செவ்வாய், 9 மே, 2017

டான் அசோக் :தமிழர்களிடம் ஒரு மிகப்பெரிய உளவியல் பிரச்சினை இருக்கிறது.

தமிழர்களிடம் ஒரு மிகப்பெரிய உளவியல் பிரச்சினை இருக்கிறது. "இந்தி படிக்காததால் தான் நீ இப்படி இருக்கிறாய்," என்றாலும் நம்புகிறார்கள். "நீட் தேர்வினால் உன் கல்வித் தரம் உயரும்," என்றாலும் நம்புகிறார்கள். சரி இதையெல்லாம் யார் சொல்கிறார்கள் எனப் பார்த்தால் சாலையே இல்லாத மாநிலங்களையும், சோறே இல்லாத ஊர்களையும், பிழைப்பே இல்லாத நகரங்களையும் கட்டமைத்து வைத்திருக்கும் இந்திக்காரர்களும், அவர்களுக்கு இங்கே கரஸ்பாண்டன்ஸில் வேலை செய்யும் நூலணி-யாட்களும்.
தமிழர்கள் முதலில் தங்கள் தாழ்வுமனப்பான்மையில் இருந்து வெளிவர வேண்டும். நம்மூரில் பிழைப்புக்காக பானிபூரி விற்கிறவன் கூட இந்தி மட்டுமே தெரிந்துகொண்டு உயர்மனப்பான்மையுடன் விற்கிறான். ஆனால் நாமோ இந்தியாவில் ஆங்கிலத்தை தக்கவைத்து ஐ.டி புரட்சி நடக்க காரணமாக இருந்தவர்கள் என்றாலும், பிற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் பல பத்தாண்டுகள் முன்னோக்கி இருந்தாலும், ஆங்கிலம் எனும் உலகப்பொதுமொழியில் புலமையோடிருந்தாலும் பொய் பிரச்சாரங்களின் வாயிலாக புகுத்தப்பட்ட தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறோம்.
கல்வி, மருத்துவம், உட்கட்டமைப்பு என எல்லா துறைகளிலும் வட மாநிலங்கள் எல்.கே.ஜி என்றால் நாம் பன்ணிரண்டாம் வகுப்பு.
நமக்கு அறிவுரை சொல்லும் தகுதி யாருக்காவது உண்டென்றால் கேரளாவை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். மற்றபடி மத்தவனுக்கெல்லாம் நீச்சலே தெரியாது. ஆனால் நமக்கு பயிற்சி அளித்து ஒலிம்பிக் நீச்சலில் தங்கமெடல் வாங்க வைக்கிறேன் என புதிது புதிதாக கிளம்பிவருகிறார்கள். நம் ஆட்களும் கொஞ்சம் கூட 'காரண' அறிவே இல்லாமல் ஒத்தூதுகிறார்கள். வாழ்க்கைத்தரத்தில் நம்மைவிட படுபாதாளத்தில் இருப்பவர்களால் நம் தரத்தை எப்படி உயர்த்த முடியும்? ABCD தெரியாதவர்கள் எப்படி MA ஆங்கில வகுப்பு எடுக்க முடியும்? அதனால்தான் நம்மை அவர்கள் தரத்திற்கு கீழே இழுக்கிறார்கள். அதில் ஒரு அங்கம்தான் நீட் தேர்வு எனும் பச்சை பித்தலாட்டம்.
இந்த பித்தலாட்டத்திற்கு தரம், அறிவு என்றெல்லாம் பெயர் வைத்துப் புகழ்வது உழைத்துப் படித்து முன்னேறும் தமிழ் மாணவர்களுக்கும், தமிழச்சமூகத்திற்கும் செய்யும் துரோகமேயன்றி வேறில்லை.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை: