வியாழன், 22 செப்டம்பர், 2016

கண்ணகி நகர் போலீஸ் அழைத்து சென்ற வாலிபர் மரணம்

ஆலந்தூர் துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் திடீரென இறந்தார். இதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த சினேகலதா (வயது 24) என்பவர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18-ந் தேதி இரவு சினேகலதா, மேட்டுக்குப்பம் சக்தி சீனிவாசன் தெருவில் நடந்து சென்றார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் திடீரென சினேகலதாவை வழிமறித்து அவர் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
கண்ணகை


அதை தடுத்த சினேகலதாவை அந்த கும்பல் தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்க வந்த வியாபாரி சேகரை கத்தியால் வெட்டியதில் அவரது காது துண்டானது. பின்னர் அந்த கும்பல் சினேகலதாவிடம் இருந்து சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த இருவரும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்களை பிடிக்க அடையாறு துணை கமிஷனர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

வாலிபர் சாவு

இந்த நிலையில் பெண் என்ஜினீயர் சினேகலதாவிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்ட 2 பேர் நீலாங்கரையில் உள்ள ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்து இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த அருண் என்ற அருணாசலம் (22), மீன் கார்த்திக் (22) ஆகிய 2 வாலிபர்களை தனிப்படை போலீசார் விசாரணைக்காக துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருந்த போது மீன் கார்த்திக்கிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு மீன் கார்த்திக் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

உறவினர்கள் சாலை மறியல்

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீன் கார்த்திக்கின் உறவினர்கள் துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மீன் காா்த்திக்கை போலீசார் அடித்ததில்தான் இறந்துவிட்டார். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீஸ் நிலையத்தில் வைத்து மீன் கார்த்திக்கிடம் விசாரணை நடத்திய போது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு மீன் கார்த்திக் இறந்துவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

போலீஸ் மீது கல் வீச்சு

ஆனால் அதை ஏற்காமல் மீன் கார்த்திக்கின் உறவினர்கள் கண்ணகி நகர் போலீஸ் நிலையம் அருகேயே நின்று கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லும்படி விரட்டினர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், போலீசாரை நோக்கி கற்களை வீசினார்கள்.

அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனங்கள் மீது சிலர் பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியதாகவும் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் வாகனங்கள் மீது விழாமல் கீழே விழுந்ததால் வாகனங்களும் சேதம் அடையவில்லை.
இதனால் கண்ணகி நகர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

மாஜிஸ்திரேட்டு விசாரணை

மேட்டுக்குப்பத்தில் ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று பெண் என்ஜினீயரிடம் சங்கிலி பறிக்கும் போது அந்த பெண்ணையும், தடுக்க வந்த வியாபாரியையும் தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரிக்கப்பட்டது. அப்போது மீன் கார்த்திக் என்பவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. வாலிபரிடம் விசாரணை நடத்திய போலீசார் மீது துறை ரீதியான விசாரணை நடக்கும். போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் இறந்துவிட்டால் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்துவார். எனவே இதில் தவறு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்

இந்த நிலையில் தென்சென்னை இணை கமிஷனர் அன்பு துரைப்பாக்கம் கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், துரைப்பாக்கம் குற்றப்பிரிவு ஏட்டு விஜயகுமார் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்   டைல்ய்தந்தி.com

கருத்துகள் இல்லை: