்த தீ காரணமாக அந்த பகுதியில் ஏற்பட்ட புகையால்  அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். நிறைய  கார்கள் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
பெங்களூருவில் விமான கண்காட்சி கார் பார்க்கிங்கில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

 தனியார் காலிநிலம் உள்ள இடத்தில் தனியார் கால்டாக்ஸி நிறுவனத்தின் 200க்கும் மேற்பட்ட கார்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன. தினந்தோறும் அழைப்பின்பேரில் இங்கிருந்துதான் இந்தக் கார்கள் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. இங்கு கார்களை நிறுத்திவிட்டுத்தான் ஓட்டுநர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம்.
இங்குதான் அருகில் பற்றிய தீ பரவியதாலா அல்லது மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல் இல்லை, ஆனால் நிறைய கார்கள் எரிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனையடுத்து அப்பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: