விகடன்.காம் : சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் கையில் புத்தகத்தை
வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆயுதம் வைத்திருப்பது சமீபகால டிரெண்ட்டாக
இருக்கிறது. சென்னையில் சில கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட் தல பிரச்னை
தலைவிரித்தாடுகிறது. இதில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பதுண்டு.
போலீஸாரும் மாணவர்கள் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்தாலும் அது தொடர்கதையாகி
வருகிறது. கல்லூரி வளாகத்திலேயே கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை மறைத்து
வைத்திருக்கும் நிலையும் உள்ளது.
இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது போலீஸாரும் கவனமாகவே செயல்படுகின்றனர். மாணவர்கள் பிரச்னை என்பதால் அது பலநேரங்களில் பூதாகரமாக வெடித்ததுண்டு. இன்று காலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் சிலர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் கல்லூரிக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் கல்லூரி முதல்வர் காளிராஜ், போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஈடுபட மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்தது தெரியவந்தது.
இதனிடையே, இந்த விவகாரத்தில், கல்லூரியில் இருந்து 70 மாணவர்களை அதிரடியாக இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக