சனி, 23 டிசம்பர், 2017

லாலு பிரசாத் யாதவ் மாட்டுதீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைப்பு


மாலைமலர் :கால்நடை தீவன வழக்கில் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.
ராஞ்சி: பீகார் மாநிலத்தில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் மாட்டு தீவனம் வாங்கியதில் ரூ. 960 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் வழக்கில் அரசு கருவூலங்களில் இருந்து முறைகேடாக ரூ.33.7 கோடி எடுக்கப்பட்டது தெரிய வந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 43-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கில் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்து பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
 இதுதவிர, மாட்டு தீவனம் வாங்குவதற்கு தும்கா பகுதியில் உள்ள அரசுகருவூலத்தில் இருந்து முறைகேடாக பணம் எடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.


இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் நேற்றே ராஞ்சிக்கு வந்து விட்டார். இன்று அவர் கோர்ட்டில் ஆஜரானார். அவருடன் மகனும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவும் வந்தார். இன்று காலை கோர்ட்டுக்கு வந்த நீதிபதி பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனால், இவ்வழக்கின் தீர்ப்பு பற்றிய பரபரப்பு அதிகரித்தது. கோர்ட் வளாகத்தின் அருகே பல்வேறு ஊடகங்களை சேர்ந்த நிருபர்களும், ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தொண்டர்களும் பெரும் திரளாக குவிந்திருந்தனர்.

உணவு இடைவேளைக்கு பின்னர் கோர்ட் மீண்டும் கூடியபோது லாலு பிரசாத் மீண்டும் நீதிபதியின் முன்பு ஆஜரானார். பிற்பகல் 3.30 மணியளவில் தீர்ப்பளித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்பட 15 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தார்.

பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜகநாத் மிஷ்ரா உள்பட 7 பேரை இவ்வழக்கில் இருந்து விடுவித்தும் அவர் உத்தரவிட்டார். தண்டனை விபரம் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட லாலு, ‘பொய் பிரசாரத்தால் சில வேளைகளில் உண்மைகூட பொய்யாக தோன்றும். உண்மை காலணியை மாட்டும் நேரத்துக்குள் பொய்யானது உலகின் பாதி தூரத்தை சுற்றி வந்துவிடும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தர்ம யுத்தத்தில் ஒட்டுமொத்த பீகார் மக்களும் தன்னுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், நீங்கள் எனக்கு தொல்லை தரலாம், ஆனால், என்னை அழித்துவிட முடியாது என்றுக் கூறியுள்ளார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் மேலிட தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட அனைவரையும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இருந்து ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து வந்தனர். 

வரும் ஜனவரி மூன்றாம் தேதி தண்டனை விபரத்தை சி.பி.ஐ. கோர்ட் அறிவிக்கும்வரை அவர் இங்கு அடைத்து வைக்கப்படுவார் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை: