திங்கள், 16 அக்டோபர், 2017

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சங்கத்தமிழ் நூல்கள் ... உலகுக்கு அளித்த உ.வே.சா

subashini.thf என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஓர் உலா - 136
========================
சைவ சமய பின்புலத்தோடு வளர்ந்தவர் உ.வே.சா. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்துப் பயிற்சி பெற்று பின்னர் திருவாவடுதுறை மடத்தில் தேசிகரிடம் கற்றவர். ஆகையினால் வலுவான சைவ சமயப் பின்னணி அவருக்கு நிறைந்திருந்தது. அவ்வப்போது மடத்திற்கு வருகின்ற வைஷ்ணவ அன்பர்களிடமிருந்தும் மகாவித்வானிடமிருந்தும் வைஷ்ணவ நூல்களையும் கற்றிருந்ததால் வைணவ நெறிகளைப்பற்றிய பின்புலத்தையும் அவர் பெற்றிருந்தார். சீவக சிந்தாமணி பதிப்புக்கான ஆராய்ச்சியின் போதுதான் உ.வே.சாவிற்குச் சமண சமய நெறிகளைப் பற்றிய அறிமுகம் கிட்டியது. பல சமண நண்பர்களின் துணையும் கிடைத்ததால் சமண நூல்களைப் படித்தும் அவர்களுடன் கலந்துரையாடியும் அந்த நெறி பற்றிய விசயங்களையும் மதக் கொள்கைகளையும், வழிமுறைகளையும் அறிந்து கொண்ட பின்னரே சீவக சிந்தாமணியை உ.வே.சா பதிப்பித்தார்.

பௌத்தமத பின்புலம் என்பது உ.வே.சாவிற்கு பரிச்சயம் அற்றது. மணிமேகலையை அச்சுப்பதிப்பாக்க வேண்டும் என்று ஆர்வத்தில் முதலில் தயாரிப்புப் பணிகளை ஆரம்பித்து விட்டார். வாசிக்க ஆரம்பித்ததும் அது எந்தச் சமய பின்னணியில் அமைந்த நூல் என்பதே அவருக்குப் பிடிபடவில்லை. கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக இருந்த மளூர் ரங்காசாரியர் என்பவர் மணிமேகலை பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல் எனச் சொல்லி விளக்கிய போதுதான் அது தனக்கு அன்னியமான ஒரு மதம் சார்ந்த ஒரு நூல் என்ற விசயமே அவருக்குப் புலப்பட ஆரம்பித்தது.
முதலில் இது என்ன சமயத்து நூல் என அறிந்து கொள்ள முடியாமல் தவித்த தவிப்பை விட இப்போது கூடுதல் கவலை அவருக்கு வந்து விட்டது. பௌத்தம் நமக்குத் தெரியாத மதமாயிற்றே. புத்தமதமே இந்தியாவில் இல்லையே. பௌத்தர்களை நாம் எங்கே போய்த்தேடி உதவிக் கேட்பது என அவருக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று.
உ.வே.சாவின் இக்குறிப்பை வாசிக்கும் போது இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பான கால கட்டத்தில் பௌத்தம் பற்றிய பேச்சுக்களும் செய்திகளும் வழிபாடுகளும் மிக அருகிப்போய் இருந்த காலகட்டமாக அது திகழ்ந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. அந்த அளவிற்குத் தமிழகத்தை விட்டே பௌத்த சமயம் ஏறக்குறைய முற்றும் முழுதுமாய் அழிக்கப்பட்ட நிலை இருந்திருக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலைகள் கொய்யப்பட்ட, முகங்கள் சிதைக்கப்பட்ட புத்தர் சிலைகள் கிடந்தாலும் இவை இன்ன இன்ன சிலைகள் எனக் கண்டறியும் திறனும், பௌத்த மதம் அழிக்கப்பட்ட வரலாறும் பொதுவாகவே மக்களை எட்டாத நிலையே இருந்திருக்கின்றது என்பதை ஊகித்து அறிய முடிகின்றது.
மணிமேகலையை வெளியிட வேண்டுமென்றால் முதலில் பௌத்தத்தை அறிய வேண்டும். ஆனால் அதற்கு நூல்கள் ஏதும் தன்னிடம் இல்லையே என வருந்திக் கொண்டிருந்த உ.வே.சாவிற்கு ரங்காசாரியர் கைகொடுத்தார்.
“நீங்கள் பயப்பட வேண்டாம்; பௌத்த மத சம்பந்தமான புத்தகங்கள் நூற்றுக் கணக்காக இங்கிலீஷில் இருக்கின்றன. வெள்ளைக்காரர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நான் பலவற்றைப் படித்திருக்கிறேன். பாராதவற்றை நான் படித்துப் பார்த்து உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
பௌத்த மதத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற தீவிர நாட்டம் உ.வே.சாவிற்கு எழுந்தது. முதலில் தன்னால் இயன்றவரை தாம் இதுகாறும் கற்ற தமிழ் நூல்களில் எங்கெங்கெல்லாம் பௌத்தம் பற்றிய குறிப்பும் மறுப்பும் வருகின்றன எனத் தேடி பட்டியலிடலானார். பௌத்தக் கருத்துக்கள் அடங்கிய நூல்களைத் தேடி வாசித்து ஆராயத்தொடங்கினார். நீலகேசியின் உரையில் பௌத்த மத கண்டனம் வருகின்ற பகுதிகளில் புத்தரின் வரலாறும் பௌத்த கொள்கைகளும் சொல்லும் செய்திகளைத் தனியே தொகுத்து எடுத்து எழுதிக் கொண்டார். புத்த மித்திரர் என்ற தமிழ்ப்புலவர் இயற்றிய வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையில் புத்தபிரானைப் பற்றிய பல செய்யுட்கள் உள்ளன. அவற்றையும் வாசித்து தனியாகப் பட்டியலிட்டுக் கொண்டார். சிவஞான சித்தியார் என்ற சைவ நூலில் பரபக்கத்தில் பௌத்தத்திற்கு ஆசிரியர் வைக்கும் கண்டனங்களை வாசித்துத்தொகுத்துக் கொண்டார். இவை தவிர வேறெந்த தமிழ் நூல்களும் பௌத்தம் பற்றிய தமிழ் நூல்கள் என்ற வகையில் உ.வே.சாவிற்குக் கிடைக்கவில்லை.
ஆங்கிலத்தில் மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ் முல்லர், ஓல்டன் பர்க், ரைஸ் டேவிஸ் ஆகியோர் எழுதிய புத்தகங்களை ரங்காசாரியார் வாசித்து தமிழில் மொழி பெயர்த்து உ.வே.சாவிற்கு விளக்குவார். அவற்றை உ.வே.சா குறிப்பெடுத்துக் கொள்வார்.
மேலும் சில புதிய புத்தகங்களை உ.வே.சா வாங்கிக் கொண்டார். பௌத்தம் பற்றிய ஆழமான பார்வை மணிமேகலையை அச்சுப்பதிப்பாகக் கொண்டுவர தனக்கு அவசியம் என்பதை உ.வே.சா உணர்ந்திருந்தார்.
மணிமேகலையின் செய்யுட்களைத் தொடர்ந்து வாசித்து வந்தார். முன்னர் தெளிவற்று இருந்த செய்யுட்களுக்கு இப்போது வெளிச்சம் பாய்ச்சினார்போன்ற புதுத் தெளிவு உ.வே.சாவிற்குக் கிட்டியது. இப்போது வாசிக்கும் போது பௌத்த சமயக் கருத்துக்கள் எளிய தமிழிலேயே அங்கே இருப்பதை உ.வே.சா அறிந்து கொண்டார். வாசித்து உள்ளம் மகிழ்ந்தார். உ,வே.சா வாசிப்பது, ரங்காச்சாரியாருடன் அதனைச் சொல்லி கலந்து பேசி மகிழ்வதுமாக இந்த ஆய்வு வளரத் தொடங்கியது. அதனை உ.வே.சா இப்படிக் கூறுகின்றார்.
"புலப்படாமல் மயக்கத்தை உண்டாக்கிய பல விஷயங்கள் சிறிது சிறிதாகத் தெளியலாயின. இனிய எளிய வார்த்தைகளில் பௌத்த சமயக் கருத்துக்கள் அதிற்
காணப்பட்டன. அவற்றைப் படித்து நான் இன்புற்றேன். ரங்காசாரியர் கேட்டுக் கேட்டுப் பூரித்துப் போவார். “ஆ! ஆ! என்ன அழகாயிருக்கிறது!
மொழிபெயர்ப்பு வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கின்றன!” என்று சொல்லிச் சொல்லிப் பாராட்டுவார் புத்தரைப் புகழும் இடங்களைப் பல
முறை படித்துக் காட்டச்சொல்லி மகிழ்ச்சியடைவார். “நான் இங்கிலீஷில் எவ்வளவோ வாசித்திருக்கிறேன்; ஆனால் இவ்வளவு இனிமையான பகுதிகளை
எங்கும் கண்டதில்லை” என்று சொல்லுவார்."
பௌத்த சமத்தின் நான்கு சத்தியங்களாகிய துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய நான்கையும் மணிமேகலை இப்படிச் சுருக்கமாக எளிதாகக் கூறுகின்றது.
“பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்;
பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்ன
தற்றோ ருறுவ தறிக”
மணிமேகலை உ.வே.சாவின் அச்சுப்பதிப்பாக்கத்தில் ஒரு மணிமகுடம். ஆதலால் அவரது எழுத்துக்களிலேயே அவரது அச்சுப்பதிப்பாக்க அனுபவங்களை நாம் வாசிப்பது இந்தப் பதிவிற்குப் பொருத்தமாக இருக்கும் எனக் கருதி கீழே சில பகுதிகளை வழங்குகிறேன்.
உ.வே.சா சொல்கிறார்.
"புத்த பிரானைப் புகழும் பகுதிகள் பல. தயாமூல தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த அவர் திறத்தை நன்கு வெளிப்படுத்தும் அடிகளை நான் படிக்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்க்கும்.
‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், மாரனை வெல்லும் வீரன், தீநெறிக் கடும்பகை கடிந்தோன், பிறர்க்கற முயலும் பெரியோன், துறக்கம்
வேண்டாத் தொல்லோன்’ என்பன முதலிய தொடர்களால் பாராட்டி இருக்கிறார் மணிமேகலை ஆசிரியர். இடையிடையே பிற தமிழ் நூல்களிற் கண்ட தமிழ்ப்பாடல்களைச் சந்தர்ப்பம் வந்தபோது நான் எடுத்துச் சொல்லுவேன். புத்தர் பிரான் நிர்வாண மடைந்த காலத்தில் அவர் அருகில் இருந்தோர் புலம்புவதாகக் கொள்ளுதற்குரிய செய்யுள் ஒன்று வீரசோழிய உரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்றிருந்தது;
“மருளறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலமால்
என்செய் கேம்யாம்
அருளிருந்த திரு மொழியா லறவழக்கங் கேட்டிலமால்
என்செய் கேம்யாம்
பொருளறியு மருந்தவத்துப் புரவலரைக் கண்டிலமால்
என்செய் கேம்யாம்”
என்னும் அச் செய்யுளை வாசித்தபோது படிக்க முடியாமல் நாத்தழுதழுத்தது. ரங்காசாரியரும் அதில் நிரம்பியுள்ள சோகரஸத்தில் தம்மை மறந்து உருகினார்.
இவ்வாறு புத்த சரித்திரத்திலே ஈடுபட்டு உருகியும் பௌத்த மத தத்துவங்களை அறிந்து மகிழ்ந்தும் பெற்ற உணர்ச்சியிலே மணிமேகலை ஆராய்ச்சி நடந்தது."
உ.வே.சா ஒரு சிறந்த ஆய்வாளர். மதங்களைக் கடந்த ஆராய்ச்சி நெறிமுறைகளை அவர் கடைப்பிடித்தார் என்பதோடு வேற்று மதங்களின் மேல் காழ்ப்புணர்ச்சியற்ற தமிழ் ஆராய்ச்சி பார்வையையே அவர் கொண்டிருந்தார். இத்தகைய ஆராய்ச்சி நெறிமுறை இருந்தமையினால் தான் அவரால் சீவக சிந்தாமணி, மணிமேகலை, சங்கத்தமிழ் நூல்கள் போன்ற பல தமிழ் நூல்களை இன்றைய தலைமுறைக்கு அச்சுப்பதிப்பாக தந்து செல்ல முடிந்தது.
பௌத்த எழுச்சி மீண்டும் கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் தொடங்கப்பட்டதில் அயோத்திதாசப் பண்டிதர் போன்றோர் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றனர். அந்த வரிசையில் பௌத்த காவியமாகிய மணிமேகலையை ஆராய்ந்து அச்சிட்டு தமிழ் உலகுக்கு அளித்த உ.வே.சா குறிப்பிடத்தக்கவரே.
தொடரும்...
சுபா

கருத்துகள் இல்லை: