சனி, 23 டிசம்பர், 2017

அந்த இருவர் திராவிடத்தை காத்தார்கள் ... இன்று இருவர் ஆரியத்துக்கு பண்டமாற்று செய்கிறார்கள் !

Shalin Maria Lawrence :  இருவர்! எம்ஜியாரும் கலைஞரும் அரசியல் ரீதியாக பிரிந்தாலும் சிலவற்றை பிரியாமல் பார்த்து கொண்டதுதான் அதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம் ,சாமர்த்தியம்.
ஒரு பக்கம் கலைஞர் தலைமையிலான திமுக இன்னொரு பக்கம் எம்ஜியார் தலைமையிலான அதிமுக .கட்சிகள் இரண்டானாலும் அவைகள் கொண்ட திராவிட சிந்தாந்தம் அவர்களது ஒரே புள்ளியில் இணைத்தது.
ஒருவர் இல்லை என்றாலும் மற்றொருவர் ஆட்சியில் இருந்தார். கிட்டதட்ட 50 வருட காலமாக இந்த மாநிலத்தை திராவிடத்தின் வசமாக்கியதுதான் நான் இங்கே குறிப்பிட்ட சாமர்த்தியம்.
இவர்களுக்குள் போட்டி போன்று வெளியே தோன்றினாலும் இவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு வடிவங்களில் திராவிட ஆட்சியை தமிழ்நாட்டில் நிலைத்திருக்க செய்தவர்கள்.
கலைஞர் மேல் கோவமா ,எம்ஜியாருக்கு வாக்கு.
எம்ஜியார் மேல் வருத்தமா ,கலைஞருக்கு வாக்கு என்று இருந்த நிலையில் ஜெயித்தது எது என்றால் அது திராவிடம் தான்.
இவ்விருவரும் பிரிந்து திராவிட ஆட்சியை இந்த மாநிலத்தில் நீட்டிக்க செய்தனர்.மேலும் திராவிடம் இல்லாத வேறு சிந்தாந்தம் பேசும் எந்த ஓரு கட்சியையும் இந்த மாநிலத்தில் காலூன்ற முடியாதபடி ஒரு செம்மையான அதிகார பகிர்வினை உருவாக்கி கொண்டனர்.
கலைஞர் அறிவை கிளர்ந்தெழ செய்தார் ,எம்ஜியார் உணர்வுகளை தட்டி எழுப்பினார் .பாதி தமிழ்நாடு தெரிந்து திராவிட வசமானது மீதி தமிழ்நாடு திராவிடம் என்று தெரியாமலேயே அதன் பால் மயங்கியது.

காங்கிரஸ் போன்ற பெரிய தேசிய கட்சிகள் கூட இங்கே அவர்கள் தயவில் இயங்கவேண்டிதான் இருந்தது.
ஜெயலலிதா வலது சாரி சிந்தனையுடையவர் ஆக இருந்தாலும் திராவிட அரசியலை மய்யமாக வைத்து தான் செயல்பட்டார்.
ஆனால் ஜெயலைத்தாவின் மரணத்திற்கு பின்னால் அவர் வளர்த்துவிட்ட விஷ பூச்சிகள் பின் வாசல் வழியாக தமிழ்நாட்டிற்குள் அம்மையார் அவ்வப்போது நுழைய விட்டு கொண்டிருந்த பாஜகவை முன்வாசல் வழி சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்று அரியணையில் ஏற்ற முயன்று வருகின்றன.
திராவிடத்தின் இன்னொரு கிளையான அதிமுகவை கைப்பற்றியதன் மூலமாக பாஜக இதுவரை தமிழ்நாட்டில் இருந்த திராவிட உள் அதிகார பங்கீட்டு முறையை உடைத்திருக்கிறது.
இங்கே தாமரை இரட்டையிலை எனும் மாறுவேடத்தில் கடந்த ஒரு வருடகாலமாக சுற்றி வருகிறது.
எந்த இருவர் சேர்ந்து திராவிடத்தை காப்பாற்றினார்களோ அதே மண்ணில் திராவிடத்தை ஆரியத்திற்கு பண்டமாற்று செய்திருக்கிறார்கள் பழனி -பன்னீர் எனும் இருவர்.
ஷாலின்

கருத்துகள் இல்லை: