வியாழன், 22 செப்டம்பர், 2016

வாசன் வந்தால் வெளியேறுவோம்-ஸ்டாலினிடம் திருநாவுக்கரசர்!


மின்னம்பலம்.காம் :  .
‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பு ஏற்றதிலிருந்து தலைவர்கள் ஒவ்வொருவராகச் சந்தித்து ஆசி பெற்று வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தது பற்றியும் அப்போது அவர் சொன்ன புகார்கள் பற்றியும் நேற்று டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தேன். இந்த சூழ்நிலையில் இன்று ரஜினிகாந்த்தை சந்தித்தார். திருநாவுக்கரசரும், ரஜினியும் நீண்டநாள் நண்பர்கள். அந்த அடிப்படையில்தான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாக திருநாவுக்கரசர் சொன்னார். இருவரும் நீண்டநேரம் பழைய விஷயங்களை எல்லாம் பேசியிருக்கிறார்கள்.
நேற்று இரவு 7.50க்கு ஸ்டாலின் வீட்டுக்கு திருநாவுக்கரசர் சென்றார்.
கருணாநிதியிடம் ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலாளர்பற்றி, திருநாவுக்கரசர் புகார் சொன்னதைப் பற்றி நான் சொல்லியிருந்தேன் அல்லவா… இந்தத் தகவல் ஸ்டாலின் கவனத்துக்கும் போயிருக்கிறது. ஆனாலும் ஸ்டாலின் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஸ்டாலினிடம் பேசும்போது திருநாவுக்கரசர் சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசிவிட்டாராம். ‘இரண்டு நாட்களுக்குமுன்பு வாசன் உங்களை வந்து சந்தித்தார். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வாசன் உங்களுடன் பேசி வருகிறார். இந்தத் தகவல் காங்கிரஸ் மேலிடத்துக்கும் போயிருக்கிறது. டெல்லியிலிருந்து என்னுடன் மேலிடத் தலைவர்கள் பேசினார்கள். வாசன் நம் கூட்டணிக்குள் வருவதில் டெல்லி தலைவர்கள் யாருக்கும் விருப்பம் இல்லை. காங்கிரஸ் பற்றி புகார் சொல்லிவிட்டுத்தான் வாசன் வெளியேறினார். அவரை மீண்டும் ஒரே கூட்டணியில் சேர்த்துக் கொண்டு, ஒன்றாகக் கைகோர்த்து நிற்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. அதனால் திமுக கூட்டணியில் வாசன் வேண்டாம் என்பதை உங்களிடம் தெளிவாக சொல்லச் சொன்னார்கள்!’ என்று சொல்லியிருக்கிறார் திருநாவுக்கரசர்.
அதற்கு ஸ்டாலின், ‘தேர்தல் சமயத்தில் இதுபோல கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து சந்திப்பது இயல்புதானே… அப்படித்தான் அவர் வந்தார். பேசினார். நாங்கள் இன்னும் எதுவும் முடிவு எடுக்கவில்லை’ என்று சொன்னாராம். திருநாவுக்கரசரும் அத்துடன் விடவில்லை. ’வாசன் வேண்டாம் என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருக்கிறது. நீங்கள் முடிவு எடுப்பதற்குமுன்பு இதை உங்களிடம் சொல்ல வேண்டும் என்பதால்தான் சொன்னோம். ஒருவேளை, வாசனை நீங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என நினைத்தால் காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இருக்காது என்பதையும் டெல்லியிலிருந்து உங்களிடம் சொல்லச் சொன்னார்கள்’ என்று ஸ்டிராங்காக சொல்லிவிட்டாராம்.
இதை ஸ்டாலின் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘நாங்க அது சம்பந்தமாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவே இல்லை. அவசரப்பட்டு எதுவும் பேச வேண்டாம். நீங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்!’ என்று சொல்லி, அந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டார்.
இந்தத் தகவலை ஸ்டாலின் உடனடியாக கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். ‘நமக்கு வாசனா… காங்கிரஸா என்று கேட்டால், காங்கிரஸ்தானே முக்கியம். அதனால் வாசனிடம் இப்போது எந்த உறுதியும் கொடுக்க வேண்டாம். பிறகு சொல்கிறோம் என்று மட்டும் சொல்லி வைக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார் கருணாநிதி. காங்கிரஸைப் பொருத்தவரை பெரும்பாலும் திமுக சொல்வதைக் கேட்கும். ஆனால் வாசன் விஷயத்தில் அதிரடியாக இப்படி ஒரு முடிவை எடுக்கும் என்பதை அவர்கள் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. வாசனிடம் என்ன சொல்வது என்ற யோசனையில் இருக்கிறார் ஸ்டாலின்.” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து, ‘திருநாவுக்கரசருக்கும் வாசன்மீது ஏதோ கோபம் இருப்பதுபோலவே தெரிகிறது என்று கமெண்ட்டில் போட்டது.

(முகநூலில் வாசன் வெளியிட்ட அறிவிப்பு)
பதிலை ரிப்ளைஸில் போட்டது ஃபேஸ்புக். “அது தெரிந்ததுதானே. நானே அதுபற்றி தொடர்ந்து சொன்னபடிதானே இருக்கிறேன். வாசனை எப்படியாவது காங்கிரஸ்க்கு அழைத்துவந்துவிட வேண்டும் என முயற்சி செய்தவர் திருநாவுக்கரசர். ஆனால் அது முடியவில்லை. தான் சொல்வதை அவர் கேட்கவில்லை என்ற கோபம் திருநாவுக்கரசருக்கு இருக்கவே செய்கிறது. அதன் வெளிப்பாடுதான் இது எல்லாமே!”
’உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நிறைய தகவல்கள் வந்தபடியே இருக்கின்றன. அதை நாளை சொல்கிறேன்!’ என்ற சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: