வெள்ளி, 23 செப்டம்பர், 2016

சசிகுமார் கொலை ... கோவையில் கலவரம் ! பேருந்துகள் கடைகள் மீது ரவுடிகள் தாக்குதல் .. இந்து முன்னணியினர் அட்டகாசம்!


தொழில் நகரமான கோவை, திருப்பூர் முழுவதுமாக முடங்கியுள்ளது. இந்து முன்னணிப் பிரமுகர் ஒருவரை நேற்று இரவு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்தது. இந்தச் செய்தியை அறிந்துவந்த இந்து முன்னணி தொண்டர்கள் நேற்று இரவு முதலே வன்முறைகளில் இறங்கிவிட்டார்கள். கண்ணில் கண்ட அரசுப் பேருந்துகள்மீது கல்வீசித் தாக்க பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இன்று காலை ஏழு மணி முதல் கோவை, திருப்பூரில் ஒட்டுமொத்த பேருந்துகளும் நிறுத்தப்பட்ன, பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. பின்னலாடை நிறுவனங்களும் வர்த்தகமும் நிரம்பிய திருப்பூரில் கடைகள் தாக்கப்பட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் திருப்பூரில், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கருதும்நிலையில், இந்த கொலையை சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களே செய்தார்கள் என்ற செய்திகள் பரவிக் கிடப்பதால் கலவர அபாயம்கொண்ட கோவையில் சிறுபான்மை மக்களான முஸ்லீம்கள் வீடுகளுக்குள் முடங்கியிருகிறார்கள்.



இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன் ஹால் நோக்கி ஊர்வலமாகச் சென்றவர்கள், சாலையின் இருபுறமும் இருந்த கடைகள்மீது தாக்குதல் நடத்தினர். ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என கண்ணில்பட்டவை எல்லாவற்றையும் தாக்கினர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் சூழலும் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல் வீசித் தாக்குதல் நடத்திக்கொண்டனர். இதில், போலீஸ் ஏட்டு உட்பட சிலர் காயமடைந்தனர்.

இதையடுத்து, போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சசிக்குமார் சடலம் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. மாநகரச் சாலைகளில் 10 கி.மீ. தூரம் சசிக்குமாரின் உடல் ஊர்வலமாக அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. உடல் செல்லும் வழியெங்கும் பூட்டியிருந்த கடைகள் அனைத்தும் அடித்து உடைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் பங்கேற்றனர். கோவையில் எழுந்துள்ள இந்த பதட்டநிலையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர சமூக ஆர்வலர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: