புதன், 18 அக்டோபர், 2017

தீபாவளி சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர் ... தினம்!

vazhipokkanpayanangal.blogspot.com  :  இன்று நாம் தீபாவளி என்றுச் சொன்னாலே அது ஒரு இந்துப் பண்டிகையாகத் தான் அறியப்படும். அப்பண்டிகையை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கிருசுனர் நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற தினத்தை சிறப்பிப்பதற்காக தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய நாளை சிறப்பிக்க தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இன்னும் பல காரணம் கூறுகின்றனர்...ஆயினும் கிருசுனர் நரகாசுரனை கொன்றதை சிறப்பிக்கவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்பதே பலரின் நம்பிக்கை.
ஆனால் நம்மில் பலர் அறியாத விடயம் என்னவென்றால் இந்து மக்கள் மட்டுமே கொண்டாடும் ஒரு பண்டிகை அல்ல தீபாவளி...மாறாக சமணர்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையே தீபாவளி ஆகும். ஆம்...சமணர்களும் தீபாவளியினைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அவர்கள் அத்திருவிழாவை கொண்டாடுவதற்கு வேறு காரணங்கள் வைத்து இருக்கின்றனர். அக்காரணத்தை தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
கி.மு ஆறாம் நூற்றாண்டு...!!! சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர் அவர்கள் பாவாபுரி நகரத்திலே அங்கு கூடி இருந்த மக்களுக்கு அறஉரை செய்துக் கொண்டு இருக்கின்றார். அவரின் பேச்சைக் கேட்டு மக்கள் கூட்டமும் மெய் மறந்து அவரின் அருகேயே அமர்ந்து இருக்கின்றனர்.
இரவு முழுவதும் அவரின் உரை தொடர்கின்றது. மக்களும் அவரவர் தம் இல்லங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றனர். உரை முடிந்த உடன் அவ்விடத்திலேயே உறங்கியும் விடுகின்றனர். வர்த்தமான மகாவீரரும் தான் அமர்ந்து இருந்த இடத்தில இருந்தவாறே வீடு பேற்றினை அடைந்து விடுகின்றார் (சாதாரண வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் மரணம் அடைந்து விடுகின்றார் அல்லது முக்தி அடைந்து விடுகின்றார்). காலையில் விழித்து எழுந்து மக்கள் மகாவீரர் வீடு பேற்றினை எய்தியதைக் கண்ட உடன் அவர்களின் அரசனுக்குத் தெரிவிக்க, அவ்வரசன் மேலும் சில அரசர்களை அழைத்து ஆலோசனை நடத்தி இறுதியில் உலகிற்கே ஒளிவிளக்காய் திகழ்ந்த மகாவீரரை மக்கள் அனைவரும் நினைவுக் கொண்டு வழிபடுமாறு அவர் வீடு பெற்ற நாளில் (முக்தி அடைந்த நாளில்) மக்கள் அனைவரின் வீட்டிலும் விளக்கினை ஏற்றி வைத்து ஒரு சிறப்பான விழாவாக கொண்டாட வேண்டும் என்ற முடிவினைக் கொண்டு வருகின்றான். அன்று முதல் மக்கள் அனைவரும் மகாவீரர் வீடு பேற்றினை அடைந்த அந்த நாளில் வீடுகளில் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர். வரிசையாக தீபங்களை வைப்பதால் 'தீப ஆவலி' அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்றுப் பொருள் பட 'தீபாவளி' என்று அந்தத்தினம் பெயர் பெற ஆரம்பித்தது. மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்தப்படியால் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது. நிற்க.

இதுவே சமணர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்குரிய காரணம் ஆகும்.

இப்பொழுது நாம் காண வேண்டியது என்னவென்றால் இரு வேறு சமயத்தினர் தீபாவளி என்னும் ஒரே பண்டிகையை வெவ்வேறுக் காரணத்திற்காக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சாரார் இறைவன் அசுரனை அழித்ததை நினைவில் கொள்வதற்காக கொண்டாடுகின்றோம் என்றுக் கூறுகின்றனர். மற்றொரு சாரார் எங்களின் இறுதி தீர்த்தங்கரர் அந்த தினத்தில் வீடு பேற்றினை அடைந்தார் அதனை நினைவில் கொள்ளும் வண்ணம் தான் நாங்கள் கொண்டாடுகின்றோம் என்றுக் கூறுகின்றனர். மேலும் இவ்விருசமயங்களுக்குள்ளே மாபெரும் சண்டைகள் வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றன. அந்நிலையில் தீபாவளி உண்மையிலேயே யாருடைய பண்டிகை என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.

மகாவீரரைக் குறித்து நமக்குச் சான்றுகள் கி.மு காலத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் கி.மு வில் கிருசுனர் என்று ஒரு கடவுள் இருந்ததற்கோ அல்லது அசுரர்கள் என்றச் சாரார் இருந்தமைக்கோ எவ்வித சான்றுகளும் இதுவரைக் கிட்டப்பெற வில்லை. எனவே காலத்தில் சமணர்களின் கதை முந்தியதாக இருக்கின்றது. அப்படி இருக்க இந்து சமயத்தில் புதிதாய் தீபாவளியைக் கொண்டாட வேண்டியத் தேவை யாது என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நம்முடைய உதவிக்கு வருகின்றார் ஆராய்ச்சியாளர் மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்கள். அவரின் கூற்றுப்படி


"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!!!" (புத்தகம்: சமணமும் தமிழும் - மயிலை.சீனி.வேங்கடசாமி)


மேலே உள்ள அவரின் கூற்றின் படி இந்து சமயத்தில் சேர்ந்த சமண மக்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளும் நிர்பந்தம் இந்து சமயத்திற்கு வந்தமையால் அது தீபாவளி என்ற சமணப் பண்டிகையை தத்து எடுத்துக் கொண்டு வெவ்வேறு புராணக் கதைகளை அப்பண்டிகைக்கு கற்பித்துக் கொண்டது என்கின்ற கருத்து வருகின்றது. அக்கருத்து சற்று பொருந்தவும் செய்கின்றது. அதாவது,

சமணர்கள் மகாவீரரை வணங்குகின்றனர். மகாவீரர் இறந்த நாளை தீபாவளியாக அவர்கள் கொண்டாடுகின்றனர். இந்துமக்களுக்கு சமணர்கள் எதிரிகளாக இருந்தால் மகாவீரரும் எதிரியாகத் தான் இருப்பார். எதிரியினை அசுரனாக சித்தரிப்பது என்றுமே நிகழும் ஒன்று தான். எனவே இந்துக்கள் மகாவீரர் இறந்த நிகழ்வை 'கிருசுனர் அசுரனை வென்றார்...அதாவது அந்த தினம் அசுரன் ஒருவன் இறந்து இருக்கின்றான்" என்றுக் கூறி கொண்டாடுகின்றார்கள் என்றும் சிலர் கருதுகின்றனர். அதாவது சமணர்களை பொறுத்தவரையில் அந்த தினத்தில் மகாவீரர் வீடு பேற்றினை அடைந்து இருக்கின்றார்...இந்துக்களைப் பொறுத்த வர அசுரன் ஒருவன் இறந்து இருக்கின்றான். பொருத்தமாகத் தோணுகின்றது தானே.

ஆனால் நாம் இங்கே சிந்தித்துப்பார்க்க வேண்டியது என்னவென்றால் அக்காலத்தில் பல விடயங்கள் நல்ல எண்ணங்களுடனேயே செய்யப்பட்டு இருக்கின்றன. அத்தகைய விடயங்கள் பிற்காலத்தில் மாற்றப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் உண்மையிலேயே மகாவீரர் இறந்ததைத் தான் அசுரன் இறந்தான் என்று வைணவச் சமயம் கூறுகின்றதா அல்லது அதில் வேறு ஏதேனும் பொருள் இருக்கின்றதா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டித் தான் இருக்கின்றது.

ஆனால் தீபாவளி என்பது சமணப் பண்டிகை என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
You might like:
 சுசிலா : "சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!!!" (புத்தகம்: சமணமும் தமிழும் - மயிலை.சீனி.வேங்கடசாமி)

கருத்துகள் இல்லை: