செவ்வாய், 19 டிசம்பர், 2017

மகாராஷ்டிரா ஆறு மாதங்களில் 2,965 சிறுமிகள் காணமல் போயுள்ளனர் ... பாஜக சிவசேனா ஆட்சியின் வண்டவாளம்


மின்னம்பலம் :மகாராஷ்டிராவில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 2,965 சிறுமிகள் காணாமல் போனதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று(டிசம்பர் 19) சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டசபையில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ரந்தீர் சாவர்கர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார். அதில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை 2,881 சிறுமிகள் காணாமல் போயினர். இந்த எண்ணிக்கை 2,965 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை பதவியிலும் இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ், “சிறுமிகள் காணாமல் போவது குறித்த வழக்கில் குறிப்பிட்ட எந்தவொரு கும்பல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க 12 காவல் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், காணாமல் போன சிறுமிகளைக் கண்டுபிடிக்க மத்திய அரசு www.trackthemissingchild.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதற்காக ரயில்வே துறையும் www.shodh.gov.in இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற இணையதளங்கள் சிறுமிகளைக் கண்டுபிடிக்க மிகவும் உதவியாக இருக்கின்றன” என பதிலளித்தார்
மாநில அரசு ஆபரேஷன் முஸ்கான், ஆபரேஷன் ஸ்மைல் போன்ற திட்டங்கள் மூலம் 2016ஆம் ஆண்டில் 1,613 சிறுமிகளும் 2017ஆம் ஆண்டில் 645 சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: