சனி, 13 மே, 2017

மைத்திரேயன் (பாஜக உளவாளி) :எடப்பாடி ஆட்சி தானாகவே கவிழும்; ஓபிஎஸ் மீண்டும் முதல்வராவார்


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தன்னுடைய பாரம் தாங்காமல் தானே விரைவில் கவிழும். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார் என அதிமுக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்தார். ஓபிஎஸ் அணி ஆதரவாளரான அவர் இன்று (சனிக்கிழமை) சென்னை தியாகராய நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு விரைவில் கவிழும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார். தமிழகத்தில் சட்டமும் இல்லை; ஒழுங்கும் இல்லை. மாநிலத்தில் சட்டமும் ஒழுங்கும் தேடக்கூடிய நிலையில் உள்ளது. சட்டம் ஒழுங்கை மட்டும் முன்வைத்து சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா என்றளவில்தான் இருக்கிறது. பல்வேறு முதலீட்டாளர்களும் தமிழகத்தில் இருந்து வெளியேறுகின்றனர். தமிழகத்தில் சில நாட்களாகவே மர்ம மரணங்கள் நடைபெறுகின்றன. நாமக்கல்லில் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.

தமிழக மக்களை வாட்டி வதைக்கும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடப்பாடி தலைமையிலான அரசு எடுக்கவில்லை.
தமிழக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அமைச்சர் சரோஜா பெண் அதிகாரியை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. அமைச்சர் காமராஜுக்கு உச்ச நீதிமன்றமே குறிப்பாணை கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளது. பழனிசாமி தலைமையிலான அரசில் அமைச்சர்கள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையின் கீழ் அமைச்சர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டனர். ஆனால், இப்போது எல்லோருமே தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.
எனவே, இந்த ஆட்சி தன்னுடைய பாரம் தாங்காமலேயே கவிழும். சட்டப்பேரவைத் தேர்தல் வெகு விரைவில் வரும். அதில் ஓபிஎஸ் வெற்றி பெறுவார்" என்றார்.
கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே..
பேச்சுவார்த்தைக்கான அடிப்படை நிபந்தனைகளை ஓ.பன்னீர்செல்வம் விதித்துள்ளார். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அவர் கூறினார் tamilthehindu

கருத்துகள் இல்லை: