வெள்ளி, 20 அக்டோபர், 2017

300 ஆண்டுகள்.. சேதுபதி மன்னரின் முதல் சூலக்கல் திருவாடானை அருகே கண்டெடுப்பு

எஸ். முஹம்மது ராஃபி ..ராமேசுவரம்< 300 ஆண்டு கால பழமையான சூலக்கல்லை படியெடுக்கும் தொல்லியர் ஆய்வாளர்கள் ராஜகுரு, விமல்ராஜ் மன்னர்கள் ஆண்ட காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு நடைபெறுவதற்காக விளைநிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி கோயில்களுக்கு அவற்றைத் தானமாக வழங்குவார்கள். இந்நிலங்களின் விளைச்சல் மூலம் கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெறும்.
அவ்வாறு வழங்கிய நிலத்தின் நான்கு மூலைகளிலும் எல்லைக்கல் நட்டுவைப்பார்கள். அவ்வகையில் சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலதானம் தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு வழங்குவது திருவிடையாட்டம் என்றும், சமண, புத்தப் பள்ளிகளுக்கு வழங்குவது பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் எல்லைக்கற்கள் நடப்பட்டு கோயில் நிலங்கள் பாதுகாக்கப்படும். சிவன் கோயிலுக்கு வழங்கப்படும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்கள் நடப்படும்.
இந்த சூலக்கற்களில் சந்திரனைக் குறிக்கும் பிறை வடிவமும் சூரியனைக் குறிக்கும் வட்டவடிவமும் இருக்கும். சூரியனும் சந்திரனும் இருக்கும் வரைக்கும் இந்த தர்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இச்சின்னங்கள் இடப்படுகின்றன. இக்கல்லில் எந்த மன்னர்கள் ஆட்சியில் வழங்கப்பட்டதோ அந்த மன்னர்களின் இலச்சினைகளும் இருக்கும். சில சூலக்கற்களில் நிலம் பற்றிய தகவல்கள் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் மேற்கொண்டிருந்த கள ஆய்வின்போது, மேலஅரும்பூரைச் சேர்ந்த பெத்தையா அவ்வூரில் பழமையான கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் இருப்பதாகச் சொன்னார். அங்கு ஆய்வு செய்தபோது அதன் குளக்கரையில் கல்வெட்டுடன் கூடிய ஒரு சூலக்கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,
சூலக்கல் அமைப்பு
”மேலஅரும்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட சூலக்கல், புல்லுகுடி சிவன்கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் இருந்ததாகும். 2.5 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள கல்லின் நடுவில் திரிசூலமும் அதன் இடது, வலது புறங்களில் சூரியனும் பிறையும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்லின் நான்கு பக்கமும் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு செய்தி
கி.பி.1711 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்து விஜயரகுநாத சேதுபதியின் பெயரால் விளத்தூர் திருவினாபிள்ளை என்பவர் புல்லுகுடியில் உள்ள கயிலாசநாத சுவாமி கோயிலுக்கு அரும்பூரில் உள்ள நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார். இதை செப்புப்பட்டயமாக சாமபிறான் (மந்திரி) கொடுத்துள்ளார் என்பதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இடப்பற்றாக்குறை காரணமாக தகவல்களும் பெயர்களும் சுருக்கமாக வெட்டப்பட்டுள்ளன. மன்னர் பெயர் விசையரனாத சேதுபதி காத்த தேவர் என உள்ளது.
கல்வெட்டில் தானம் வழங்கப்பட்ட நிலம் எங்குள்ளது என்ற தகவல் இல்லை. தானம் கொடுத்த நிலத்தில் எல்லைக்கற்கள் நடுவது வழக்கம் என்பதால் மேலஅரும்பூரில் சூலக்கல் உள்ள நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.
கி.பி.1201 ஆம் ஆண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கல்வெட்டில் புலிகுடி என இருந்த ஊர், சேதுபதிகள் காலத்தில் புல்லுகுடி என மாறியுள்ளது. புல்லுகுடி மேலஅரும்பூரிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.
ஆண்டு
தமிழ் ஆண்டான விகாரி தை மாதம் 26-ம் நாள் தானம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆங்கில ஆண்டு கி.பி.1720 ஆகும். ஸ்ரீமது எனத் தொடங்கும் இக்கல்வெட்டு, சந்திராதித்தவர்க்கு என முடிகிறது. இக்கல்வெட்டில் 32 வரிகள் உள்ளன. இரண்டு, மூன்று எழுத்துகள் ஒரு வரியாக உள்ளது. சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த முதல் சூலக்கல் கல்வெட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
 hindu

S

கருத்துகள் இல்லை: