ஞாயிறு, 7 மே, 2017

தமிழின் முதன்மையை பறைசாற்றிய கால்டுவெல் பாதிரியாரின் பிறந்த நாள்,

திராவிட அரசியலைத் தொடங்கிவைத்த கால்டுவெல்!
1854ஆம் ஆண்டு ‘திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் வெளியான பின்னர், அந்த நூலின் கருத்தாக்கம்தான் கடந்த 150 ஆண்டுகளாக தமிழகத்தை இயக்கி வருகிறது. அத்தகு சிறப்புமிகு நூலை எழுதியவர் கால்டுவெல் பாதிரியார் ஆவார். திராவிட மொழிகள் என்ற கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் எல்லீஸ் என்றாலும், அதை, மொழியியல் சமூக பண்பாட்டு தளங்களுக்கு விரித்தவர் கால்டுவெல். தமிழகத்தின் திராவிட அரசியலுக்கு தனது ஆய்வின் கருத்தாக்கம் மூலம் அடிகோலிய ராபர்ட் கால்டுவெல் பாதிரியார் மே 7ஆம் தேதி 1814ஆம் ஆண்டில் பிறந்தார். தமிழகத்தில் திருநெல்வேலியில் உள்ள இடையன்குடி தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார். அவருடைய திராவிட மொழிகள் ஒப்பிலக்கண ஆய்வு நூல், தமிழின் பெருமையை மொழிவதோடும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் பூர்வகுடிகள் என்று கூறியது. இவர் ஆகஸ்ட் 28ஆம் தேதி 1891ஆம் ஆண்டு மறைந்தார்.

தமிழின் முதன்மையை பறைசாற்றிய கால்டுவெல் பாதிரியாரின் பிறந்த நாள், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினராலும், திராவிட மற்றும் தமிழ் அமைப்புகளாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு கால்டுவெல் பாதிரியாரின் 200ஆவது ஆண்டு பிறந்தநாள் தமிழக அரசாலும் பல்வேறு அமைப்புகளாலும் நிறுவனங்களாலும் கொண்டாடப்பட்டது.
இன்று மே 7ஆம் தேதி 2017ஆம் ஆண்டு ராபர்ட் கால்டுவெல் பாதிரியாரின் 203ஆவது பிறந்த நாளில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதேபோல, சென்னை அண்ணாசதுக்கம் வளாகத்தில் உள்ள கால்டுவெல் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  மின்னம்பலம் 

கருத்துகள் இல்லை: