வெள்ளி, 12 மே, 2017

பாகுபலி : ஜெய் பிரம்மாண்டம் ! ஜெய் அடிமைத்தனம் !

அடிமைத்தனம் குளோசப்பில் வந்தாலும் சரி, பிரம்மாண்டமான செட்டுக்களில் வந்தாலும் சரி, கம்யூட்டர் கிராபிக்சில் உப்பினாலும் சரி பாகுபலியின் ஒரே முதலும் கடைசியுமான உணர்ச்சி இதுதான்.
பாகுபலி  ஓரிரு நாளில் சுருட்டும் வசூல் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி
விடுமாம். இந்த வெற்றிக்கு காரணம் என்ன? பாகுபலியில் மனதையும், பணத்தையும் பறிகொடுக்குமளவு இழப்பதற்கு ஏராளமோ, ஓரளவோ வைத்திருப்பவர்கள் என்ன கூறுகின்றார்கள்?
“சினிமா நேசிப்பை தனது ரத்த நாளங்களிலேயே பிடித்து வைத்திருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியால் மட்டுமே இத்தகைய படத்தை எடுக்க முடியும். பொது மக்கள் ரசனை, கதை – காட்சி – நுட்பம் பால் கொண்டிருக்கும் நம்பிக்கை – விடாமுயற்சி – படைப்புத்திறன், கட்டப்பாவின் பொட்டிலிருந்து, குதிரைக்கு அடிக்கப்பட்ட லாடம் வரை காட்சிகளின் துல்லியமான செய்நேர்த்தி…… என்று அடுக்குகிறார்கள். இவர்களைத் தவிர்த்து ஊடகங்கள் அனைத்தும் “ஜெய் பாகுபலி” என்றே அடிவயிற்றுக் குரலில் ஆர்ப்பரிக்கின்றன.

படத்தில் பிரம்மாண்டம் இருப்பதால் பட்ஜெட், வசூல் இரண்டுமே அதி பிரம்மாண்டமாக இருந்தாக வேண்டும் என்பது இயக்குநர், தயாரிப்பாளரின் விருப்பம் மட்டுமல்ல. சினிமா – ஊடக முதலாளிகளின் தேவையும் கூட.
பிரதமரான பிறகு மோடி எப்படி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக அல்ட்ரா சவுண்டு புகழ் அர்னாப் கோஸ்வாமி போன்றோர் நம்மை கருதவைக்க வற்புறுத்தினரோ, ரஜினி மாபெரும் நட்சத்திரமான பிறகு அவரது சூப்பர் மொக்கைகள் கூட செமையான மாணிக்கங்களென்று ஏன் தமிழ் ஊடகங்கள் வியக்கச் சொன்னதுவோ, ஏ -1 குற்றவாளி ஜெயா இன்றும் எப்படி தந்தி டிவி பாண்டே, புதிய தலைமுறை கார்த்திகேயன் போன்றோரின் காந்தி காமராஜ் வரிசையில் வருகிறாரோ அப்படித்தான் பாகுபலியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.


சினிமாவில் இருப்பது கலையா இல்லை மூலதனமா?
ஒரு சிறு முதலீட்டுப்படம் கதையால் வெற்றி பெறுவதை உத்திரவாதப்படுத்திக் கொண்டு தமிழ் ஊடகங்கள் பாரட்டுவதற்கும், மீப்பெரு முதலீட்டுப்படமான பாகுபலி வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று நிச்சயிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தை அவர்கள் வெளியிடுவதற்கும் பாரிய வேறுபாடு உண்டு.
கருணாநிதியை விமர்சிப்பது போல மாகி நூடிஸ்சை விமர்சித்துவிட முடியாது. பங்காளிச் சண்டையின் பொருட்டு ஜெயாவை பகைத்துக் கொண்ட தினமலர், அரசு விளம்பரங்களை இழந்தாலும், நெஸ்லே, பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பங்களை இழந்துவிட முடியாது. ஆகவே தயாநிதி மாறன் இந்தி படித்ததால்தான் அமைச்சராக்கினேன் என்று கருணாநிதி கூறியதாக தினமலரும், துக்ளக்கும் பொய்யுரைப்பது போல தற்போது தடை நீக்கப்பட்ட மாகி நூடில்சு குறித்து அறிவியலாளர் ஒருவரை வைத்து கூட உண்மையை வெளியிட முடியாது.
சினிமாவில் இருப்பது கலையா இல்லை மூலதனமா? என்றால் அது மூலதனத்திற்கு அடங்கிக்கிடக்கும் வரைதான் கலை அல்லது சேவை செய்யும் வரைதான் அந்தக் கலை விலை போகும். ஆகவே ஒரு சினிமாவின் கலை, படைப்புத்திறன், சமூகவியல், ரசனை பார்வையை விமரிசிப்பது என்பதெல்லாம் பாகுபலிக்கான ஊடக எத்தனிப்புகளில் எடுபடாது.
“கோட்பாடு, வாய்ப்பாடு, ரசனை, உளவியல் போன்ற தேய் வழக்கான வாய்ப்பாடுகளால் எனக்கு ஒப்பாரி வைத்து ஒடுக்கி விட முடியாது….நான் பாகுபலிடா” என்று கபாலி வாய்சிலும் அதை மொழிபெயர்க்கலாம்.
தங்களை ஆல்டைம் நடுநிலையாளர் என்று தாமே நியமித்துக் கொள்ளும் உரிமை படைத்துள்ள சமஸ், அரவிந்தன் போன்ற தி இந்து ஆசிரியர்களோ, ஜெயா சமாதியை நீக்கவேண்டும் என்று வீடியோவிலேயே புரட்சி நடத்திய ஆனந்த விகடனின் விமர்சனக்குழுவோ ஒரு போதும் பாகுபலி குறித்து இடித்துரைக்க மாட்டோர்கள். ஒரு வேளை தனது ஃபேஸ்புக் நிலைத்தகவலில் படம் பிடிக்கவில்லை என்று சமஸ் கூறும் பட்சத்தில் அடுத்த நாளே ஒரு பிரம்மண்ட படத்தின் வெற்றியை புரிந்து கொள்ளாதவர்கள் ஒரு சுமாரான தோல்விப் படத்தைக் கூட வெளியிட அருகதையற்றவர்கள் என்று ஒரு தத்துவக் கட்டுரையை சமஸிடம் எதிர்பார்க்கலாம்.
எந்திரனோ, கபாலியோ, பாகுபலியோ இப்படி அனைத்திற்கும் அப்பாற்பட்ட சினிமா வெற்றிகளாக பாரக்க வைப்பது, ஊடகங்கள் மற்றும் திரைத்துறை முதலாளிகளின் சொந்த உயிர்வாழும் நலனோடு தொடர்புடையது. இருப்பினும் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு இத்தகைய ஏகபோக கருத்துருவாக்கம் சாத்தியமா என்ற கேள்வி நமக்கு எழலாம்.
ஏ ஐ எனப்படும் செயற்கை அறிதிறனின் செயல்பாட்டுக் களமே சமூக வலைத்தளங்கள்தான். இங்கே புரட்சி குறித்து பூத்துக் குலுங்கும் புதிய மலர்கள் நூறு என்றால் புரட்சி என்பது பேரழிவு என விளக்கும் ஏக போக பிளாஸ்டிக் மலர்கள் ஆயிரம் எனலாம். ஆல் டைம் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இன்றும் ஏக போக முன்னோடியாக இங்கே நிலைபெறுவது இதற்கோர் சான்று. இணையத்தில் செயல்படும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம், நேர ஒதுக்கீட்டை அறிந்து கொள்ளும் மென்பொருட்கள் அவர்களின் பலவீனங்களுக்கு ஏற்ப பலான கடைகளை பார்த்து பார்த்து ஒதுக்குகின்றன, கண் சிமிட்டுகின்றன. இதற்கிடையில் நீங்கள் அமெரிக்காவை எதிர்த்து ஒரு ஆய்விற்காக இணையம் இறங்கினாலும் இறுதியில் அம்பிகாபதி அமராவதி காதல் குறித்து கூட வெட்டியாக படிக்கும் நிலை வரலாம்.

யூ-டியூப் விமர்சகர் பிரசாந்
இன்றும் இனியும் சமூகவலைத்தளங்களின் கருத்துருவாக்கத்தை ஆளும் வர்க்கங்களே கட்டுப்படுத்தும். சினிமா விமரிசனங்கள் மூலம் பிரபலமாகி யூ டியூபில் சானல் நடத்தும் பிரசாந்த் என்பவர் பாகுபலி 2 குறித்த வியப்பு தரிசனத்தில் (இது விமரிசனமல்லவே!) இப்போதே இயக்குநர் ராஜமவுலி இங்கிருந்தால் அவரது காலில் விழுவேன் என்று தொழுது விட்டே ஆரம்பிக்கிறார். இவரைப் போன்ற அறிஞர் பெருமக்கள்தான் இலட்சக்கணக்கில் கவனிக்கப்படுகிறார்கள் எனும் போது நிமிர்ந்து நின்று விமரிசிப்பவர்களை எண்ணுவதற்கு ஒரு கையும் படிப்பவர்களை எண்ணுவதற்கு பத்து கைகளும் போதும்.
பிரசாந்தைப் போன்றவர்களும் மேற்கண்ட சினிமா இன்டஸ்ட்ரி எனும் வளையத்தில்தான் தொழில் செய்ய முடியும் என்று தெளிந்து விட்டவர்கள்தான். ஆகவே பாகுபலிக்காக ராஜமவுலி எப்படி 5 ஆண்டுகள் படபக்தி விரதமிருந்தார், நடிகர் பிரபாஸ் எப்படி லோ கார்ப் டயட் எடுத்தார், பல பட வாய்ப்புக்களை தியாகம் செய்து விட்டு எப்படி அவர் காசில்லாமல் கஷ்டப்பட்டார் என்று ஐந்து ஆண்டுகளாக ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்ட சேதிகளின் நூற்றில் ஒரு பங்கு கூட கஷ்டமே வாழ்க்கையாக கொண்டிருக்கும் இந்திய விவசாயிகளைப் பற்றி எழுதிய சாய்நாத்தின் கட்டுரைகளுக்கு இல்லை.
அடுத்து சினிமா எனும் தொழில் உலகைச் சாராமல் கருத்தளவில் சுயம்பாக இருப்பதாக கருதிக் கொண்டிருக்கும் பலரும் கூட பாகுபலியை பாராட்டத்தான் செய்கிறார்கள். மக்கள் பலரும் பார்க்கத்தான் செய்கிறார்கள். என்ன இருந்தாலும் பாகுபலியின் வெற்றி வெற்றிதானே?
மக்கள் ஏன் பார்க்கிறார்கள்?
டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடும் மக்கள் அதிகார தோழர்களிடம், “ ஏம்மா நீ சொல்ற கஷ்டம் எங்களுக்கும் புரியுதும்மா! அதுக்கும் சேத்துத்தாம்மா குடிக்கிறோம்” என்று ஒரே போடாக போட்டு விட்டார்கள் மக்கள். மக்களே விரும்பிக் குடிக்கும் டாஸ்மாக் கடைகளை ஏன் எதிர்த்துப் போராடுகிறீர்கள் என்று கேட்பது, மக்கள் பார்க்கும் பாகுபலியை ஏன் விமரிசிக்கிறீர்கள் என்று கேட்பதோடும் பொருந்தும். பொதுவில் மசாலா படம் அல்லது கமர்சியல் படங்கள் ஓடுவதையோ, வெற்றிபெறுவதையோ பெரிய விசயமாக பார்க்கத் தேவையில்லை. ஏனெனில் அவைகளெல்லாம் கணநேர களிப்புக்களுக்காக விதிக்கப்பட்டவையே அன்றி ஆழ்ந்து தேய்ந்து ரசிப்பதற்கல்ல. அன்றாடம் உழைத்துக் களைக்கும் மக்கள் ஏன் குடிக்கிறார்களோ அதே போன்று கலகலப்பான படங்களையும் அப்படிப் பார்க்கிறார்கள். அந்த பார்வையை மாபெரும் மக்கள் ரசனையாக ஆய்வது அபத்தம்.

பாகுபலியை விமர்சிப்பவர்கள் மக்கள் மனதை புரிந்து கொள்ளாதவர்கள் என்கிறார் குங்குமம் ஆசிரியர் கே என் சிவராமன்
குங்குமம் பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான கே என் சிவராமன் பாகுபலியை விமரிசிப்பவர்கள் அனைவரையும் மக்களின் ரசனை அறியாதவர்கள் என்று ஆணித்தரமாக கூறுகிறார். தனது ஆணிக்காக அவர் சாதா, ஸ்பெஷல், மல்டிபிளக்ஸ், தெலுங்கு, இந்தி, அரக்கோணம், ஆந்திரா என்று பாகுபலியை விதவிதமாக பார்த்து வருகிறாராம். இது குறித்து ஒரு நெடுங்காவியம் ஒன்றும் எழுத இருக்கிறாராம். பாவம் அந்தக் காவியம்!
பாகுபலியை மனுதர்மம், இந்துத்துவம், எத்திக்ஸ் அற்ற படம், சினிமா கலையை கணக்கில் கொள்ளாத படம் என்று வரும் விமரிசனங்களையெல்லாம் சினிமாவை கற்க விரும்பும் இயக்குநர்கள் புறந்தள்ளிவிட்டு நேரடியாக திரையரங்கு சென்று மக்களிடம் கற்வேண்டும் என்று மாபெரும் மக்கள் சினிமா போராளியாக கீ போர்டுடன் போர் தட்டுகிறார் சிவராமன். திரையரங்கில் மக்கள் ஏன் கை தட்டுகிறார்கள். எதற்கு ஆர்ப்பரிக்கிறார்கள், ஏன் ஒன்றுகிறார்கள் என்றெல்லாம் ஆய்வு செய்வதே பலனளிக்கும்; மாறாக  புரியாத வார்த்தைகளைப் போட்டு கோட்பாட்டு புட்டு அவிக்கும் விமரிசகர்கள் ஏன் இந்த மக்கள் கல்வியை கற்க மறுக்கின்றனர் என்று வகுப்பு எடுக்கவும் செய்கிறார் குங்குமம் ஆசிரியர்.
உண்மையில் இது குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கிறது (ஸ்……அப்பாடா…. என்று தோன்றினாலும்.). அதை சுருக்கமாக பார்க்கலாம். கூடவே படத்தின் விமரிசனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
கோடை விடுமுறையில் பாகுபலி வெளியாகியிருக்கிறது. மாடுகளை வதைக்கும் பீட்டாவின் வதையால் முன்பே யானைகளோ இதர விலங்குகளோ இல்லாமல் சர்க்கஸ் மரித்து விட்டது அல்லது மரித்துக் கொண்டிருக்கிறது. வீடியோவிலும், குப்பை உணவகங்களிலும் தமது குதூகலத்தை தேடி அலையும் குழந்தைகளுக்கு பாகுபலி ஒரு விர்ச்சுவல் சர்க்கஸ் பரவசத்தை தருகிறது. அவை மலிவான கிராபிக்ஸே ஆனாலும் பிரம்மாண்டமான அரண்மனைகள், நீர் வெளிகள், அலங்காரப் படகுகள், யானைகள், பன்றிகள், குதிரைகள் அனைத்தும் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் ஈர்க்கின்றன. இவையெல்லாம் உண்மையில் பெரிய பிரச்சினையல்ல.

ஏதோ சில நூறு ரூபாயில் குடும்பத்துடன் ஒரு படம் பார்க்கலாம் என்ற விதி பாகுபலிக்கு சாதகம்
ஏதோ சில நூறு ரூபாயில் குடும்பத்துடன் ஒரு படம் பார்க்கலாம் என்ற விதி பாகுபலிக்கு சாதகம். அடுத்து மேற்கத்திய டைனோசர் வகைக் காட்சிகளில் இல்லாத நம்மூர் ராஜா ராணி மந்திரி சேனாதிபதி வகையறாக்கள், அச்சம் நாணம் வெட்கம் முதலான நம்மூர் காலால் கோலம் போடும் சரோஜாதேவி அபிநய அட்ராசிட்டிஸ்கள் போன்றவை ஒரு வகையான உள்ளூர் ஃபிளேவரைக் கொடுக்கின்றன.
இறுதியாக பாகுபலியில் காட்சிக்கு காட்சி, கதை ஓடும் பாதைக்கு பாதை – எங்கும் நிறைந்திருப்பது கலப்படமே அல்லாத அக்மார்க் அடிமைத்தனம். அடிமைத்தனம் என்றால் அதை ஏதோ வேண்டா வெறுப்பான ஒன்றாக மக்கள் கருதுவதில்லை. அப்பனின் ஆட்டத்தை எதிர்க்கும் மகன் நாளையே தனது அதிகாரத்தை ஏற்காத மகனை போட்டு மிதிக்கவே விரும்புகிறான். அம்மாவின் அறியாமையை எகத்தாளமாக பார்க்கும் மகள் நாளை தனது மகள் அப்படிப் பார்ப்பது குறித்து உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா என்றே பிலாக்கணம் வடிக்கிறாள். டீம் லீடரின் கேலிகளால் வெறுப்புக்குள்ளாகும் மென்பொருள் பொறியியலாளர் நாளையே தனது கேலிகளால் புதியவர்களை வெறுப்புக்குள்ளாக்குவதை மறக்காமல் செய்கிறார். ஆக அலுவலகம், குடும்பம், பொதுவெளி அனைத்திலும் அடிமைத்தனம் என்பது நீக்கமற நிறைந்துள்ளது. இதுதான் இன்றைய இந்தியாவின் தேசியப் பண்பு!

அனைத்திலும் அடிமைத்தனம், இதுதான் இன்றைய இந்தியாவின் தேசியப் பண்பு!
ஏதோ ஒன்றில் சுதந்திரத்தை விரும்புவது இருக்கலாமே தவிர ஒட்டு மொத்தமாக நமது சமூகம் நிலவுடமைச் சமூகத்தின் அடிமைத்தனங்களில்தான் அன்றாடம் உழல்கிறது. அதை உழல்வது என்று கூட எல்லா இடங்களிலும் சொல்லிவிடமுடியாது. அது ஒரு பாதுகாப்பு. பாகுபலியின் காலை நெற்றியில் வைத்து ஆயுசு பூரா உனக்கு அடிமை சேவகம் செய்வேன் என்று சத்யராஜ் கட்டப்பவாக சொல்லும் போதும் சரி, அவரது அடிமை உலகின் தளைகளில் இருந்து கொண்டு அவர் சொல்லும் ரம்ப வகை நகைச்சுவைகளை மக்கள் ரசிக்கும் போதும் சரி இந்த அடிமைத்தனத்தின் செல்வாக்கை தரிசிக்கலாம்.
ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணன் விழிகளை உருட்டி, குரலை உயர்த்தி பேசும் போதும் அப்படித்தான். தனது கோரிக்கையை அனுஷ்கா மறுத்தார் என்று படை எடுக்கச் சொல்லும் போதும் சரி, சொன்ன சொல்லை மறுத்தான் என்று பாகுபலியை பதவியிறக்கம் செய்யும் போதும் சரி, ராஜமாதவிற்காக சத்யராஜே பாகுபலியை கொல்லும் போதும் சரி, அனுஷ்காவின் சகோதரனை சதிவேலைக்கு பயன்படுத்தும் நாசரும் சரி, அனைத்துக் காட்சிகளிலும் நாங்கள் எல்லாம் உங்கள் மகிழ்ச்சி, இகழ்ச்சி, துன்பம், துயரம், திருமணம், அழுகை, அனைத்திற்காகவும் ஏங்கிக் கிடக்கும் பாவப்பட்ட ஜன்மங்கள் என்று மக்களாக நிற்கிறார்களே துணை நடிகர்கள் அவர்கள் கண்களில் வெளிப்படுவதும் அதே அடிமைத்தனம்தான் ……பாகுபலியின் அடிமைத்தன ஆல்பம் வெகு நீளமானது.
இந்த அடிமைத்தனம் குளோசப்பில் வந்தாலும் சரி, பிரம்மாண்டமான செட்டுக்களில் வந்தாலும் சரி, கம்யூட்டர் கிராபிக்சில் உப்பினாலும் சரி பாகுபலியின் ஒரே முதலும் கடைசியுமான உணர்ச்சி இதுதான். ஆயினும் இந்த அடிமை உணர்ச்சிக்கு இவ்வளவு செலவு செய்து படம் எடுக்கிறார்களே, படத்தை திட்டாதே என்று கூறும் சான்றோர்களும் கூட அதே அடிமைத்தனத்தின் பக்கம் நின்றே பாவம் பார்க்கிறார்கள். அய்யோ பாவம்.
திரிஷ்யம் – பாபநாசம் படத்தின் இறுதிக் காட்சியை நினைவுபடுத்துங்கள். மோகன்லாலும், கமலஹாசனும் அந்த பெண் ஐஜியுடம் பேசும் உரையாடல் நினைவிருக்கிறதா? அந்த அதிகாரியால் வளர்க்கப்பட்ட ஒரு பொறுக்கி பையன், தனது மகளிடம் வக்கிரமாக நடந்து கொண்டதும் அதை தடுக்கும் போக்கில் விபத்தாக அவன் கொல்லப்பட்டதையும் குற்ற உணர்வுடன் பேசுவார்கள். தமது குடும்ப நலன்தான் முக்கியம் என்ற சுயநலத்தினால் அப்படி நடந்து கொண்டதாகவும், அந்த பெண் அதிகாரிக்கு பெரிய மனசு என்றும் பேசுவார்கள்.
இதுவும் அடிமைத்தனத்திற்கு ஒரு நல்ல சான்று. ஒரு பொறுக்கி பையன் சாக நேரிட்டதற்கு தாங்கள் காரணமல்ல வளர்த்த நீங்கள்தான் காரணம் என்ற சமூக உண்மையை ஒரு மகனை இழந்த தாயாக சுருக்கிப் பார்ப்பதுதான் அக்மார்க் அடிமைத்தனம். அப்படிப் பார்த்தால் போரூரில் ஒரு சிறுமியை வதைத்துக் கொன்ற பொறுக்கி இளைஞனைக் கூட அவனது தாயாரின் நிலையில் இருந்து பார்த்தாலும், அல்லது ராஜபக்ஷேவை கூட அவரது அம்மாவின் நிலையில் இருந்து பார்த்தாலும் கமலோ இல்லை ஜெயமோகனோ குற்ற உணர்வு அடைவார்கள். ராஜபக்சேவையும் விடுதலை செய்வார்கள்.
இத்தகைய அடிமைத்தனத்தின் அலை வரிசையில் இன்றும் ஒட்டிக் கொண்டு இருப்பதால்தான் ஜப்பானில் ரஜினியின் முத்து படம் ஓடியது. பெரியோர் சொல்லைத் தட்டாதே, மூத்தோரை வணங்கு, அம்மா விரும்பியதை செய், அப்பா உத்திரவை மீறாதே, புரட்சித் தலைவி அமரும் கார் டயரை வணங்கு, தந்தி டிவி காமராமென் தலைமைச் செய்தியாசிரியர் பாண்டேவை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது, ரஜினி – கமல்களை சார் அடை மொழி இல்லாமல் கூப்பிடுவது சினிமா உலகில் தடை செய்யப்பட்டது என்று இந்த அடிமைத்தன இத்யாதிகள் அன்றாட வாழ்வில் இல்லாத இடமில்லை, நேரமில்லை.

யானை, பானை, பூனை, பன்றி என்று நம் மக்கள் சிஜியில் ரசித்து கடக்கிறார்கள் என்றால் இங்கே மக்களிடமிருந்து எதைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது?
பாகுபலியில் எரிச்சலூட்டும் அம்சமே மற்ற படங்களில் இலைமறைவாக வரும் நவீன அடிமைத்தனங்கள் இங்கே முழு அம்மணமாக ஆதிக்கம் செய்வதுதான். இதை உறுத்தலின்றி யானை பானை பூனை பன்றி என்று நம் மக்கள் சிஜியில் ரசித்து கடக்கிறார்கள் என்றால் இங்கே மக்களிடமிருந்து எதைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது சிவராமன்?
“மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று சிவராமன் மாவோ மொழியில் கூறுவது பிரச்சினைக்குரியது”…..என்கிறார் எழுத்தாளர் ராஜன் குறை. மக்களுக்கு கற்றுக் கொடுப்பதோடு மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் வேண்டும் என்றுதான் மாவோ சொன்னார். எதைக் கற்பது? எதைக் கற்றுக் கொடுப்பது?
பொதுவில் சொன்னால் முற்போக்கு – பிற்போக்கு, சரி – தவறு, ஜனநாயகம் – அடிமைத்தனம், சாதி மத நீக்கம் – சாதி மத வெறி, போராட்டம் – சமரசம் என்று அனைத்து கருத்துக்களிலும் உள்ள நேர்மறை – எதிர்மறை அம்சங்கள் மக்களிடம் கலந்தே இருக்கின்றன. இவற்றில் எதிர்மறை அம்சங்களை வளர்ப்பதையும், அவற்றின் ஆதிக்கத்திலேயே மக்களை வைத்திருப்பதையும் ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டு செய்கின்றன. ஆகவே முற்போக்கு அம்சங்களை மக்களிடம் பரவச் செய்வது என்பது ஒரு இனிய மாலைப் பொழுதில் பாகுபலியைப் பார்ப்பது போன்று அவ்வளவு எளிதல்ல.
மக்களிடமிருந்து கற்க வேண்டும் என்றால் சிவராமன் அவர்கள் டாஸ்மாக் போராட்டங்கள் நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். போர்க்குணத்துடன் இழப்புகளுக்கு அஞ்சாமல் களத்தில் நிற்கும் அந்தப் பெண்களிடம் பேச வேண்டும். செய்திகளில் பார்ப்பது போன்று இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அத்தனை எளிதில் நடந்து விடவில்லை. உண்மையில் இந்தப் போராட்டம்தான் அடிமைத்தனத்தற்கு எதிராக எளிய பெண்கள் நடத்தும் பெரும் சமூக நடவடிக்கை. இந்த சமூக மாற்றத்தை கற்றுணராத எவரும் சம காலத்தில் பத்திரிகையாளராகவோ இல்லை சினிமா இயக்குநராகவோ இல்லை இலக்கியவாதியாகவோ காலம் தள்ள முடியாது.
அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் பயப்படாமல் சிறை, அடக்குமுறைக்கு அஞ்சாமல் வீதிக்கு வந்து அப்படி போராடுவது என்பது ஒரிரவில் மாறிவிடவில்லை. அந்த துணிச்சலைப் பெறுவதின் பின்னே குடியால் குடும்பங்கள் இழந்த பெரும் சோகங்கள் இருக்கின்றன. இப்போதும் ஒரு போராட்டத்தை ஒடுக்குவதை அரசு மட்டும் செய்யவில்லை. அரசுக்கு ஆதரவாக ஓட்டுக் கட்சிகளின் உள்ளூர் தளபதிகள், பார் நடத்தும் பிரமுகர்கள், குடிப்பவர்கள் என்று பெரும் சமூகத் திரளே அணி வகுக்கிறது. டாஸ்மாக்கை உடைப்பதற்கு பின்னே ஒரு பெண், வீட்டிலும், சாதியிலும், உறவுகளிலும், தெருவிலும் பல்வேறு தடைகளை தாண்டியே வரவேண்டியிருக்கிறது.

மக்களிடம் இருந்து கற்க வேண்டுமென்றால் போராட்டங்களில் இருந்து கற்க வேண்டும்
குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்டுகொலையை அங்கே இருக்கும் இந்துக்களில் பெரும்பான்மையினர் எதிர்க்கவில்லை. அவர்கள் வாளெடுத்து வெட்டாமல் இருக்கலாம். இதனாலேயே குஜராத்தின் பாஜக மற்றும் மோடியின் செல்வாக்கை மக்கள் திரளின் பொதுப்புத்தியை கற்றுக் கொண்ட திறமைசாலிகள் என்று பாராட்ட முடியுமா? இல்லை அந்த இந்துக்களைத்தான் மக்களின் விருப்பம் என்று மன்னிக்க முடியுமா? இளவரசனின் ஊரை எரித்தது சாதி வெறியே ஆனாலும் பெருந்திரளான மக்களது நடவடிக்கை என்று விட்டு விடமுடியுமா?
எது வெற்றி பெறும், எது சுலபமாக நடந்தேறும், எது காரிய சாத்தியமானது என்று ஒரு சமூக நடவடிக்கையை அளவிட முடியாது. அப்படி அளவிட்டால் ஹிட்லர், மோடி, ராஜபக்சே போன்றோரை மாபெரும் மக்கள் திரள் தலைவர்கள் என்றுதான் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் அதே ஹிட்லரை ஆளாக்கிய ஜெர்மனி நாடு இன்று இரண்டாம் உலகப்போரின் முடிவை ஹிட்லரிடமிருந்து விடுதலை பெற்ற நாளாக கொண்டாடுகிறது.
ஏ -ஒன் குற்றவாளியான ஜெயலலிதாவின் படங்களோ சமாதியோ இன்றும் போற்றப்படும் தமிழகத்தில்தான் மெரினா போராட்டம் ஏற்படுத்திய எழுச்சியும் நடந்தது. உண்டி கொடுத்தார், நீர் கொடுத்தார் என்று ஜெயாவை ஆதரிக்கும் ஒரு அப்பாவிதான் மெரினா போராட்டத்தையும் தனது அரசுக்கெதிரான கோபத்தின் நீட்சியாக ஆதரிக்கிறார். இதில் அந்த அப்பாவியிடம் அடிமைத்தனத்தை நீக்குவதே நம் முன் உள்ள பிரச்சினையே அன்றி அந்த அடிமைத்தனத்தை யதார்த்தம் என்று கண்டு கொள்ளாமல் விடுவது அல்ல.
“பாகுபலி ஒரு சரித்திரப் படமோ இல்லை ஃபேன்டசி படமோ அல்ல. அது இன்ன வகையென்று கூற முடியாத படி பல தவறுகள் உள்ள ஒரு படம். அந்த தவறுகள் பாத்திரச் சித்தரிப்பிலும், கதையோட்டத்திலும் பல நெருடல்களை ஏற்படுத்தியிருக்கின்றன” என்கிறார் எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ்.
சினிமாவை இன்ன வகை அல்லது ஒரு ஜேனர் என்று நாம் பிரிப்பது ஒரு வசதிக்காக மட்டுமே. சினிமாக் கலை வளர வளர அதனை நாடகம், திரில்லர், அறிவியல் புனைவு, ஃபேன்டசி என்று பிரிப்பது அந்த கதைக் களனில் நின்று கொண்டு ரசனையை மேம்படுத்தப் பயன்படுவது உண்மைதான். ஆனால் அனைத்து வகைப்படங்களிலும் மனித சமூகத்தின் வாழ்வுதான் விதவிதமான கலவைகளில் உணர்த்தப்படுகின்றது. ஆதலால் சினிமா ஜேனர்களை அறிவதற்கு முன் சமூகவியல் எனும் கல்வியையும் பயில வேண்டும்.
அப்போதுதான் ஒரு படத்தின் கதையோட்டத்திலும் பாத்திரங்களிலும் ஏற்படும் நெருடல்களை யதார்த்த உலகின் உணர்ச்சி மற்றும் உணர்வு ரீதியான போராட்டங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும். சரியாகச் சொன்னால் கோட்பாடு என்னும் ஆய்வியல் துறை மனித சமூகம் மற்றும் இயற்கை பற்றிய விதிகளை அதாவது இயக்கத்தில் இருக்கும் மாற்றத்தை புரிய வைக்க முயற்சிக்கின்றன. கோட்பாடுகளில் எது சரியான துல்லியமான கோட்பாடு என்பது இயற்கை – மனிதன் – சிந்தனை மூன்றின் விதிகளை அறிவியல் சோதனைகளோடு நிரூபிக்கும் வல்லமை கொண்டது. அதை மார்க்சியம் என்று நாம் அழைக்கின்றோம். மறுப்பவர்கள் அந்த பரிசோதனைகளில் தோற்றுவிட்டவர்கள்.
அதே நேரம் ஒரு கோட்பாட்டினை யதார்த்தம் சாராது பிரயோகிக்கும் போது அது தனது ஆய்வில் தோற்றுப் போகிறது. கோட்பாடு என்பது அறிவியலே ஆனாலும் வாழ்வு குறித்து பேசும் போது அது அறிவியலை மீறாத கலையாக பிரசவிக்கிறது. அப்போதுதான் அந்தக் கோட்பாடு அறியாத மக்களும் கூட அந்தக் கோட்பாட்டாளர் கூறும் விமரிசனத்தை ஏற்கிறார்கள். அம்மக்கள் அறிந்த வாழ்வின் சரி தவறுகளை அவர்களின் உலகிலிருந்தே புரிய வைக்கும் போது கோட்பாடு என்று நாம் சொல்லாமலேயே கோட்பாட்டின் பயன்கள் நடந்தேறும்.
கருந்தேள் ராஜேஷ் இந்தப் படத்தின் பிரச்சினையாக என்ன வகைப் படம் என்று ஆரம்பிக்காமலேயே பாகுபலியின் அபத்தத்தை கண்டு பிடிக்க முடியும். பாத்திரங்களின் நெருடல் என்று அவர் சரியாகவே கூறினாலும் அது படம் அல்லது திரைக்கதையின் தவறுகளாக கூறும் போது சிவராமன் போன்றோர் அதை கோட்பாடாக தனிமைப்படுத்த காரணமாகிறது. இடையில் சிலர் அமெரிக்க படங்களை ஆராதிக்கும் காலனிய மனோ நிலையே பாகுபலி போன்ற சுதேசி படங்களை நிராகரிக்கிறது என்று ஐ ஃபோன் மூலமாக ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்.
உள்நாடு வெளிநாடு என்ற பதமே பொது நலன் – மக்கள் நலன் – உலக மக்களது நலன் என்ற அடிப்படையில் தோன்றும் போதுதான் உள்நாட்டிலேயே பெரும்பான்மை மக்களின் நலன்களை கொண்டிருக்கும். அமெரிக்காவில் ஒபாமாவின் மகளே ஆனாலும் கல்லூரி படிப்பின் போது பகுதி நேர வேலை செய்ய வேண்டும் என்ற சமூகப் பண்பை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே அன்றி அமெரிக்கா என்பதால் எதிர்ப்பது அறிவுடமையாகாது. அந்த வகையில் மாட்ரிக்ஸ் படத்தோடு ஒப்பிடும் போது பாகுபலி ஒரு குப்பை என்று சொல்வதற்கு பயப்படத் தேவையில்லை.
பாகுபலி 2 இன்றும் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் தற்போது வெளியாகும் உதயநிதி ஸ்டாலினின் படத்திற்கே போதிய அரங்குகள் இல்லையாம். இந்நிலையில் “திறப்பு விழா” என்று ஒரு படம் நாளை வெளியாக இருக்கிறது. அதற்கு ஒரு சில திரையரங்குகள் கிடைத்தாலே அதிகம் என்று அந்த படக்குழு நண்பர்கள் கூறினார்கள்.
இந்தப் படம் டாஸ்மாக் பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஜெயாவின் முந்தய ஆட்சிக்காலத்திலயே தயாரானாலும் மற்ற சிறு முதலீட்டுப் படங்களைப் போல பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனது ஊரில் டாஸ்மாக்கால் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை தயாரித்தார். இன்று இப்படத்தை வெளியிடுவோரும் கூட அதே பாதிப்பினால் மக்களுக்கு நல்ல விசயம் போய்ச் சேரவேண்டும் என்று நிச்சயமான நட்டமென்று தெரிந்தே வெளியிடுகிறார்கள்.
இந்தப் படத்தின் முழுக்கதையும் டாஸ்மாக் பிரச்சினைதான். அதை ஆண்கள், கணவர்களின் குடிப் பிரச்சினையாகவும், பெண்கள் அதை எதிர்த்து அமைதி வழிப் போராட்டம் நடத்துவதுமாக காட்டுகிறார்கள். படத் தயாரிப்பு பட்ஜெட் இன்ன பிற வரம்புகளால் கொஞ்சமோ நிறையவோ அமெச்சூராக இருந்தாலும், அரசியல் ரீதியில் முதிர்ச்சியற்ற முறையில் இருந்தாலும், ஏன் சில அம்சங்களில் தவறாகவே இருந்தாலும் முழுப்படமும் டாஸ்மாக்கின் பாதிப்பு என்ற கதைக்களனை விட்டு மாறவில்லை.
மது பாதிப்பு, குடும்பங்கள் பாதிக்கின்றன, கடையை மூடுங்கள் என்று எளிய முறையில் மட்டுமே சொல்லும் இப்படம் பலருக்கும் பிடிக்காமல் போகலாம். ஏனெனில் மேக்கிங், கலை, தரம், சிஜி, இன்னபிற இத்யாதிகள் இப்படத்தில் இல்லை.
ஆனால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடும் பெண்களுக்கு இப்படம் பிடிக்கும். அப்பெண்களோடு நிற்கும் யாருக்கும் படம் பிடிக்கும்.
உங்களுக்கு?

கருத்துகள் இல்லை: