ஞாயிறு, 15 அக்டோபர், 2017

எடப்பாடியின் ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழல் .. ராமதாஸ் குற்றச்சாட்டு!



ரூ.1000 கோடி தார் ஊழல்!மின்னம்பலம் : 2011-ஆம் ஆண்டில் தொடங்கிய ஊழல் சுனாமி இன்னும் ஓயவில்லை என்பதற்கு உதாரணம்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழலாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (அக்டோபர் 15) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் செய்வது மட்டும் தான் அதிமுக அரசின் ஒற்றைக் கொள்கையாக உள்ளது. 2011-ஆம் ஆண்டில் தொடங்கிய ஊழல் சுனாமி இன்னும் ஓயவில்லை என்பதற்கு உதாரணம்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழலாகும்.

2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சரான பிறகும் அந்தத் துறையை மற்றவர்களுக்கு விட்டுத் தராமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்குவதற்குக் கையூட்டு வாங்குவது ஒருபுறமிருக்க, தார் கொள்முதல் செய்வதில் மட்டும் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான முதன்மை மூலப்பொருள் தார் ஆகும். ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க 100 டன் தார் தேவைப்படும் என்பதை அளவீடாகக் கொண்டு, சாலை அமைப்பதற்கான ஒப்பந்த மதிப்பீட்டை அரசு தயார் செய்யும். ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்னர் தார் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் அதற்கேற்றவாறு ஒப்பந்த தொகை மாற்றப்படும். இது தான் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை கடைப்பிடித்து வரும் கொள்கை ஆகும்.
இந்திய சந்தையில் கடந்த 2014-ஆம் ஆண்டு தாரின் விலை டன்னுக்கு ரூ.41,360 என்ற உச்சத்தை அடைந்தது. இதை அடிப்படையாக வைத்து அந்த ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களுக்கான தொகை தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ஒரு டன் தாரின் விலை 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.30,260 ஆகவும், 2016-ஆம் ஆண்டில் ரூ.23,146 ஆகவும் குறைந்தது. விதிகளின்படி 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களுக்கான தொகை அப்போது நிலவிய தாரின் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக 2014-ஆம் ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டே ஒப்பந்தத்தொகை தீர்மானிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, 2014-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாலை பணிகளுக்கான ஒப்பந்தத் தொகையும் குறைக்கப்பட்ட தாரின் விலையை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்பட வேண்டும். ஆனால், இந்த விதிகள் எதையுமே நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பின்பற்றவில்லை. 2014-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 201-ஆம் ஆண்டில் ஆண்டில் தாரின் விலை பாதியாகக் குறைந்துவிட்டது. ஆனால், 2014-ஆம் ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டே ஒப்பந்தத் தொகை கருதப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு மட்டும் ரூ.1000 கோடி ஆகும்.
இது அறியாமல் செய்யப்பட்ட தவறல்ல. தார் கொள்முதல் ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட ரூ.1000 கோடி இழப்பு முழுவதும் முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான பழனிச்சாமியின் குடும்பத்தினருக்கே லாபமாகக் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஆணையிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் மிகப்பெரிய ஊழல் சக்தியாக உருவெடுத்திருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி தான். ஊழல் மூலம் குவித்த சொத்துக்களின் ஒரு பகுதியை முதலீடு செய்து தான் முதலமைச்சர் பதவியை குத்தகைக்கு எடுத்திருக்கிறார். தார் ஊழல் தொடர்பாக நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்காமல், இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்குத் தமிழக அரசு மாற்ற வேண்டும். விசாரணையை எதிர்கொள்வதற்கு வசதியாக முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: