ஞாயிறு, 1 மே, 2016

தூத்துக்குடி மேயர் அ.தி.மு.க.,வில் நீக்கப்பட்டது ஏன்? அந்தோணி கிரேஸ்..

துாத்துக்குடி;துாத்துக்குடியில் அ.தி.மு.க., மேயராக இருந்த அந்தோணி கிரேஸ் அ.தி.மு.க., கட்சியின் அடிப்படை உறுப்பினர். கட்சிப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நீக்கத்திற்கு பின்னணி தகவல்கள் வெளிவந்துள்ளன. துாத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்த சசிகலாபுஷ்பா, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதால், இடைத்தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட மகளிரணி இணை செயலாளர், மற்றும் பொதுக்குழு உறுப்பினரான அந்தோணி கிரேஸ் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு அ.தி.மு.க., மேயரானார்.இவர் மேயரான பின் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். குடி நீர் பிரச்னையில் முறையாக செயல்படவில்லை என, அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தார்.   உரிய சத விகிதத்தை உரிய இடத்திற்கு ஒழுங்காகக் கட்டவில்லை.
இதில் மேயர் அந்தோணி கிரேஸ் மீது புகார் சென்றது. தற்போதைய எம்.எல்.ஏ., சி.த.செல்லப்பாண்டியனையும் அனுசரித்து செல்லவில்லை. இவர் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இவரது மகன் கவியரசு நிழல் மேயராக செயல்பட்டு வந்தார். அனைத்து பணிகளிலும் ஊழல் செய்து வந்தனர்.

மாநகராட்சி காலிப்பணியிடங்கள் நிரப்புவதில், பலரிடம் பணம் வசூல் செய்த கவியரசு பணி நியமனம் செய்ய முடியவில்லை. காரணம் மாநகராட்சியில் உள்ள பணி நியமனக்குழு ஒப்புதல் வழங்கவில்லை.
மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கப்பட்டது. பணி நியமனம் பெற்றவர்களிடம் தனக்கு சேர வேண்டிய பணத்தை வழங்க வேண்டும் என, கட்டாயப்படுத்தி வந்தனர். இது மட்டுமல்லாமல் மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்தனர்.

மாநகராட்சிப்பகுதியில் தனி ராஜாங்கமே செய்து வந்தனர். அரசு மருத்துவமனையில் சைக்கிள், இரு சக்கரவாகனங்கள் இலவசமாக நிறுத்தி வந்தவர்களிடம், கட்டணம் வசூலிக்க முற்பட்டனர். இது கடும் எதிர்ப்பு மக்களிடையே ஏற்பட்டதால், அதை நிறுத்தியவர்கள், மீண்டும் வாகன காப்பக வசூலை துவக்கினர்.

வெள்ளம் மாநகராட்சி பகுதிகளில் பாதிக்கப்பட்ட போது முறையாக நடவடிக்கை எடுத்து பணிகளை துரிதப்படுத்தவில்லை. வெள்ள நிவாரணப்பணிகளில் அதிகளவில் ஊழலில் ஈடுபட்டனர். இதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். பல இடங்களில் மேயர் அந்தோணி கிரேஸ்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு:தற்போது துாத்துக்குடியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் எம்.எல்.ஏ., சி.த.செல்லப்பாண்டியன் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடி நீர், சாலை வசதி சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு காரணமாக பாதிக்கப்பட்டார். மேயர் அந்தோணி கிரேஸ் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை, குற்றச்சாட்டு கட்சித்தலைமைக்கு சென்றது.

முகம் சுளிக்க வைத்த மேயர்:நடிகை விந்தியா பங்கேற்ற பிரசார கூட்டத்தில், பேசத்தெரியாமல், அபாசமாகவும், அனைவரும் முகம் சுளிக்கும் விதமாக பேசினார். கூட்ட மேடையில் இருந்தவர்களே நீங்கள் பேசியது போதும், என்று சொல்லும் அளவிற்கு நடந்து கொண்டார்.

தி.மு.க.,வுடன் கூட்டணி;தி.மு.க., மாவட்ட செயலாளர் பெரியசாமியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, மறைமுகமாக அ.தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக வேலை செய்தார் என்ற குற்றச்சாட்டுகளை கட்சியினரே கட்சித்தலைமைக்கு அனுப்பியுள்ளனர். இது போன்று மேயர் அந்தோணி கிரேஸ் மீது தொடர்ந்து புகார்கள் சென்றதாலும், செயல்படாத நிலையில் இருந்ததாலும், கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.மேயர் பதவியை பறிப்பது தேர்தல் நேரம் என்பதால் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், என்பதால் கட்சிப்பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: