வியாழன், 11 மே, 2017

முற்போக்கு இயக்கங்களின் அரசியல் அதிகார பீடம் திமுகதான் எனவே பொறுப்பும் கடமையும் உள்ளது!

 வாசுகி பாஸ்கர்  :பாமக மத்தியில் காலூன்றியத்திற்கும், பெரும் பண பலத்தோடு தனியாக தேர்தலில் நிற்கும் அளவு வளர்ந்ததிற்கும் முக்கியம் காரணம் திமுக
அரசியலில், நன்றி விசுவாசத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது, அப்படி எதிர்பார்த்தால் அது அரசியலே கிடையாது, அப்படி ஒருவேளை நன்றியோடு இருக்க வேண்டுமானால் ராமதாஸ் கண்டிப்பாக கலைஞருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
ஆனால், நன்றி விசுவாசம் போன்றவையை எல்லாம், சில திமுகவினர், விசிக விடம் எதிர்பார்பார்களே ஒழிய, கடுமையாக விமர்சிப்பார்கள் ஒழிய, நியாயமாக திமுகவால் வளர்ந்த ராமதாஸின் கலைஞர் குறித்த நக்கல் நையாண்டி பேட்டிகளை பெரிதும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளால் வளர்ந்தது பாமக மட்டுமல்ல, திமுக வை வீழ்த்த தமிழ் நாஜிக்கள் திமுக மீது சுமத்தும் சுற்றசாட்டு "திமுக சாதியத்தை வளர்த்தது என்பது"
திமுகவுக்கு முன் தமிழ் சாதிகள் ஒண்ணும் தோள் மேல் கைபோட்டு ஒரே சிகரெட்டை மாற்றி மாற்றி பற்றவைத்து "முஸ்தபா முஸ்தபா" பாடிக்கொண்டிருக்கவில்லை, ஆகையால் இந்த கேள்வியை திமுக முன் வைக்கும் எல்லா தமிழ் நாஜிக்களுக்கும் அந்த யோக்கியதை இல்லை, சாதி பிரியர்களாக இருந்து கொண்டு கேரளா, ஆந்திரா போல சாதியை பின்னால் போட்டு கொள்ள முடியாமல், சாதி அரசியலை மறைத்து மறைத்து பண்ண வேண்டிய துர்பாக்கிய சூழலை திராவிட அரசியல் தான் உருவாக்கியது என்பதை மறுக்க முடியாது. திமுக மீது அந்த கடுப்பு தமிழ்ச்சாதி பிரியர்களுக்கு இல்லாமல் இல்லை.

சாதி வரளர்ப்பு என்று சொல்வதை விட திமுக வின் திராவிட அரசியலில் தான் இடைநிலை சாதிகளின் கல்வி பொருளாதார மேம்பாடு உருவானது. மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வளர்ந்தார்கள், வளர்ச்சியோடவே சாதி பெருமிதமும் வளர்ந்தது. ஆகையால் திமுக செய்தது ஒரு பெரும் சமூகத்தின் வளர்ச்சி, அதனோடவே அரசியல் நிர்பந்தங்களால் சாதியில் சாணக்யத்தனத்தை கையாள வேண்டிய சூழல், அதையும் செய்தார்கள்.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், திமுகவால் யாராரார் எல்லாம் வளர்ந்தார்களோ, அவர்களே திமுகவுக்கு எதிராக திரும்பியது தான், கடுமையான எதிரிகளாக திரும்பினார்கள், சாதி பாசத்தை வைத்து காய் நகர்த்துபவர்களே திமுகவை சாதியத்தை வளர்த்தது என்று சொல்வது எல்லாம் கிரேசி மோகன் ஸ்க்ரீன்ப்லே.
தமிழ்நாட்டில், எங்களை ஏன் இப்படி ஆக்கினீர்கள் என்று திமுகவை நோக்கி கேள்வி கேட்க வேண்டுமானால் அது தலித் மக்களை, இயக்கத்தை தவிர வேறு யாருமில்லை.
முற்போக்கு இயக்கங்களின் அரசியல் அதிகார பீடம் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தான், rss எப்படி இந்து இயக்கங்களுக்கு, கட்சிகளுக்கு மையமாக இருக்கிறதோ, அப்படி இவ்வியக்கங்களை அரசியல் ரீதியாக மேம்படுத்த வேண்டியதும், கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லி அரவணைத்து கொள்வதற்கு நியாயமாக திமுகவுக்கு யாரும் சொல்லித்தர கூடிய நிலையிலையே இருக்க கூடாது. ஒரு சமூகம் வளர்ந்து அதிகாரத்தை நோக்கி நகருவது தான் அந்த சமூகம் வளர்ந்ததிற்கான அறிகுறி.
இந்த சமூக நீதி பார்வையை மறந்து, ராமதாஸ் வளர்ந்து இன்னுமொரு அடிமேல் வைத்து போக முயற்சி செய்வதை போல விசிக, புதிய தமிழகம் முயற்சி செய்தால் கூர்மையாகும் திமுகவினரின் கத்திகள், ராமதாஸ் என்று வரும் போது மொன்னையாக விடுகிறது.
ராமதாசுக்கு முப்பது நாற்பது என சீட்டுக்களை அள்ளி தெளித்து, தலித் காட்சிகள் ஒன்றுக்கும் ரெண்டுக்கும், ஐந்துக்கும் என அந்த நிலையிலேயே வைத்து, தமிழ்நாஜிக்களும் இடைநிலைசாதி திமுகவினரும் ஒரு இடத்தில் சமன் படுகிறார்கள்.
அது பாமகவை மேலோட்டமாக விமர்சிப்பது, அல்லது செம்பருத்திப்பூவால் தேன் தடவி விமர்சிப்பது.
கொள்கைகள் வீரியமாக இருந்தாலும் இல்லாமல் போனாலும் தனிப்பெரும் கட்சியாக உருவாகிவிட்ட திமுகவுக்கு அவ்வப்போது திமுகவின் rss இடத்தில் இருக்கும் திக.வுக்கோ, அல்லது முற்போக்கு கொள்கையுடைய தலித் அமைப்புகளின் குரல்களை கேட்காமல் திமுக இருப்பதால், இருந்தால், கிருஷ்ணசாமியின் குற்றசாட்டை முழுமையாக நிராகரிப்பதற்கும் இல்லை.
ஸ்ரீல ஸ்ரீயாக மாறவிற்கும் கிருஷ்ணசாமியை இப்போ தான் முதல் முறையாக பார்க்கிறீர்களா என்ன? இடஒதுக்கீடு பேசி, பிற்படுத்தப்பட்ட அரசியல் பேசி வன்னியர்களாக ஒன்றிணைத்து அதை வைத்து வாக்குவங்கி அரசியலை உருவாக்கிய ராமதாஸே க்ரிஷ்ணசாமிக்கு முன்னோடி தானே? வன்னியர் தேவர், நாடார் என உருவாகி வரும் வாக்கு வங்கி அரசியலை பார்த்து தான் தலித் என்கிற பொதுவார்த்தையை உடைத்து சாதியாக பிரதிநிதித்துவ படுத்த நினைக்கிறார் கிருஷ்ணசாமி.
இதற்கு பல ஸ்ரீல ஸ்ரீக்கள் உதாரணமாக இருக்கிறார்கள், இதற்கெல்லாம் மௌனம் காப்போர் கிருஷ்ணசாமியை விமர்சனப்படுத்துவதில் ஒரு நியாயமும் இல்லை.
என் கொள்கையின் நேர்மையோடு தான் திமுகவில் இருக்கும் ஸ்ரீல ஸ்ரீக்கள், தலித் அரசியலில் இருந்து உருவாகும் ஸ்ரீல ஸ்ரீக்களை விமர்சனப்படுத்துகிறேன்.
மற்றபடி திமுகவின் பிரதிநிதியாக திமுக மீது இந்த குற்றசாட்டுகள் விழுவதை ஏற்கமுடியாமல் எதிர்வாதம் செய்யும் இணையவாசிகளுடன் விவாதம் செய்ய எனக்கு ஏதுமில்லை, கொள்கை சரிவை குறித்து பொதுவான நாட்டு நிலைமையை குறித்து அச்சம் கொள்கிறவனாய் என் போன்றோரின் குரல்கள் முற்போக்கு பேசும் அரசியல் கட்சிகளுக்கு, தலைமைகளுக்கு கேட்க வேண்டும்.
அது மட்டுமே எம் கரிசனம். முட்டு கொடுத்து நாம் எதையும் இங்கே கிழிக்க போவதில்லை.

கருத்துகள் இல்லை: