சனி, 21 அக்டோபர், 2017

கமல்: மெர்சல் படத்தை மீண்டும் தணிக்கை செய்யவேண்டாம்

மின்னம்பலம் : மெர்சல் திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. மறுபடியும் அதை சென்சார் செய்ய வேண்டாம்’ என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில், மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல் குறித்து பேசப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் காட்சிகளில், “இந்தியாவில் வெறும் டிஜிட்டல் பணம் மட்டுமே உள்ளது” என்று நகைச்சுவை நடிகர் வடிவேல் பேசுவது போலவும் அடுத்து ஜி.எஸ்.டி. தொடர்பாக, “இந்தியாவை விடக் குறைவாக ஜி.எஸ்.டி. வசூலிக்கும் நாடுகளில் கல்வியும் மருத்துவமும் இலவசமாக கிடைக்கிறது” என்றும், ஆனால், “28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் இந்தியாவில் ஏன் கல்வியும், மருத்துவமும் இலவசமில்லை?” என்று ஒரு காட்சியில் பேசுவது போலவும் இடம்பெற்றுள்ளது.

இதற்கு, பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, “அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார். மெர்சல் திரைப்படத்தில் உள்ள ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும். நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும்” என்று மெர்சல் படத்துக்கு எதிராக பேசியுள்ளார்.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “மெர்சல் பட வசனம் நடிகர் விஜய்யின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது” என்றும், “ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்” என விஜய்யை மத ரீதியாக விமர்சித்துள்ளார்.
ஆனால், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் சமீபகாலமாக ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து சமூக பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் நடிகர் கமல்ஹாசன், நேற்றைய தினம் தன்னுடைய பதிவில், “மெர்சல் திரைப்படத்துக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. அதை மறுபடியும் சென்சார் செய்ய வேண்டாம். விமர்சனங்களை நியாயமான முறையில் எதிர்கொள்வோம். விமர்சகர்களை மவுனமாக்க வேண்டாம். பேசும்போதுதான் இந்தியா எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: