வெள்ளி, 22 டிசம்பர், 2017

அழுக்குகளை அடித்துச் செல்லும் ‘அருவி’!.,... நிழலழகி 20

thetimestamil :கே. ஏ. பத்மஜா - Aruvi | Arun Prabu Purushothaman : ஓர் அருவியில் குளித்துவிட்டு வரும்போது ஏற்படும் புத்துணர்வு ‘அருவி’ படம் எனக்குத் தந்தது. மேலிருந்து கீழ் நோக்கி எங்கும் பாய்ந்துச் செல்லும் அருவி போல மனிதர்களுக்கு உள்ளும் வெளியும் இருக்கும் பல அழுக்குகளை அடித்துச் சென்றாள் இந்த அருவி.
‘அருவி’… அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு இறுதியில் அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம். 2016 ஆம் ஆண்டே பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்ற அருவி இப்போதுதான் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அறிமுகத் திரைக்கலைஞர்களின் பங்களிப்பைக் கொண்டிருப்பது கூடுதல் கவனிப்பு.
ஒரு நடுத்தரக் குடும்பத்தில் அப்பாவின் பாசத்தில் வளரும் பெண் அருவி. அவள் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் பிரச்சனைகளால், அவளை சமூகம் கையாண்ட விதமும், அவள் சமூகத்தை எதிர்கொண்ட விதமும்தான் அருவியின் கதை. இப்படிச் சொன்னால் அது நான் உங்களை ஒரு நிஜ அருவிக்கு அழைத்துச் சென்று, அந்த அருவியின் சிறப்புகள் என அதன் உயரம், அகலத்தை மட்டும் சொல்லும் ஒரு சாதாரண விஷயமாய் மாறிவிடும். ஆம், இந்த அருவியில் அவரவர் ரசிக்க ஆயிரம் காரணங்கள் உள்ளன.
அருவியாய் நடித்த அதிதி பாலன் பள்ளிப் பருவ பெண்ணாய் நமக்கு அறிமுகம் ஆகும்போதே அவள் நாம் பள்ளியில் செய்த எல்லா சேட்டைகளையும் செய்து நமக்கு நெருக்கமான தோழியாய் மாறிவிடுகிறாள். பெரிய லட்சியம் எல்லாம் ஏதும் இல்லாமல் மிகச் சாதாரணமாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழும் பெண் அருவி.

அப்பா, அம்மா, தம்பி, பள்ளித் தோழிகள் என்ற சின்ன உலகத்தில் சந்தோஷமாய் இருக்கும் அருவிக்கு அப்பா என்றால் தனிப் பிரியம். எல்லா குடும்பத்திலும் பெண்பிள்ளைகளுக்கு அப்பாவை அதிகம் பிடிப்பதும், அப்பாவிற்கு பெண்ப்பிள்ளை என்றால் ஒரு தனிச் செல்லம் கொடுப்பதும் என்ற விதியின் கீழ் அமைந்த அழகான குடும்பம் என்பதால், ஒரு விதத்தில் அருவியின் குடும்பத்துடனும் நம்மில் பலரும் நெருக்கம் ஆகிவிடுகிறோம்.
கல்லூரிப் படிப்பு புதிய நட்பு, புதுக் கலாச்சாரம் என்று வளர்ந்து வரும் அருவிக்கு அம்மா கண்டிப்பாய் இருக்கும்போது அப்பாவின் சலுகைகள் கிடைக்கிறது. ஒரு பிறந்தநாள் விழாவில் இருந்து கால தாமதமாய் திரும்பி வரும் அருவியை அப்பா “குடிச்சு இருக்கியா?” என்று கேட்கும்போது, அருவி தன் பார்வையில் “உங்கள் மகளை சந்தேகப்படுறீங்களா?” என்ற தொனியில் முறைத்துவிட்டு கதவை வேகமாய் சாத்துவாள். சில நாட்களில் அருவிக்கு இப்படி ஒரு கொடிய நோய் இருக்கிறது என்று தெரியும்போது, அவளுக்கு ஆதரவாய் இருக்க வேண்டிய குடும்பம், அவள் நடத்தையைச் சந்தேகப்பட்டு அவமானபடுத்தி அப்பாவால் வீட்டை விட்டு வெளியே துரத்தப்படுவாள். சிறுவயதில் தனக்கு சிகரட் வாடை பிடிக்கவில்லை என்று சொன்ன அருவிக்காக புகைப்பிடிப்பதை நிறுத்திய அப்பா. அந்த அளவுக்குப் பேரன்புகொண்ட அப்பா, அருவிக்கு இந்த வியாதி வந்ததற்கு அவளது செய்கைகள் காரணம் இல்லை என்று சொல்வதை நம்பவில்லை என்பதை அவர் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் புகைப்பிடிப்பதை பார்த்ததும் அருவி உணர்வாள்.
குடும்பம் என்பது தேவையான நேரத்தில் பாதுகாப்பையும் அரவணைப்பையும் கொடுப்பதற்கு அன்றி வேறு எதற்கு என்று வெறுத்துப் போகும் அருவி வீட்டை விட்டு வெளியேறி தோழி ஜெஸ்ஸி வீட்டில் தங்குவாள். அம்மா இல்லாமல் அப்பாவுடன் வளர்வாள் ஜெஸ்ஸி. அப்பாவுடன் மது அருந்திக்கொண்டு எதைப் பற்றியும் பேசும் அளவிற்கு சுதந்திரம் ஜெஸ்ஸி வீட்டில். ஆனால் அங்கும் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அருவி, எமிலி என்ற திருநங்கையுடன் நட்பு கிடைத்து ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேருகிறாள். அப்பாவிற்கு ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்படுகிறது என்று தெரியவரும் அருவி, பணத்தை ஏற்பாடு செய்து அப்பாவை பார்க்க போகும்போது அவரைப் பார்க்கவிடாமல் தடுக்கப்படுகிறாள்.
போலியான சமூகம், பெண்ணை உடல் இச்சைகாக மட்டுமே பார்க்கத் துடிக்கும் ஆண்கள், வறட்டு கெளரவம்… இப்படி பல விஷயங்களில் சலித்துப் போகும் அருவி மது, புகையையும் தொடத் தயங்கவில்லை. தனக்கு நியாயம் வேண்டும் என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீதி கேட்டு நிற்கும் அருவி, அந்தத் தொலைக்காட்சி நிகழிச்சியில் நடக்கும் போலித்தனங்களைக் கண்டு இன்னும் அதிகமாய் வெறுத்துப் போகிறாள். எல்லாம் புகழ்ச்சிக்கும், பணத்திற்காகவும் நடந்து வரும் மாயை என்று தெளிவு கொண்டு தன்னிடம் தப்பாக நடந்து கொண்டவர்கள் ‘மன்னிப்பு’ கேட்டாள் போதும் நான் கிளம்புகிறேன், வேறு ஏதும் வேண்டாம் என்பாள். சிறிது நேரத்தில் அவளுக்கு இருக்கும் அந்த வியாதியைப் பற்றி தெரிந்ததும் அங்கு இருக்கும் ஒவ்வொருவரின் ஏளனப் பார்வையும் அவளை உயிருடன் கொல்லும். அந்தக் கோபமும் ஆத்திரமும் அருவிக்கு அவர்கள் மேல் திரும்பும்.
வாழ்வதற்குத் தேவை அன்பு மட்டும்தான்; ஆனால் நாமோ மாயமான புகழ்ச்சி, பெருமை, பதவி, அந்தஸ்து என ஏதேதோ அழுக்குகளைப் போற்றிக்கொண்டு நமக்குள் இயல்பாய் இருக்கும் அன்பை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களுக்கும் நமக்கும் புரிய வைப்பாள் அருவி.
அந்த அருவி அன்பென்னும் மெல்லிய நூலால் நம் இயதங்களை ஒன்று சேர்க்கையில் எடுத்த ஆயுதம் “ட்ருத் ஆர் டேர்” விளையாட்டு. எங்கோ இறந்த பணியார பாட்டிகாக கண்ணீர் வடித்த அரசியல்வாதிக்கு இந்த அன்புதான் வாழ்க்கை என்று விளையாட்டாய் கற்று கொடுத்த அருவி நம்மையும் அந்தப் பணியார பாட்டிக்கும், களத்து தோசைக்கும் கண்ணீர் விடவைத்துவிட்டாள்.
அருவி ஒரு தீவிரவாதி, அவளால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டு இருப்பவர்களின் பாதுகாப்புக்காக வெளியில் போராடும் போலீஸும், செய்திச் சேனல்களும் தங்கள் பங்கிற்கு பரபரப்பை கூட்டிக் கொண்டே போக, உள்ளே அருவியை ஏளனமாய்ப் பார்த்த எல்லோரும் அருவியுடன் சேர்ந்து வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டு இருப்பதை பார்க்கும்போது எத்தனை ஆனந்தமாய் வாழ வேண்டிய வாழ்க்கையை நாம் வெளியில் தேவையில்லாத பரபரப்பாய் காட்டிக் கொள்கிறோம் என்று நம்மை நாமே நையாண்டி செய்துகொண்டது போல் இருந்தது.
இழப்பதற்கு எதுவும் இல்லை என்று தெரியும் நாளில், வாழ்க்கை இவ்வளவுதான் என்ற உண்மை உணரும் நாளில் எந்த விஷயமும் மனிதனை அச்சுறுத்த முடியாது என்பதை உணர்ந்த அருவி, அதன் பிறகு அவள் சந்தித்த எல்லோரையும் துணிச்சலாய் எதிர்கொள்கிறாள். வாழ வேண்டும் என்று ஆசைப்படும் அருவியின் கடைசி நாட்களில் அவள் மீது எந்தத் தப்பும் இல்லை என்பதை புரிந்துகொள்ளும் அப்பாவின் அரவணைப்பில் அருவி சேரும்போது நாமும் ஒரு நிம்மதியுடன் கனத்த பாதையைக் கடந்து வந்த மனதுடன் இருக்கையில் சாயும் போது அரங்கில் வெளிச்சம் பரவுகிறது.


நான் முன்றாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு பரதம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர், சலங்கைக்கு நூறு ரூபாய் கேட்டிருந்தார். “அப்பா ‘நாளைக்கு தரேன்’னு சொன்னார் மிஸ்” என்றேன். அதற்கு அப்பாவை ஏதோ தரக்குறைவாக பேசிய அந்த நடன ஆசிரியரிடம் நான் இனி நடனம் கற்கப் போகமாட்டேன் என்று அடம்பிடித்து வேறு நடன பள்ளியில் சேர்ந்தேன். அப்பா எனக்கு அந்த வயதில் மிகப் பெரிய உலகம்.
பின்னர், பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் சாலையில் என் பின்னால் வந்தப் பையன் என்னுடன் பேச நெருக்கமாய் வந்தான். அவனுக்கு பயந்து என் சைக்கிளை வேறு பாதையில் திருப்பினேன். என்னை விடாமல் பின் தொடர்ந்தவன் இன்னும் நெருக்கமாய் வந்து என்னோடு ஏதேதோ பேச ஆர்ம்பித்தான். பயத்தில் காது அடைத்து இருந்த எனக்கு மூச்சும் அடைத்தது எதிர்பாராத விதமாய் அந்தச் சாலையில் வந்த என் அம்மா இதை எல்லாம் பார்த்தபோது . அம்மா என் அருகில் வந்து என்னை திட்டுவதைப் பார்த்து அவன் மாயமாய் மறைந்து விட்டான். தேவையான அளவு பூஜை கொடுத்த பின்னும் மறுநாள் காலை அப்பாவிடம் தான் பார்த்ததை அம்மா சொன்னார். அப்பா அவர் பங்கிற்கு திட்டும்போது குத்திய அவரின் ஒரே ஒரு கேள்வி: “அவனை நீதான் வரச்சொன்னியா பேச?”. இதைக் கேட்டதும் கோபத்தில் கையில் இருந்த ஜியாகிரபி கைடை பறக்கவிட்டு எழுத்துச் சென்றேன். அதன் பிறகு அப்பாவுடன் இரண்டு ஆண்டுகள் பேசவே இல்லை.
அருவிக்கும் அவளது அப்பாவுக்குமான பாசப் பிணைப்பும், பின்னாளில் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் வெளிக்காரணிகளால் தன் மகளைப் புறக்கணித்த அப்பாவையும் பார்த்தபோது ஏதோ என் அப்பாவும் எனக்கு நினைவுக்கு வந்து சென்றார். அருவியைப் பார்த்த பெண்கள் பலருக்கும் தங்கள் அப்பாவை நினைவுகூர்வது உறுதி என்பதால் இதைப் பகிர்கிறேன்.

அருவியைப் போன்ற மனநிலையும், வெவ்வேறு வடிவிலான பிரச்சினைகளும் கொண்ட பெண்களுக்கு தேவையான நேரத்தில் அவர்களது தந்தையின் ஆதரவும் புரிதலும் துணையாக இருக்க வேண்டும். அது கிடைத்தால், தனிப்பட்ட விஷயங்கள் ஒரு சமூக பிரச்சினையாக உருவெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் என்று நம்புகிறேன்.
வாழ்வது எளிது; மனிதனாக வாழ்வதற்கு அன்பு தேவை என்று உணர்த்திய குறும்புப்பெண் அருவியின் அழகில் என்றும் நிழலாடலாம்

கருத்துகள் இல்லை: